Published:Updated:

`கொரோனா, வெல்ல முடியாத எதிரி; ஆனால், அமெரிக்கா அதை தோற்கடிக்கும்!’ - ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

``சீனா எனும் தொலைதூர தேசத்தில் இருந்து நம்முடைய நாட்டுக்கு இந்தப் புதிய வைரஸ் வந்துள்ளது.”

கொரோனா வைரஸால் அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,42,224 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு ஒரேநாளில் 702 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,17,527 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்குகள் ஆகியவை அமெரிக்காவில் வைரஸ் பரவலை இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

வைரஸ் பரவ ஆரம்பித்த நாள் முதலே ட்ரம்ப், சீனாவின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். சீனாவின் திறமையின்மையே அனைத்துக்கும் காரணம் என்றும் வைரஸ் பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அமெரிக்காவில் நிலவும் கொரோனா தொடர்பான பிரச்னைகளை திசை திருப்ப ட்ரம்ப், சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக சீனாவின் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தைப்போர் நிலவி வருகிறது. சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இருக்கும் பிரச்னைகளில்கூட அமெரிக்கா தலையிட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் சீனாவைக் குறிப்பிட்டு தனது விமர்சனத்தை ட்ரம்ப் எழுப்பியுள்ளார்.

`உச்சம் தொட்ட பாதிப்பு; அமெரிக்கா, தெற்காசியாவில் மோசமாகும் நிலைமை..!’ - எச்சரிக்கும் WHO

அமெரிக்க ராணுவ அகாடமியில் கடந்த சனிக்கிழமை அன்று பேசிய ட்ரம்ப், இந்த கொரோனா வைரஸை `வெல்ல முடியாத எதிரி’ என்று குறிப்பிட்டார். ஆனால், விரைவில் அமெரிக்கா இந்த வைரஸை தோற்கடிக்கும் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ``அமெரிக்க சமூகத்துக்கு ராணுவம் அளித்திருக்கும் பங்கு நம் அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போராட முன்வந்த தேசிய பாதுகாப்புப் படை, ஆயுதப்படை என ஒவ்வொரு பிரிவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். சீனா எனும் தொலைதூர தேசத்தில் இருந்து நம்முடைய நாட்டுக்கு இந்தப் புதிய வைரஸ் வந்துள்ளது” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தக் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகான் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் ஆய்வகம் ஒன்றில் இருந்து வெளியானது என ட்ரம்ப் பலமுறை குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆனால், அந்த ஆய்வக உறுப்பினர்கள் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அமெரிக்காவில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகும் பட்சத்தில் சீனாவுடனும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி உலக சுகாதார அமைப்புடனும் ட்ரம்ப் தொடர்ந்து சண்டையிட்டு வருவது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

`ஒருவேளை அதிபர் தேர்தலில் நான் தோற்றால்?’ - ஜோ பிடன் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்
அடுத்த கட்டுரைக்கு