Published:Updated:

`வேண்டுமென்றே பாழாக்கிவிட்டார்!’- விஜய் மல்லையாவால் கலங்கும் கத்தார் தேசிய வங்கி

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, கத்தார் தேசிய வங்கியிலும் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்பச் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத் துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயன்றுவருகிறது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

இதற்காக, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், விஜய் மல்லையா தங்களிடமும் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி செலுத்தவில்லை என்று கத்தார் தேசிய வங்கி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Vikatan

விஜய் மல்லையா 2008-ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள சைன்ட் மார்குரைட் தீவில் (Ile Sainte Marguerite) 1.3 ஹெக்டேர் பரப்பளவில் ‘லீ கிராண்ட் ஜார்டின்’ என்ற ஆடம்பர பங்களாவை விலைக்கு வாங்கினார். அங்கு, 17 படுக்கை அறைகள், சினிமா தியேட்டர், தனி ஹெலிபேட், நைட் கிளப் போன்ற பல வசதிகள் உள்ளன. அந்தப் பங்களாவை வாங்குவதற்காக கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான அன்ஸ்பச்சர் (Ansbacher) நிறுவனத்திடமிருந்து 280 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

கத்தார் தேசிய வங்கி
கத்தார் தேசிய வங்கி
Wikipedia

ஆனால், அந்தக் கடனையும் விஜய் மல்லையா திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். கடன் நிலுவை தொடர்பான வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அன்ஸ்பச்சர் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “விஜய் மல்லையா எங்கள் நிறுவனத்திடம் கடன் பெற்று லீ கிராண்ட் ஜார்டின் பங்களாவை வாங்கினார். அந்தக் கடன் தொகை வாங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. அவர் வாங்கிய பங்களாவை விற்றாவது கடனைத் தீர்த்துக்கொள்ளலாம் என நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், மல்லையா அந்த பங்களாவை வேண்டுமென்றே பாழாக்கி வைத்துள்ளார்.

Vikatan

தகுதியற்ற ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளால் அந்த பங்களா இன்னும் அதிகம் பாழாகிவிட்டது. இதனால் பங்களாவின் உண்மையான மதிப்பிலிருந்து 30% குறைந்துவிட்டது. இதன் காரணமாக, லீ கிராண்ட் பங்களாவை விற்றாலும் மல்லையா வாங்கிய முழுமையான பணத்தை வசூலிக்க முடியாத நிலை உள்ளது. மீதமுள்ள பணத்துக்கு ஈடாக பிரிட்டனில் உள்ள மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசுப் படகை விற்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

லண்டன் உயர்நீதிமன்றம்
லண்டன் உயர்நீதிமன்றம்
Wikipedia

ஆனால், மல்லையாவின் சொகுசுப் படகில் வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், அதன் காப்பீட்டு நிறுவனம், கடந்த 2018-ம் ஆண்டே படகை முடக்கிவிட்டது. இதனால் அன்ஸ்பச்சர் நிறுவனம், மீதி பணத்தைப் பெறுவதற்குத் திணறிவருகிறது. அதேநேரம், மல்லையாவின் பிரான்ஸ் பங்களா விற்பனைப் பட்டியலுக்கு வந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு