ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவுப்படி, கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர்செய்யத் தொடங்கின. உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்கிறது. இந்த போர் சூழல் காரணமாக பல லட்சக்கணக்கான உக்ரேனியர்கள் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று கொண்டிருக்கின்றனர். உக்ரைன் தனது பிராந்தியத்தில் பயோ வெப்பன்ஸ் (Biological Weapons) உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ``ரஷ்யா தவறான செய்தியைப் பரப்பி வருகிறது.உக்ரைன் மீது ரஷ்யா பயோ வெப்பன்ஸ் மூலம் தாக்குதல் நடத்தலாம். உக்ரைனுக்கு எதிராக மிக மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார்.
