Published:Updated:

``உசுரோட திரும்புவேனென்று நம்பிக்கை இல்லை" - கலங்கும் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் | Exclusive

மியான்மரில் தமிழர்கள் சிக்கியுள்ள முகாம்

வேலை தருவதாகச் சொல்லி மோசடி செய்து இந்தியாவிலிருந்து மியான்மருக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிக்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் அங்குள்ள நிலவரம் குறித்து பேசினோம்...

``உசுரோட திரும்புவேனென்று நம்பிக்கை இல்லை" - கலங்கும் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் | Exclusive

வேலை தருவதாகச் சொல்லி மோசடி செய்து இந்தியாவிலிருந்து மியான்மருக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிக்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் அங்குள்ள நிலவரம் குறித்து பேசினோம்...

Published:Updated:
மியான்மரில் தமிழர்கள் சிக்கியுள்ள முகாம்

தாய்லாந்தில் ஐ.டி வேலை என்று சொல்லி மியான்மருக்கு கடத்தப்பட்டதாகச் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், கடத்தல் கும்பல் ஒன்று எங்களைச் சட்டவிரோத செயலில் ஈடுபடுத்துவதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் தகவல் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துக்கொண்டிருந்த மும்பையைச் சேர்ந்த விஷ்ணு என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``மும்பையில் வசித்த என் நண்பர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பாக வேலைக்குச் சென்றிருந்தார். சென்ற சில திங்களிலேயே அவர் ஒரு நரகத்தில் சிக்கியது அவருக்குத் தெரியவந்திருக்கிறது.

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள்
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள்

வேலை என்று சொல்லி அழைத்துச் சென்று அவர்களை அடித்து சித்திரவதை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன். ஒருவழியாக இந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், இன்றளவும், இந்தியாவிலிருந்து மியான்மருக்கு வேலைக்கு அழைத்துச் செல்கின்றோம் என்ற பெயரில் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது தடுக்கப்படவேண்டும். அங்குச் சிக்கியிருக்கும் அனைவரும் உடனடியாக மீட்கப்படவேண்டும்" என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஷ்ணு வழியாக, சமீபத்தில் மியான்மரிலிருந்து கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுத்து இந்தியா திரும்பிய ஒருவரின் தொடர்பு நமக்குக் கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். பாதுகாப்பைக் காரணங்களுக்காக எனது அடையாளத்தை வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசினார். ``முகப்புத்தகத்தில் தாய்லாந்தில் வேலை என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுப் பெற்றுவிட்டார்கள். ஒரு சில தினங்களிலேயே எனக்கு இலவசமாக விமான டிக்கெட் அனுப்பியிருந்தார்கள்.

கடத்தல்காரர்கள் இடம்
கடத்தல்காரர்கள் இடம்

தாய்லாந்து சென்றதுமே, என்னை அங்கிருந்த ஒருவர் வரவேற்றார். அவர்கள் கொடுத்த காரில் 700 கி.மீ தொலைவு பயணித்து மே சாட்(Mae Sot) என்ற இடத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்தேன். அடுத்தநாள், இரவு நேரத்தில், நான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மூவர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் என்று ஐவரும் காரில் அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நள்ளிரவில், தாய்லாந்து எல்லையில் உள்ள ஒரு ஆற்றில் அவர்கள் ஏற்படுத்திவைத்திருந்த ஒரு பெரிய டியூப் வழியாகக் கடந்தோம். அங்கே சென்றதும்தான் அது ஒரு நரகம் என்பது எனக்குப் புரிந்தது.

எங்களைச் சட்டவிரோதமாக ஆன்லைன் மோசடி செய்ய வற்புறுத்தினார்கள். எங்களுக்கு வேறுவழி கிடையாது. செய்யவில்லை என்றால், நான்கு நாள் சிறையில் கட்டிவைத்து அடிப்பார்கள், கரண்ட் ஷாக் கொடுப்பார்கள். தினமும் டார்கெட் இருக்கும் அதனை முடிக்கவில்லை என்றால், சொல்லமுடியாத அளவு வேதனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும். நான் நான்கு நாள் சிறையிலிருந்தேன், என்னை அவர்கள் சித்திரவதை படுத்தியதால் என் உடல்நலம் பாதித்தது. கடைசியாக நான் நான்கு லட்சம் ரூபாய் (4500$-USD) கொடுத்த பிறகு என்னை விடுவிக்க முடிவு செய்தார்கள்.

கடத்தல்காரர்கள்
கடத்தல்காரர்கள்

ஒன்றரை மாதம் அந்த நரகத்திலிருந்தேன். உயிரோடு நான் வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அங்கே இருப்பவர்கள் மனிதர்களே கிடையாது. இன்றும் இந்தியர்கள் உட்படப் பலநூறு பேர் அங்கே சித்திரவதை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது விடுவிக்க அரசு முன்வரவேண்டும். கடத்தல் கும்பலுக்கு, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஆள்கள் இருக்கிறார்கள். இந்த ஏஜென்டுகள்தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களைப் பிடித்தால், கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்" என்றார்.

மியான்மரில் சிக்கித்தவிக்கும் மும்பை வாழ் தமிழர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். நான் பேசுவதற்கு முன்பாக, ``சார் எங்களை எப்போ நம்ம கவர்மெண்ட் இங்கிருந்து கூட்டிட்டுப் போவாங்க" என்று பயந்துபோன ஒரு குரலில் நம்மிடம் பேசத் தொடங்கினர். ``மூன்று மாதங்களுக்கு முன்பாக, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தாய்லாந்தில் வேலை மாதம் 1,000 அமெரிக்க டாலர் சம்பளம் என்று பார்த்தேன். எனது விவரங்களை வாங்கிக்கொண்டவர்கள், விமான டிக்கெட்டை அனுப்பினார்கள். தாய்லாந்து சென்றதும், அங்கே ஒரு ஹோட்டலில் முதல்நாள் ஓய்வெடுத்தேன். அங்கிருந்து நான் மற்றும் இன்னும் சிலருடன் தாய்லாந்து எல்லையைக் கடந்து மியான்மரில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

கடத்தல்காரர்கள்
கடத்தல்காரர்கள்

அங்கிருந்து படகில் ஒரு ஆறு வழியாக கே.கே.குரூப் இருக்கும் இடத்துக்குச் சென்று சேர்ந்தோம். எங்களை உள்ளே அழைத்துச் சென்றதும் அங்கு என்ன நடக்கிறது என்று நன்றாகப் புரிந்துவிட்டது. தினசரி 16 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும். பெரும்பாலும், அமெரிக்கா, கனடா நாட்டில் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் கிரிப்டோ கரன்சி மோசடி செய்வதுதான் வேலை. இவர்கள் கொடுக்கும் எந்த வேலையையும் ஏன், எதற்கு என்று எதுவும் கேட்காமல் செய்துமுடிக்க வேண்டும். செய்யவில்லை என்றால், எட்டுமணிநேரம் நிற்கவைத்துவிடுவார்கள். இல்லையென்றால் நமக்கு மொட்டை அடித்துவிடுவர்கள் " என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``அவர்களை எதிர்த்துப் பேசினால், நான்கு நாள் சிறைத் தண்டனை. இங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் தான். அவர்கள் யாரிடமும் எதுவும் பேசவே முடியாது. உடல்நலம் சரியில்லை என்றால், ரூமில் அடைத்துவைத்துவிடுவார்கள். மருத்துவம் எல்லாம் பார்க்கமாட்டார்கள். சம்பளமும் கிடையாது, இப்படி நாடு விட்டு நாடு வந்து அடி, உதை வாங்கி சித்ரவதை அனுபவிக்கின்றோம். நான் வந்து மூன்று மாதம் ஆகிறது. ஆறு மாதம் காண்ட்ராக்ட் என்று சொல்கிறார்கள். ஆனால், பல மாதங்களாக இங்கேயே இருப்பவர்களையும் நான் பார்க்கின்றோம். தமிழர்கள் சிலர் ஒன்றாக ஒரே இடத்திலிருந்ததால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது.

கடத்தல்காரர்கள் இடம்
கடத்தல்காரர்கள் இடம்

நான் இருப்பது கே.கே பார்க் என்ற ஒரு இடம். இதுபோல இங்குப் பல இடங்கள் இருக்கின்றன. மியான்மரில் நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்ற அனைத்து விவரமும் இங்கிருக்கும் அரசு அதிகாரிக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு இங்கிருப்பவர்களிடம் பணம் வாங்கிவிட்டு எதுவும் தெரியாது என்று காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் இந்த நரகத்திலிருந்து உயிரோடு இந்தியா திரும்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய அரசை நாங்கள் மன்றாடி கேட்கின்றேன், எங்களை முடிந்தளவு விரைவாகக் காப்பாற்றுங்கள். இந்த இடத்தில் நரகத்துக்கு மேலான ஒரு கொடுமையை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். நாங்களும் இந்தியர்கள்தான் எங்களை இங்கேயே தவிக்கவிட்டுவிடாதீர்கள்" என்றார் பரிதாபமாக.

நமக்கு மியான்மரில் இப்போது அங்கிருக்கும், முன்பு அங்கிருந்த நபர்களின் தொடர்பு கிடைக்கிறது. அங்கு எங்கே தங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கிறது. இதை ஒரு அரசு நினைத்தால் செய்யமுடியாத என்ன.. என்ற கேள்வி எழுகிறது. ஐ.டி வேலை என்று அழைத்துச் சென்று, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சட்டவிரோதமாக அவர்களைக் கடத்தி, ஒரு இடத்தில் அடைத்துவைத்து கொடுமை செய்துகொண்டிருக்கிறார்கள். நீண்டநாள்களாக நடக்கும் இந்த கொடுமை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இனியும் எந்த தாமதமும் இல்லாது, கடத்தல் கும்பலிடம் கொடுமையை அனுபவித்து வரும் இந்தியர்களை உடனடியாக மீட்டுவரவேண்டும்.

கடத்தல்காரர்கள்
கடத்தல்காரர்கள்

அரசு தரப்பில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அங்குச் சிக்கியிருக்கும் நபர்களோ அங்கிருக்கும் அதிகாரிகளில் உள்ள சில கருப்பு ஆடுகள், கடத்தல் கும்பலுடன் கைகோர்த்துச் செயல்படுகிறது என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இந்த விவகாரத்தில், இந்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி மியான்மரில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்டுவரவேண்டும். அதே வேளையில், இந்தியாவிலிருந்து அந்த கடத்தல் கூட்டத்துக்காக வேலை செய்யும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது...

செய்யுமா அரசு.?!