Published:Updated:

`அவர்களுக்கான நிதியை நிறுத்தவுள்ளோம்’ - WHO- வை மிரட்டும் அதிபர் ட்ரம்ப் #Coronavirus

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

உலக சுகாதார அமைப்பு வைரஸ் நடவடிக்கைகளில் முறையாகச் செயல்படவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 4 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைந்தபாடில்லை.

WHO
WHO

இந்த நிலையில், கொரோனா பற்றி முன்னரே அறிந்தும் உலக சுகாதார அமைப்பு முறையான தகவல்கள் கொடுக்கவில்லை எனக் கடுமையாகச் சாடியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவில் கொரோனா வெடித்த பிறகு தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டு நிலவரம் மற்றும் உலகின் பிற நாடுகள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார் ட்ரம்ப். அதன்படி நேற்று பேசும்போதுதான் உலக சுகாதார அமைப்பை விமர்சித்துள்ளார்.

`முதலில் மனிதனை மனிதனாகப் பாருங்கள்!’ - ஆய்வாளர்களின் கருத்தும் WHO -வின் கண்டனமும் #Corona

அவர் பேசும்போது, ``உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். உலக சுகாதார அமைப்பு கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. வைரஸை எதிர்கொள்வதில் உலக சுகாதார அமைப்பு சரியாக நடந்துகொள்ளவில்லை. அது சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

சில காரணங்களால் நாங்கள்தான் உலக சுகாதார அமைப்புக்கு அதிகளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதன் பெரும் பகுதியை நிறுத்த ஆலோசித்து வருகிறோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, எங்களின் ஆலோசனை. சீனாவில் முதல் வைரஸ் தொற்று உறுதியானதும் சீனாவுக்கான எங்கள் நாட்டு எல்லைகளை மூட நாங்கள் உலக சுகாதார அமைப்பினரிடம் ஆலோசனை கேட்டோம். ஆனால், அவர்கள் எல்லைகளை மூடத் தேவையில்லை எனத் தவறான ஆலோசனை மட்டுமே வழங்கினர். நல்லவேளை அவர்களின் கருத்தை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் ஏன் எங்களுக்கு இதுபோன்ற தவறான பரிந்துரையை வழங்கினார்கள்?” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு