Published:Updated:

`அவர்களுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது’ - ஹாரி, மேகனை நிராகரித்த ட்ரம்ப்

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

அமெரிக்கா வந்துள்ள ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசக் குடும்பம்
அரசக் குடும்பம்

பெரும் சர்ச்சைக்குப் பிறகு இவர்களின் முடிவை ஆதரித்த ராணி எலிசபெத், ``ஹாரி - மேகன் தம்பதி அமெரிக்காவில் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரசக் குடும்பம் சார்ந்த சுற்றுப் பயணங்களில் கலந்துகொள்ள முடியாது” என்று அறிவித்தார். இது அரசக் குடும்பத்தில் இருந்து பதவிவிலகுவதாகப் பொருள்படும் எனக் கூறப்பட்டது.

பின்னர் இருவரும் கனடாவில் தனியாக ஒரு புது வாழ்கையைத் தொடங்கினர். கனட பிரதமரும் இவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும் அவர்கள் தாராளமாகக் கனடாவில் இருக்கலாம் எனவும் அறிவித்தார். ஆனால், ஒரு மாதம் மட்டுமே கனடாவிலிருந்த இந்தத் தம்பதி தற்போது அமெரிக்காவுக்கு அதாவது, மேகனின் சொந்த நாட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். கொரோனா பாதிப்புக்காக அமெரிக்க எல்லை மூடப்படுவதற்கு முன்பாகவே இவர்கள் தனியார் ஜெட் மூலம் கலிஃபோர்னியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் நான் நெருங்கிய நண்பர். அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகனும் இனி கனடாவில் வசிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அரசு அவர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் தேடி! - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி

இதற்கு முன்னதாகவே ஹாரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்களின் பாதுகாப்புக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைப் பெறப்போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் கனடாவில் வசிக்கும்போதும் அந்த நாடும் இவர்களின் பாதுகாப்பு செலவினங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை. தற்போது அதையே அமெரிக்காவும் பின்பற்றுகிறது.

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

தற்போது ஹாரி - மேகன் வசித்து வரும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் மேல் உள்ளது. இதனால் இந்தத் தம்பதி தங்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

ஹாரியின் தந்தையும் இங்கிலாந்து இளவரசருமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் ஹாரி- மேகன் தம்பதி தங்களின் அரசக் குடும்ப பொறுப்புகளை நாளை அதிகாரபூர்வமாகத் துறக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு