Published:Updated:

`சீன மாணவர்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!' - ட்ரம்ப் நடவடிக்கையைச் சாடும் எதிர்க்கட்சிகள்

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஹாங்காங் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சீன மாணவர்கள் அமெரிக்கா வரத் தடை விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது தன்னிச்சையான அதிகாரம் மற்றும் சிறப்பு அந்தஸ்துடன் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் ஒழிக்கப்படும், ஹாங்காங் அரசை ஓரம்கட்டிவிட்டு சீனா, தானே நடவடிக்கை எடுப்பதற்குச் சமம் எனப் பலரும் குற்றம்சாட்டி இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

சீன அரசின் செயலை அமெரிக்கா உட்பட பல நாடுகளும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஹாங்காங் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “ஹாங்காங்குக்கு எனத் தனிப் பெருமை உள்ளது. அதை மொத்தமாகக் குலைக்கும் வகையில் சீனா நடந்துகொள்கிறது. இது ஹாங்காங் மக்களுக்குச் செய்யும் இழுக்கு. சீன மக்கள் மற்றும் உலக மக்களுக்கும் பெரும் சோகமான விஷயம்.

இதனால் ஹாங்காங்குக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை அகற்றும் செயல்முறையைத் தொடங்குமாறு என் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இது ஏற்கனவே எங்களுக்கு இடையே இருந்த முழு ஒப்பந்தத்தையும் பாதிக்கும். மேலும், தொழில்நுட்பங்கள் மற்றும் ஏற்றுமதிகள் என முழுவதுமாகப் பாதிப்படையும். சீன ராணுவத்துடன் ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களுக்குத் தடைவிதிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மாணவர்கள் மீது ட்ரம்ப் அறிவித்துள்ள தடை, அமெரிக்கா- சீனா உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிலேயே சீன மாணவர்கள்தாம் அதிகம் என்பதால் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிலையை மோசமாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சீனாவைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வைரஸ் கட்டுப்படுத்துதலில் தன் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்க ட்ரம்ப் சீனாவைச் சீண்டி , அவர்கள் மீது குற்றச்சாட்டுச் சுமத்தி தன் தோல்வியைத் திசை திருப்ப முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு