Published:Updated:

கியூபாவில் குடும்பச் சட்டத் திருத்த வாக்கெடுப்பு | சீனாவில் ரெட் அலர்ட் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
Listicle
உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

கியூபாவில் குடும்பச் சட்டத் திருத்தத்துக்கான வாக்கெடுப்பு! | ரஷ்யப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு | பதவியை ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் நிதியமைச்சர்! | சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிக்கு ரெட் அலர்ட்!


1
கியூபா

ஒரே பாலினத் திருமணம் முதல் வாடகைத் தாய் ஒப்பந்தம் வரை... கியூபாவில் குடும்பச் சட்டத் திருத்தத்துக்கான வாக்கெடுப்பு!

கியூபாவில் 1975-ல் பிறப்பிக்கப்பட்ட குடும்பச் சட்டத்தை தற்போது திருத்தம் செய்ய வாக்கெடுப்புகள் நடந்துவருகின்றன. ஒரே பாலினத் திருமணம், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் குறித்த முக்கிய முடிவுகளை உள்ளடக்கிய இந்த வாக்கெடுப்பில் அந்த நாட்டு அதிபர் மிகேல் டயஸ் கேனல் அவர் மனைவி இருவரும் வாக்குகளை ஹவானாவில் பதிவுசெய்தனர். ``மக்களிடையே பன்முகத்தன்மையை மேம்படுத்த இது மிகவும் அவசியமான சட்ட த்திருத்தம். எல்லா மக்களும் சமம் என்ற உத்தரவாதத்தை வழங்கும் ஒரு மாற்றம் இது" என்றார் அதிபர் மிகேல்.

கியூபாவில் வாக்களிக்கத் தகுதியுடைய 80 லட்சம் வாக்காளர்களில் 54.8 ℅ பேர் இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பாக வாக்களித்தனர். இந்தத் திருத்தம் பிறப்பிக்கப்பட்டால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உரிமைகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2

பதவியை ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் நிதியமைச்சர்!

பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயிலும், அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் தற்போது லண்டன் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நிதியமைச்சர் மிஃப்தா அதிகாரபூர்வமாக தன்னுடைய பதவியைக் கூடிய விரைவில் ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இது தொடர்பாக அவர், ``மியான் நவாஜ் ஷெரீஃப், பிரதமர் ஷெபாஸ் உடனான சந்திப்பில் வாய்மொழியாக என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். பாகிஸ்தானைச் சென்றடைந்த பிறகு அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்யவிருக்கிறேன். இரண்டு முறை பாகிஸ்தான் நிதியமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய கௌரவம்"எனப் பதிவிட்டிருக்கிறார்.


3
பெட்ரோ சான்செஸ்

ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸுக்கு கொரோனா தொற்று!

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் ஐ.நா பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பிய இரண்டே நாள்களில் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார். இதனால் பார்சிலோனாவில் நடைபெறவிருந்த சந்திப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் தென்-ஐரோப்பிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


4
சீனா வறட்சி ( AP )

சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிக்கு ரெட் அலர்ட்!

சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரி தற்போது வறண்டுவிட்டதால், சீனாவின் ஜியாங்ஜி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. யாங்சே நதியின் வெள்ளக் கட்டுப்பாட்டில் போயாங் ஏரிக்கு முக்கியப் பங்குண்டு. சீனா தற்போது வரலாறு காணாத வெப்பநிலையைச் சந்தித்துவருவதால், போயாங் நதியின் நீரளவு இன்னும் குறையும் என்று சீனாவின் நீரளவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.


5

ரஷ்யப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 15 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் நுழைந்த ஒருவர், மனிதாபிமானமின்றி அங்கிருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார். அதில் இதுவரை 11 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விசாரணையில் அவர் அதே பள்ளியில் படித்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபர் இறுதியில் தன் உயிரையும் மாய்த்துக்கொண்டார். இந்தச் சம்பவத்தை ரஷ்ய அதிபர் புதின், ``மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதல்" என்று விமர்சித்திருக்கிறார்.