Published:Updated:

ஏமன் போர்: சவுதி அரேபியாவுக்கான ஆதரவை வாபஸ் வாங்கும் அமெரிக்க பைடன் அரசு - என்ன நடக்கிறது?

ஏமன் கொடி
ஏமன் கொடி ( AP / Hani Mohammed )

பைடனின் ஆட்சிக் காலத்தில் சவுதி அரேபியாவுடன் மட்டுமல்ல, பிற மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய அமெரிக்காவின் போக்கிலும் மாறுதல்கள் இருக்குமா?

ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அவர் வெளியிடப்போகும் அறிவிப்புகள், வெளியுறவுக் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த முக்கியமான ஒரு அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டிருக்கிறார்.

பைடனின் முடிவுகள் டிரம்ப்பின் முடிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என அனைவருக்கும் தெரிந்திருந்தது. பைடனின் சமீபத்திய அந்த முடிவு அதற்குச் சாட்சியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பைடன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான ஒன்று, ஏமன் போருக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவைத் திரும்ப பெறுவது என்பது. கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்குக் காரணமான, பல குழந்தைகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் பட்டினியால் வாடுவதற்குக் காரணமான அதே ஏமன் போருக்குத்தான் அமெரிக்கா ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

`போரை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. அதுதானே செய்தி...’ என்று நீங்கள் கேட்டால், ஆம், அதுதான் இதில் தெரியக்கூடிய முதன்மைச் செய்தி, ஆனால் பின்னணியில் இதற்குக் கிளைகளாகப் பல செய்திகள் மறைந்திருக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் நாம் ஏமன் போர் குறித்துப் பேச வேண்டும்.

ஏமன் உள்நாட்டுப் போர்

ஏமனின் உள்நாட்டுப் போர் என்பது, சவுதி தலைமையில் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் ஏமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நடந்துவருகிறது. இதில் சவுதி அரேபியாவின் எதிரி நாடான இரான், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறது. அமெரிக்கா இதில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவளித்துவருகிறது. இருப்பினும், இது மறைமுகமாக இரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு நடக்கும் போராகவே பலரால் கருதப்படுகிறது.

இந்தப் போரின் ஆணிவேரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்காலம் இரானின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே குறித்துப் பேச வேண்டும். 1990-ம் ஆண்டிலிருந்து ஏமனின் அதிபராக இருந்த இவர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற `அரபு வசந்தம்` என்று கூறப்படும் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் முயற்சியில் புதிய அதிபராக மன்சூ ஹடி பதவியேற்றார். அதேசமயம், தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக ஏமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் நினைத்தார்கள். ஏமனில் நடைபெற்ற புரட்சியில் பங்கேடுத்து, சலேவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.

ஏமன்
ஏமன்
AP/ Hani Mohammed

ஆனால் புதிய ஆட்சியின் மீது இருந்த அதிருப்தியில் ஒருகட்டத்தில் சலேவுடன் இணைந்தார்கள். பின்னாளில் அவர் தன் நிலையை மாற்றுவதாகக் கூறியவுடன், அவரைக் கொன்றுவிட்டார்கள் இது வேறு ஒரு கிளைக்கதை.

மீண்டும் ஏமன் போருக்கு வருவோம். 2014-ம் ஆண்டு புதிய அதிபரான ஹடிக்குப் போர்க்கொடி தூக்கிய ஹூதி கிளர்ச்சியாளர்கள், முன்னாள் அதிபர் சலேவுடன் சேர்ந்து ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றினார்கள். அப்போது அதிபராக இருந்த ஹடி, சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றார். இங்கிருந்துதான் தொடங்குகிறது ஏமன் உள்நாட்டுப் போர்.
இதற்கு பிறகு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒருபுறமும், ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான படைகள் ஒருபுறமும் ஏமனில் போரிட்டுவருகின்றனர்.
இந்தப் போர் மத்திய கிழக்கின் மிக ஏழ்மையான நாடாக ஏமனை மாற்றியிருக்கிறது.

சவுதி அரேபியா மற்றும் இரான்

முன்பே கூறியதுபோல இது ஏமனில் நடக்கும் போர் என்றாலும், திரைமறைவில் இது இரானுக்கும் சவுதிக்கும் இடையே நடைபெறும் போராகவே பலர் கருதுகின்றனர். இதுகுறித்துப் புரிந்துகொள்ள நாம் இரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே இருக்கும் மோதலுக்கான காரணம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொது சம பலத்தில் இருக்கும் இருவருக்கும் ஓர் அதிகார சண்டையாகக்கூட இதைப் பார்க்கலாம்.

