ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவால், பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொங்கிய போரானது இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. போரை நிறுத்த பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் இன்னும் இறுதியான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. போர் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் அவ்வப்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. எனினும் அத்தகைய செய்திகள் அனைத்தும் வதந்திகள் என ரஷ்யாவும் மறுத்துவருகிறது.

இந்த நிலையில் அத்தகைய செய்திகளுக்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது வெளி உலகில் நடமாடுவது புதின் இல்லை, புதினின் வேடத்தில் போலியாக ஒருவர் நடமாடுகிறார் என உக்ரைன் உளவுத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக அண்மையில் உக்ரைனிய டி.வி சேனலுக்கு பேட்டியளித்த உக்ரைன் ராணுவ உளவுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ்(Kyrylo Budanov), ``புதின் தன்னைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக பாடி டபுள்களை(Body Double) பயன்படுத்துகிறார். புதினின் சமீபத்திய பொது தோற்றங்களில் அவரின் பழக்கவழக்கங்கள், நடை மற்றும் உயரம் கூட சற்று மாறியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, புதினின் காதுகள் அவரின் முந்தைய படங்களில் இருப்பதை விடவும் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவும் ஒருவகையில் கைரேகையைப் போன்றது தான். ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அதை மீண்டும் செய்ய முடியாது. மேலும், புதின் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அதில் பெரிய சந்தேகம் எதுவும் இல்லை" என கூறினார்.
இதேபோல் உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி-யும்(Vadym Skibitsky), ``புதின் நிறைய இரட்டையர்களைப் பயன்படுத்துகிறார். சில சமயங்களில் அது உண்மையான புதினா அல்லது அவருக்குப் பதில் வேறு யாராவது வருகிறார்களா என்பதைக் கண்டறிவது கடினம்" பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.

புதின் பற்றிய செய்திகள் இப்படி பல வந்தாலும் கூட, அது தீர்க்கமாக உண்மையானதா என்று அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளிவருவதில்லை. இருப்பினும், இதுவும் உண்மையா அல்லது வதந்தியா என்று ரஷ்ய தரப்பிலிருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.