LiveUpdates: வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்... `அமெரிக்காவை பாதுகாப்பேன்’ - ஜோ பைடன்! #Inauguration2021

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்கிறார். இது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
வெள்ளை மாளிகையின் ஐந்து மணி நேர ஆச்சர்யம்!

கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் தொடங்கிய அமெரிக்கத் தேர்தல் பரபரப்பு இன்று இரவு, புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்போடு முடிவுக்கு வரும். தேர்தலில் பைடன் வெற்றி பெற்றிருந்தபோதும், ட்ரம்ப் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவரது செயல்கள் மூலம் நாம் அறிந்தோம். செனட்டில் நடந்த கலவரம் ட்ரம்ப்புக்கு பெரும் நெருக்கடியைத் தர, இறுதியாக இன்று வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுகிறார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பழைய அதிபர் வெளியேறி, புதிய அதிபர் குடியேறும் நடைமுறை, ஒரே நாளில் ஐந்து மணி நேர இடைவெளியில் நடந்து முடிந்துவிடும்... இது குறித்து முழுமையாகப் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
ஜோ பைடன் அரசில் இந்தியர்கள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசில் தமிழர்கள் கோலோச்சவிருக்கிறார்கள். தமிழக வேர்களைக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து நமக்கு நன்கு தெரியும். இவர் மட்டுமல்லாமல் அமெரிக்க அரசில் அதிக அளவில் இந்திய வம்சாவளியினரும், தமிழர்களும் கோலோச்சவிருக்கிறார்கள்.
அதிபர் ட்ரம்ப் உரை..!
நேற்று அமெரிக்க அதிபராகப் பேசிய ட்ரம்ப், ``இந்த வாரம், ஒரு புதிய நிர்வாம் தொடங்கவிருக்கிறது. அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் அதன் வெற்றிக்காகப் பிரார்த்திக்கிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ``நான் எளிதான பாதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதுவரை, குறைந்தபட்ச விமர்சனங்களைப் பெறும் பாதையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. நான் கடுமையான பாதையைத்தான் தேர்வு செய்தேன். ஏனென்றால், அதற்குத்தான் நீங்கள் என்னை தேர்வு செய்தீர்கள். உங்கள் தேவைகளே எனது முதல் மற்றும் கடைசிச் செயல்” எனப் பேசினார்.

வழக்கமாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில், பதவி விலகும் அதிபர்கள் பங்கேற்பதுண்டு. எல்லா நடைமுறைகளையும் அலட்சியம் செய்யும் ட்ரம்ப், இந்த விழாவையும் புறக்கணிக்கிறார். ஜோ பைடன் பதவியேற்கும் அதே நேரத்தில் ட்ரம்ப் தன் குடும்பத்துடன் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பாம் பீச் சொகுசு ரிசார்ட்ஸுக்குச் செல்கிறார். அங்குதான் அவர் குடும்பம் இனி வசிக்கவிருக்கிறது.
என்ன சொல்கிறார் பைடன்!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 4,00,000 அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். பின்னர் பேசிய பைடன்,