அடிப்படையில், சவுதி அரேபியாவுக்கும் இரானுக்குமான போர் என்பது மத்திய கிழக்கில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டியே.

அந்தப் பிராந்தியத்தில் இருபெரும் எதிரி நாடுகளாக சவுதி அரேபியாவும், இரானும் இருக்கின்றன. இரு நாடுகளிலும் எண்ணெய் வளம் நிறைந்திருக்கிறது.

உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போர்
Hani Mohammed

இந்த இரு நாடுகளுக்கு இடையேயுள்ள இந்த மோதல் தன்மைக்கு இரு நாடுகளிலுமுள்ள மதப் பிரிவும் காரணம்.

இரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சவுதியில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

அரச குடும்பத்தால் ஆளப்படும் சவுதி அரேபியாவில் இஸ்லாம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. உலக அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு. முஸ்லிம் நாடுகளின் அரசன் தான்தான் என்ற நினைப்பில் இருந்த சவுதி அரேபியாவுக்கு 1979-ம் ஆண்டு இரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சி சவாலாக அமைந்தது.

ஆம், இந்த இஸ்லாமியப் புரட்சி என்பது, இரானில் ஆட்சி செய்துவந்த பஹலவி அரச ராஜ்ஜியத்துக்கு எதிராக நடைபெற்றது. அந்தப் புரட்சியில் ராஜாங்க அரசு தூக்கியெறியப்பட்டு, இரானின் அதிஉயர் தலைவர் என்று அழைக்கப்படும் அயதுல்லா கொமேனியின் தலைமையில் இஸ்லாமியக் குடியரசு ஆட்சி அமைந்தது. `சரி, இதற்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன தொடர்பு?’ என்ற கேள்வி எழுலாம். புதிதாக அமைந்த அயதுல்லா கொமேனியின் அந்த ஆட்சி தனது எல்லைகளைத் தாண்டியும் அதை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையைக்கொண்ட இடத்தில்தான் சவுதி அரேபியா இந்தக் காட்சிக்குள் நுழைகிறது.

சவுதியின் கூட்டாளி அமெரிக்கா!

ஏமன் போரில் சவுதி, இரானுக்கு அடுத்தபடியாக முக்கியப் பங்குவகிக்கும் நாடு அமெரிக்கா. சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். இதை, `எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சொலவடைக்கு ஏற்பப் பொருத்திப் பார்க்கலாம். ஆம், இரு நாடுகளுக்கும் எதிரியாக இருப்பது இரான். அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான இந்த விரிசல் என்பது 1953-ம் ஆண்டில் தொடங்கியது.

இரானில் 1953-ம் ஆண்டில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதமர் முகமது மொசாடக், எண்ணெய் வளத்தை தேசியமயமாக்க நினைத்தபோது அவரின் ஆட்சியைக் கவிழ்த்து முகமது ரெசா ஷாவுக்கு ஆதரவாக இருந்து ஷாவை பதவியில் அமரச் செய்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன். அதன் பிறகு 1979-ம் ஆண்டில் நடைபெற்ற இரான் புரட்சி வரை ரெசா ஷாதான் அங்கு ஆட்சியில் இருந்தார்.

சமீபத்தில்கூட இரான் புரட்சிகர ராணுவத் தலைவர் காசெம் சுலேமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்ததோடு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தையும் கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan

சவுதி, அமெரிக்கா இரு நாடுகளும் 1930களிலிருந்து ராஜரீக உறவுகளைப் பேணிவருகின்றன. அமெரிக்கா, சவுதி அரேபியாவைத் தனது முக்கியக் கூட்டணி நாடாகவே கருதிவருகிறது. மேலும், அமெரிக்கா தனது ஆயுதங்களை சவுதி அரேபியாவில் இறக்குமதி செய்துவருகிறது. ஏமன் போர் சமயத்தில் சவுதி அரேபியா மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் வாங்கிக் குவித்திருப்பதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டிரம்ப் சவுதி மீது கடுமை காட்டாததற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் சவுதி அரேபியாவுக்கு அவர் தீவிர ஆதரவைத் தெரிவித்துவந்தார்.

2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதில் சவுதி அரச குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது என்று கூறப்பட்டது. சர்வதேச கண்டனங்கள் வலுத்தநிலையில், ஒருகட்டத்தில் சவுதி அரேபிய அரசுக்கு எதிராகப் பேசும் நிலைக்கு அமெரிக்கா வந்தது.

சவுதி அரச குடும்பம் கஷோக்ஜியின் கொலையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றுகூட டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
ஜமால் கஷோக்ஜியின் கொலை குறித்து மட்டுமல்ல, சவுதி அரேபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல் செயல்களுக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

 `உள்நாட்டு போருக்கும் காலராவுக்கும் பலியாகும் உயிர்கள்...’ - கொரோனாவை  எதிர்கொள்ளுமா ஏமன்?

