Published:Updated:

சவுதியிலிருந்து விண்ணுக்கு முதல் பெண்| சீன முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை! - World News Round up

Vikatan World News Round up
Listicle
Vikatan World News Round up

விண்வெளிப் பயணத்துக்கு ஆயத்தமாகும் முதல் சவுதி பெண்! | மெக்ஸிகோ: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்! - காரணம் என்ன? | `ஓய்வா?' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் வுடி ஆலன்!


1

விண்வெளிப் பயணத்துக்கு ஆயத்தமாகும் முதல் சவுதி பெண்!

சமீபத்தில் புதிய விண்வெளி வீரர்கள் திட்டத்தை தொடங்கியிருக்கும் சவுதி அரேபியா, தற்போது குறுகிய-நீண்ட விண்வெளிப் பயணங்களுக்காக வீரர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறது. 'விஷன் 2030' என்ற இந்த விண்வெளி ஆய்வு முயற்சியில் முதல் பெண் வீராங்கனையை விண்ணுக்கு அனுப்பவிருக்கிறது சவுதி. அமெரிக்க விண்களத்தில் சவுதி வீரர்களை அனுப்பவும் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கார் ஓட்ட உரிமை அளித்த நான்கே ஆண்டுகளில் பெண்களை விண்வெளிக்கு அனுப்பும் சவுதி அரசின் முயற்சிக்குப் பாராட்டுகள்!


2
வலுக்கும் மாணவர்கள் போராட்டம் ( Fernando Llano )

மெக்ஸிகோ: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்! - காரணம் என்ன?

2014-ல் காணாமல்போன 43 மெக்ஸிகன் மாணவர்களுக்கு நீதி கேட்டு தற்போது மெக்ஸிகோவில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இஸ்ரேல் எம்பஸி அமைந்திருக்கும் பகுதியில் நடந்துவரும் பெரிய அளவிலான போராட்டத்தில் தற்போது கலவரம் வெடித்திருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. போராட்டக்காரர்கள் காவலர்கள்மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இதில் இதுவரை 11 காவலர்கள் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் காணாமல்போனது தொடர்பான வழக்கில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது.


3
இயக்குநர் வுடி ஆலன்

`ஓய்வா?' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் வுடி ஆலன்!

86 வயதான பிரபல ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலன், சினிமாதுறையிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் கசிந்தன. கடைசியாக 'ரிப்கின்ஸ் ஃபெஸ்டிவல்' படத்தை இயக்கிய இவர், தன்னுடைய 'வாஸ்ப் 22' என்ற அடுத்த படத்தின் ரிலீஸுக்குப் பிறகு படம் இயக்கப்போவதில்லை என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாவல்கள் எழுதுவதில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் ``ஓய்வெடுப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆலன் விரைவில் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பை பாரிஸில் தொடங்கவிருக்கிறார்.


4
கின்னஸ் சாதனை!

ஸ்குவிட் கேம்: ரெட் லைட், கிரீன் லைட் விளையாடி கலிஃபோர்னியாவில் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள இர்வின் பல்கலைக்கழகத்தில் 1,415 பேரை வைத்து ஸ்குவிட் கேமின் ரெட் லைட், கிரீன் லைட் விளையாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். முன்னதாக 2015-ல் ஓரிகானின் வில்லமேட் பல்கலைக்கழகத்தில் 1,203 பேரை வைத்து விளையாடிய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தென் கொரிய விளையாட்டான ரெட் லைட்-கிரீன் லைட் ஸ்குவிட் கேமுக்குப் பிறகு தங்கள் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாக அதை விளையாடிய மாணவர்கள் தெரிவித்தனர்.


5
முன்னாள் நீதி அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனா: முன்னாள் நீதி அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் ஃபூ ஜெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் பெற்ற குற்றம், பங்குச் சந்தை ஊழல் வழக்கு, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவருக்கு இரண்டு வருட அவகாசத்துடன் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.