Published:Updated:

கொரோனா விளைவு: வித்தியாசமான முறையில் அமெரிக்காவின் 244-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்!

Mt. Rushmore National Memorial, US
Mt. Rushmore National Memorial, US ( AP Photo / Laura Rauch, File )

அமெரிக்க அரசு, தனது 244-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே, ஜூலை 4 என்பது ஒரு மறக்க முடியாத நாளாகும்.

அன்றைய தினம்தான் 13 காலனிகள் மட்டுமே கொண்ட அமெரிக்கா பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவதாக அறிவித்தது. இந்த சுதந்திர வரைவைத் தயாரிக்க, கான்டினென்டல் காங்கிரஸ் ஜூன் 11,1776 அன்று ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதில் முறையே... தாமஸ் ஜெஃபர்ஸன், ஜான் அடம்ஸ், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ரோஜர் சேர்மான் மற்றும் ரோஜர் லிவிங்ஸ்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சுதந்திர வரைவு
சுதந்திர வரைவு

இவர்கள் தயாரித்த வரைவை, 33 வயதே நிரம்பிய தாமஸ் ஜெஃபர்ஸன்தான் பிலாடேல்ஃபியாவில் முன்மொழிந்தார். பின்னர், காங்கிரஸால் ஜூலை 4, 1776 அன்று சுதந்திர வரைவு முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த சுதந்திர வரைவை பிரிட்டன் அரசாங்கம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. ``இது, அதிருப்தி அடைந்த காலனிய மக்களின் செயல் மட்டுமே'' என்று சொல்லி மறுதலித்துவந்தது. அதன் பிறகும் அமெரிக்கா மீது போர் தொடுத்துவந்தது. இறுதியாக, 1778-ம் ஆண்டில் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகுதான், பிரிட்டன் அரசாங்கம் அமெரிக்காவுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகத் தெரிவித்தது.

பிரிட்டன் அரசாங்கம், அமெரிக்க காலனிகள் மீது 16-ம் நூற்றாண்டிலிருந்தே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. வட அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி தன் வசம் வைத்திருந்தது. அவை, `பிரிட்டிஷ் அமெரிக்கக் காலனிகள்' என்றே அழைக்கப்பட்டன. பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கர்கள், முதன் முதலாக 1765-ம் ஆண்டு கலகக் குரல் எழுப்பினர். அப்போது, பாராளுமன்றத்தில் அமெரிக்கர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வரி செலுத்த முடியாது என எதிர்த்தனர். இந்தப் புரட்சியானது `ஸ்டாம்ப் ஆக்ட் காங்கிரஸ்' என்று அழைக்கப்பட்டது. இதன் பின்னர், தொடர்ந்து அமெரிக்காவில் புரட்சிகள் வெடிக்கத் தொடங்கின. இதனால் 1770-ம் ஆண்டில், `பாஸ்டன் படுகொலைகள்', 1772 ல் `காஸ்பி கப்பல் தீ வைப்பு' என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. அதற்குப் பிறகு, 1773-ம் ஆண்டு பாஸ்டன் டீ பார்ட்டியில் நடந்த நிகழ்வுதான் அமெரிக்க வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது.

America
America

இந்த நிகழ்வையடுத்து, பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் ஒடுக்குமுறையை `பிரிட்டிஷ் அமெரிக்க காலனி'களில் கொண்டு வந்தது. அதேசமயம், 1774-ம் ஆண்டு கான்டினென்டல் காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தங்களது சுயாட்சியை நிறுவ முற்பட்டனர். இதனால் 13 காலனிகளும் தங்களது படை பலத்தை அதிகப்படுத்திக் கொண்டு பிரிட்டனுடனான நேரடி மோதலுக்குத் தயாராகின. அமெரிக்காவின் புரட்சிப் போர், இறுதியாக 1775-ம் ஆண்டு பாஸ்டனுக்கு அருகில் தொடங்கியது. அதன் பின் 1777-ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கமும் அமெரிக்காவுடன் பிரிட்டனுக்கு எதிரான போரில் இணைந்துகொண்டது.

இதன் விளைவாக, 1781-ம் ஆண்டு அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படைகள் யார்க்டவுனின் சிறுபகுதிகளைக் கைப்பற்றினர். இதுவே போரின் இறுதிக்கட்டமாக அமைந்தது. அதன் பின், 1783-ம் ஆண்டு போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை மதித்து, பிரிட்டன் அரசாங்கம் அமெரிக்காவை விட்டு வெளியேறியது.