ஏமன் போர்க் கொடூரங்கள்

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒரு நாட்டில் கடுமையான ஒரு போர் ஒன்று நிகழ்ந்தால், அங்கு என்னென்ன அவலங்கள் நேரக்கூடும் என்பதற்கு பெரிய விளக்கங்கள் ஏதும் தேவையில்லை. தீராத நோய்த்தொற்று, பசி, பஞ்சம், பாதுகாப்பற்ற தன்மை இதுதான் ஏமன் மக்களின் வாழ்க்கை.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டிருந்தாலும், ஏமனில் அது நிலைமையைக் கொடுமையாக்கியது என்றே கூற வேண்டும். ஏற்கெனவே அங்கே பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் சூழலில்தான், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல கொரோனாவும் வந்து சேர்ந்தது.

சுத்தமான நீர் கிடைக்காத ஒரு தறுவாயில் வைரஸைத் தடுப்பதற்கு அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய அந்த நாட்டின் மக்கள் எங்கே போவார்கள்? அங்கே போரிடும் இரு தரப்புகளுமே உணவு, மருந்து என அந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் கொண்டு செல்லும் பாதைகளையும், மார்க்கங்களையும் முடக்கியுள்ளன. கொரோனா இந்த உலகில் கால் பதிப்பதற்கு முன்னரே அங்கு மில்லியன் கணக்கான மக்கள் உதவிகளை நம்பித்தான் வாழ்கிறார்கள் என ஐ.நா தெரிவித்திருந்தது.

உணவுக்குப் பஞ்சமிருந்தாலும், நோய்களுக்கு அங்கு பஞ்சமில்லை. டெங்கு, காலரா, மலேரியா எனப் பல தொற்று நோய்கள் அங்கு பரவிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில், அதை கணக்கிடக்கூட முடியாத ஒரு மோசமான நிலையில்தான் இருந்தது ஏமன்.

பல லட்சம் குழந்தைகள் அங்கு பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் புகைப்படம் ஒன்று போதும்... எமனில் நடைபெறும் போர்க் கொடுமையைச் சுட்டிக் காட்ட. ஏமனில், சவுதி அரேபியா நடத்திய ஆயிரக்கணக்கான வான் தாக்குதல் பள்ளிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. கிட்டத்தட்ட அந்த நாட்டின் பாதிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐ.நா தெரிவிக்கிறது. இந்தப் போரை நிறுத்த ஐ.நா முயற்சிகளை எடுத்தும் அவை எந்தப் பலனையும் கொடுக்கவில்லை.

பைடனின் இந்த முடிவின் அர்த்தம் என்ன?

பைட்ன்
பைட்ன்
AP Photo/Evan Vucci

டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல், சவுதியை நோக்கிய அமெரிக்காவின் போக்கு, தனது ஆட்சிக் காலத்தில் கடினமானதாகவே இருக்கும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

சவுதி அரேபியாவுக்கு ஏமன் போரில் ஆதரவு வழங்குவதை நிறுத்தும் எனத் தெரிவித்திருக்கும் பைடன் முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், சவுதி அரேபியாவுக்கும் ஆயுதங்களை விற்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ஏமன் போரை நிறுத்தும் முயற்சியாக புதிய தூதர் ஒருவரை நியமிக்கப்போவதாக பைடன் தெரிவித்திருக்கிறார்.


பைடனின் ஆட்சிக் காலத்தில் சவுதி அரேபியாவுடன் மட்டுமல்ல... பிற மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய அமெரிக்காவின் போக்கிலும் மாறுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

பைடன் தனது ஆட்சிக் காலத்தில் சவுதி அரேபியா மற்றும் அதன் இளவரசர் சல்மானுடன் இருக்கும் உறவையும் மாற்றியமைக்க முயல்வார். `டிரம்ப்பின் நிர்வாகம் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என ஏற்கெனவே பைடனுடனிருப்பவர்கள் தெரிவித்துவந்தனர்.

பைடன் ஆட்சியில் சவுதியுடன் அமெரிக்கா கடுமை காட்டும் என்றால், இரானுடன் எந்த மாதிரியான உறவை மேற்கொள்ளும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. முன்பு கூறியிருந்ததுபோல டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இரானுடன் ஏற்பட்டிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, இரானுக்குப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இந்தநிலையில், அமெரிக்காவின் இரானுடனான நிலைப்பாடு குறித்து வரக்கூடிய நாள்களில் தெரியும்.

- ஆதிரை

அடுத்த கட்டுரைக்கு