Published:Updated:

`இது உங்கள் அமெரிக்கா அல்ல' - ட்ரம்ப்பை சாடும் மிச்சேல் ஒபாமா!

மலையரசு

அடுத்தநாள் நடந்த பொதுக்கூட்டத்திலும் தொடர்ந்து இனவெறி தொடர்பாக பேச, கூட்டத்தில் இருந்த அவரது ஆதரவாளர்களும் `அவர்களை நாட்டுக்கே திருப்பி அனுப்புங்கள்' எனக் கோஷம் எழுப்பினர்.

மிச்சேல் ஒபாமா
மிச்சேல் ஒபாமா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தான் தேர்தலில் போட்டியிட்ட காலகட்டங்களில் `குடிபெயர்ந்தவர்கள்' பற்றியே அதிகமாகப் பேசினார். `அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்று சொல்லியே அதிபராக வந்தார். சொல்லியது மட்டுமல்லாமல், அதிபராக பதவியேற்றதும் 7 இஸ்லாமிய நாடுகளிலிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் வர தடைவிதித்தார். சட்டத்துக்குப் புறம்பாக புலம் பெயர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார். ஒட்டுமொத்த உலகமும் அவரின் போக்குக்கு கண்டனம் தெரிவித்தன. இதுமட்டுமில்லை, இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா வழங்குவதில் கெடுபிடி, மெக்ஸிகோ வழியாக குடிபெயர்பவர்களைத் தடுக்க சுவர் கட்டுவது என அமெரிக்க புலம்பெயர்ந்தவர்களின் தேசம் என்பதை மறந்தது, அவர்களுக்கு எதிராக தினமும் எதாவது ஒரு அட்ராசிட்டியை செய்துவருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கிடையே, சமீபத்தில் ``பேரழிவு நாடுகளில் இருந்து வந்த ஜனநாயகக் கட்சி பெண் எம்.பி-க்கள் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க அரசை விமர்சிக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும். அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள குறைகளைத் தீர்த்துவிட்டு, இங்கு வந்து கருத்து சொல்லலாம்" என்று ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்தவர்களான ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகிய நான்கு எம்.பி-க்களை மறைமுகமாக குறிப்பிட்டு வரிசையாக மூன்று ட்வீட்களை பதிவிட மீண்டும் சர்ச்சையை எதிர்கொண்டார். அடுத்தநாள் நடந்த பொதுக்கூட்டத்திலும் தொடர்ந்து இனவெறி தொடர்பாக பேச, கூட்டத்தில் இருந்த அவரது ஆதரவாளர்களும் `அவர்களை நாட்டுக்கே திருப்பி அனுப்புங்கள்' எனக் கோஷம் எழுப்பினர்.

அமெரிக்காவில் இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக மாற, இனவெறி கருத்தைக் கூறிய விவகாரத்தில் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல், ட்ரம்ப்பை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``உண்மையிலேயே நம் நாட்டை சிறந்ததாக்குவது எது என்றால் அதன் பன்முகத்தன்மை தான். பல ஆண்டுகளாக அந்த அழகை நான் பல வழிகளில் பார்த்திருக்கிறேன்.

மிச்சேல் ஒபாமா
மிச்சேல் ஒபாமா

நாம் இங்கு பிறந்தாலும், இங்கு தஞ்சம் புகுந்தாலும், இது நம் அனைவருக்குமான ஓர் இடமாக இருக்கிறது. இது எனது அமெரிக்கா அல்லது உங்கள் அமெரிக்கா அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது எங்கள் அமெரிக்கா" எனக் கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து தான் கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண்களை அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.