சில விஷயங்களை மீண்டும் நினைவில்கொள்வது கடினமானது. ஆனால், அதன் மூலம்தான் நாம் மீண்டு வர முடியும். ஒரு தேசமாக மீண்டு வருவது அவசியம். இந்தப் போரில் பலியானவர்களை நினைவுகூர்வோம்!ஜோ பைடன்
துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்... உற்சாகத்தில் துளசேந்திரபுரம்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் 21-ம் தேதி பதவியேற்கவிருப்பதால், இவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள துளசேந்திரபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
உச்சகட்ட பாதுகாப்பில் வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால், தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட தேசியப் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கும் வாஷிங்டன் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், பதவியேற்பு விழாவை தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் புறக்கணித்திருக்கிறார். வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய ட்ரம்ப், ஃபுளோரிடாவிலுள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் குடியேறவிருக்கிறார். அதிபராக நாட்டு மக்களிடையே பிரிவு உபசார உரையாற்றிய ட்ரம்ப், புதிய அரசு வெற்றிபெற வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
`எந்த அமெரிக்க அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்!’
அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்க இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து தன் குடும்பத்துடன் வெளியேறினார் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், ``நாங்கள் அமெரிக்க மக்களை நேசிக்கிறோம், அது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் விடைபெற விரும்புகிறேன். ஆனால், அது நீண்டகால விடைபெறுதல் இல்லை. நாம் மீண்டும் சந்திப்போம்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``எங்கள் ஆட்சியில் வரிகள் அதிகம் உயர்த்தப்படவில்லை. எந்த அமெரிக்க அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன். அமெரிக்க அதிபராக என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்” என்றார்.
`அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்!’ -பைடன் ட்வீட்
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் `அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்!’ என ட்வீட் செய்திருக்கிறார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்?!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்னும் சிறிது நேரத்தில் பதவியேற்கவிருக்கும் நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக அங்கிருக்கும் நபர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சி.என்.என் ஊடகம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க கேபிட்டலில் ஒபாமா, கிளின்டன்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க கேபிட்டலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகையைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கிளின்டன், 2016 ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் கேபிடல் ஹில்லுக்கு வந்திருக்கிறார்கள்.
அமெரிக்க கேபிட்டலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இருவரும் பதவியேற்புக்காக அமெரிக்க கேபிட்டலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன், கமலா ஹாரிஸின் கணவர் டெளக் எம்ஹாஃப் ஆகியோரும் பதவியேற்பு விழா நடக்கும் அமெரிக்க கேபிட்டலுக்கு வந்திருக்கிறார்கள்.
`இன்று நான் இங்கு நிற்பதற்குக் காரணம்..!' - கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ், ட்விட்டரில் தனது தாயை நினைவுகூர்ந்திருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் கமலா ஹாரிஸ், ``இன்று நான் இங்கு நிற்பதற்குக் காரணம், எனது அம்மாதான்” என்ற தொனியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க கேபிட்டலில் மைக் பென்ஸ்!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவி கரேன் பென்ஸுடன் அமெரிக்க கேபிட்டலுக்கு வருகை தந்திருக்கிறார். ட்ரம்ப், பதவியியேற்பு விழாப்சிப் புறக்கணித்ததன் காரணமாக, அதிகார மாற்றத்தில் மைக் பென்ஸ் முக்கியப் பங்காற்றவிருக்கிறார்.
சற்று நேரத்தில் பதவியேற்பு விழா!
வழக்கமாக அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்வுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வாஷிங்டன் நோக்கிப் படையெடுப்பார்கள். ஒபாமா பதவியேற்பு நிகழ்வுக்கு சுமார் 20 லட்சம் மக்கள் வாஷிங்டன் நோக்கி வந்ததாகக் கூறப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை கொரோனா அச்சம் காரணமாக சுமார் 1,000 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக இது மாறியிருக்கிறது.
பதவியேற்பு நிகழ்வு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், இன்னும் சற்றும் நேரத்தில் பைடனும் கமலா ஹாரிஸும் பதவியேற்கவிருக்கிறார்கள்.
முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றார் கமலா ஹாரிஸ். தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்ற நிகழ்வை அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் 46 -வது அதிபரானார் ஜோ பைடன்!

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் மோடி, ``அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பைடனுக்கு வாழ்த்துகள். இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கிறேன். பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் நாம் ஒற்றுமையாகவும் நெகிழ்ச்சியுடனும் நிற்கும் நிலையில், அமெரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்த வாழ்த்துகள்” என்றார்.
இன்று ஜனநாயகத்தின் நாள்!
அமெரிக்க அதிபராக உரையாற்றிய ஜோ பைடன், ``இன்று கிடைத்திருக்கும் வெற்றி, ஒரு நபரின் வெற்றி அல்ல, ஒரு ஜனநாயகத்தின் வெற்றி. அதன் காரணமாக அதை நாம் கொண்டாடுகிறோம். மக்களின் விருப்பம் முழுமையாக கேட்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் விலைமதிப்பற்றது, ஜனநாயகம் மேலோங்கிவிட்டது என்பதை நாங்கள் மீண்டும் கற்றுக்கொண்டோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இன்று, இந்த ஜனவரி நாளில், எனது முழு ஆத்மாவும்அமெரிக்காவை ஒன்றிணைத்தல், நம் மக்களை ஒன்றிணைத்தல், நம் தேசத்தை ஒன்றுபடுத்துதலில்தான் இருக்கிறது” என்றார்.
``நம்மைப் பிரிக்கும் சக்திகள் இருப்பது உண்மையானதுதான். அது ஆழமாகச் செயல்பட்டது. ஆனால், அவை எதுவும் புதியவை அல்ல. இது அமெரிக்காவின் நாள். இன்று ஜனநாயகத்தின் நாள். உள்நாட்டு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் கொரோனா பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவற்றை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். எல்லா அமெரிக்கர்களுக்கும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன்” என்றார் பைடன்
துணை அதிபர் கமலா ஹாரிஸ்... துளசேந்திரபுரத்தில் கொண்டாட்டம்!
அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர். அவர்கள் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?
அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகள்!
அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றிருக்கும் நிலையில், அவர்களுக்காக அதிகாராபூர்வ ட்விட்டர் பக்கம் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமலா ஹாரிஸ், `மக்களுக்காக எப்போதும் இருப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், துணை அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் கமலா ஹாரிஸ், ``சேவையாற்ற தயாராக இருக்கிறேன்” (Ready to serve) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் பைடன், தனது அதிகாராபூர்வ ட்விட்டர் கணக்கில், ``நாம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சரிக்கட்ட இருப்பதால் நேரத்தை வீணடிக்காமல் ஓவல் அலுவலகம் செல்கிறேன். அங்கு அமெரிக்க மக்களுக்குக்காக தைரியமான முடிவுகளையும், உடனடி நிவாரணமும் வழங்கும் நடவடிக்கைகளை எடுப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ``இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேலும் வலுவாக மாற்ற அவருடனான தொடர்பபை எதிர்நோக்கி இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா கூட்டு நடவடிக்கைகள் இந்த உலகுக்கே நன்மை பயக்கும்” என்றார்.