தாமஸ் ஜெஃபர்ஸின் சுதந்திர வரைவு:

தாமஸ் ஜெஃபர்ஸன் அமெரிக்காவின் சுதந்திர வரைவை முன்மொழிந்த போது, அது 18-ம் நூற்றாண்டுக்கு மட்டுமான விஷயங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவரின் சிந்தனைகள், பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த அமெரிக்கர்களைவிட சிறந்தே இருந்தது. தனது சுதந்திர வரைவில், ``எல்லாரும் சரிசமமாக உருவாக்கப்பட்டவர்களே" என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெஃபர்ஸன். ஆனால், இந்தக் கூற்றை சமகால அமெரிக்காவோடு பொருத்திப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அனைத்து மக்களும் சரி சமம் இல்லை என்ற நிலைப்பாடே அமெரிக்காவில் உள்ளது. அதன் நீட்சியாகத்தான் ஆஃப்ரோ அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கான போராட்டம்
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கான போராட்டம்
AP

இந்தச் சம்பவத்துக்கு எதிராக, உலகமெங்கும் ஆஃப்ரோ அமெரிக்க மக்களுக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இவ்வாறு ஆஃப்ரோ அமெரிக்க மக்கள் அமெரிக்காவில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது என்பது புதிதல்ல. ஒருகாலத்தில் அமெரிக்காவின் பூர்வகுடிகளாக இருந்த ஆஃப்ரோ அமெரிக்க மக்கள், இன்று பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்துவருகின்றனர். அமெரிக்கா, 1865-ம் ஆண்டு அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாகக் கூறினாலும், நிறம் மற்றும் இன அடிப்படையிலான அடிமைத்தனம் இன்றும் அமெரிக்க மக்களிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டாலும், ஆஃப்ரோ அமெரிக்க மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகும் மக்களாகத்தான் உள்ளனர். இதனால் ஜூலை 4-ம் தேதியை ஆஃப்ரோ அமெரிக்க மக்கள் சமத்துவத்துவத்துக்காகப் போராடும் நாளாகவே கொண்டாடிவருகின்றனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக நீதி கேட்டு இந்த வருடமும் ஆஃப்ரோ அமெரிக்கர்கள் நிச்சயம் போராடுவர். இந்த நாளில் இவர்கள் சுதந்திர வரைவை பொதுவெளியில் படித்தும், அடிமைத்தனம் மற்றும் இனவாதம் பற்றிய காட்சிகளை நடித்துக் காண்பித்தும் அநீதிக்கு எதிரான பாடல் மற்றும் கவிதைகளைப் படித்தும் சுதந்திர நாளை போராட்ட உணர்வோடு கொண்டாடுவர். இவர்கள் உருவாக்க நினைக்கும் அமெரிக்கா, அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விலகி, எல்லாரையும் சமமாக நடத்தும் அமெரிக்காவைத்தான். சுதந்திரம் கிடைத்து 244 ஆண்டுகள் ஆகியும், இன்னும் இவர்கள் உள்நாட்டிலேயே சுதந்திரத்துக்காகப் போராடும் அவல நிலைதான் நீடித்துவருகிறது. ஆஃப்ரோ அமெரிக்க மக்களுக்கான நீதி கிடைக்கும் நாள்தான் அமெரிக்காவின் உண்மையான சுதந்திர நாளாகும். அதுவரை பிரிட்டனிடமிருந்து பெற்ற அரசாங்க சுதந்திரத்தை மட்டுமே அமெரிக்கர்களால் கொண்டாட முடியும்.

Corona - US (Representational Image)
Corona - US (Representational Image)

அதிலும் இந்த ஆண்டு, சுதந்திர விழா கொண்டாட்டங்கள் சற்றே மாறுபட்டு இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவை அமெரிக்கர்கள் வான வேடிக்கைகளோடும், அமெரிக்க படைகளின் அணிவகுப்போடும் கோலகலமாகக் கொண்டாடுவர். அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின் வீதிகளில் நிரம்பியிருப்பர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் சுதந்திர தினத்துக்கு மக்கள் கூட்டமாகக் கூட முடியாது. சுதந்திர தினம் ஜூலை 4 தான் என்றாலும் , ஜூலை 3-ம் தேதியே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இந்த ஆண்டு வானவேடிக்களை வீட்டிலிருந்தே காண்பதற்கான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிகக் கூட்டம் கூடாமல் இருக்க, நியூயார்க்கில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் வான வேடிக்கைக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன .

இதோடு, ஓஹியோ மாகாணத்தில் மட்டும் சிறு அளவிலான அணிவகுப்பு நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக பார்களும், ரெஸ்டாரன்ட்களும் எப்போதும்போல மூடியே இருக்கும். கடற்கரையிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை. இவற்றோடு, ஆஃப்ரோ அமெரிக்க மக்களின் போராட்டமும் நிச்சயம் இடம்பெறும். இவர்கள் ஓர்லாண்டோ, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டி.சி-யில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்படிப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளால் அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் வித்தியாசமான முறையிலேயே கொண்டாடப்படும்.

அடுத்த கட்டுரைக்கு