Published:Updated:

``தமிழகத் தொழிலதிபர்கள் எங்கள் பகுதிகளில் முதலீடுகள் செய்ய வேண்டும்'' - விக்னேஸ்வரன் கோரிக்கை

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

இரண்டு முறை தடைபட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூன்றாவது முறையாக, ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் எனக் கடந்த ஜூன் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தலும் நெருங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு மாதம் மீதமிருந்த நிலையிலும், நான்கரை ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்துக்கொள்ளலாம் எனும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.

ராஜபக்சே சகோதரர்கள்
ராஜபக்சே சகோதரர்கள்

இதையடுத்து ஏப்ரல் 25-ம் தேதி 9-வது நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அந்தச் சமயத்தில் சீனாவை மிரட்டிக்கொண்டிருந்த கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. இலங்கையிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இதனால் வேட்புமனு தாக்கலோடு அந்தத் தேர்தல் தடைபட்டது. மார்ச் 19-ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற நிலையில் மார்ச் 20-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி அறிவித்தபடி, தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பின் கொரோனா பாதிப்பு சற்று சீராகவே, ஜூன் 20-ம் தேதி தேர்தலை நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டது. மீண்டும் வேகமெடுத்த கொரோனா பாதிப்பினால் இரண்டாவது முறையாகவும் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 3-வது முறையாக, ஜூன் 10-ம் தேதி புதியதாகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் 5-ல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டது.

சுமார் 2.17 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில்,கொரோனா வைரஸால் 2,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 2,333 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் சிகிச்சை எடுத்துவருகின்றனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்ட இலங்கை ராணுவம் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பெரும்பயன் கிட்டியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டிருக்கும் சமயம் இதுதான் என்பதால், கொரோனா வெற்றியோடு தேர்தலைச் சந்தித்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டனர் ராஜபக்சே சகோதரர்கள். அதற்கு ஏற்றாற்போல் தமிழ் கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி என மூன்றாகப் பிளவுப்பட்டு நிற்க அவர்களுக்கு இன்னும் சாதகமாகப் போனது.

சம்பந்தர்
சம்பந்தர்

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கையானது, நாளை நள்ளிரவோடு முடிவடைவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் அன்று மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், வாக்களிப்பு மையங்களை அதிகரிப்பதோடு வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

225 தொகுதிகளை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு... இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

இந்தநிலையில், இந்தத் தேர்தலை முன்னிட்டு, வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன், இந்தியாவுக்கும் தமிழக அரசுக்கும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் பேசும்போது,

``நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் (அறிக்கையில்) இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக மக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டு வருகின்ற நிலையிலும், இனப்பிரச்னை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துகளை முன்வைத்துவருகிறது.

தமிழ் மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை பாதிக்கப்பட்ட மக்களிடையே அடையும் பொருட்டு ஒரு கருத்துக் கணிப்பை நடத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இந்த முன்னெடுப்பை இந்தியாவே தலைமை தாங்கி செயல்படுத்தவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. அத்துடன் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் வரை எமது பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் தொடரும் கட்டமைப்பு ரீதியானதும் கலாசார ரீதியானதுமான இனப்படுகொலையை தடுப்பதற்கும் ஒரு இடைக்காலத் தீர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

தேர்தல் முடிவடைந்த பின்னர் நாம் இந்தியாவுக்குப் பயணம் செய்து இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். தமிழக அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இந்த விடயத்தில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன் வடக்கு கிழக்கின் சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கும் இந்தியா காத்திரமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, பலாலி விமானநிலைய விஸ்தரிப்பு மற்றும் காங்கேசன்துறை, திருகோணமலை, தலைமன்னார் ஆகிய இடங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பது, வடக்கு கிழக்கில் பொருளாதார முதலீடுகளுக்கு வழிவகுப்பதுடன் பாரிய பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், தமிழகத் தொழிலதிபர்கள் எமது பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்யமுடியும் என்றும் எமது உயர் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும் தமிழகப் பல்கலைக் கழகங்கள் முக்கிய பங்களிப்பை செய்யமுடியும் என்றும் நாம் நம்புகிறோம்” என்றார் அவர்.

விக்னேஸ்வரரின் முழுமையான பேட்டியை, இன்று வெளியான ஜூனியர் விகடனில் படித்துக்கொள்ளலாம்.

"பாகிஸ்தானின் பழைய ஆட்சி முறை நிறுவப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!"
அடுத்த கட்டுரைக்கு