போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள பெரும்பாலான மாணவர்கள் பதுங்குகுழிகளில் தங்கியிருக்கின்றனர். கார்கிவ், கீவ் நகரங்களில்தான் பெரும்பாலான மாணவர்கள் சிக்கியிருக்கின்றனர். கீவ் நகரிலிருந்து உடனே காலி செய்யுங்கள் என்று மத்திய அரசு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக்கூட ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று இந்திய தூதரகத்தின் மீது மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமி என்ற இடத்திலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவி மெஹ்ருக் நிகர் இது தொடர்பாக இந்திய மீடியா ஒன்றைத் தொடர்புகொண்டு பேசுகையில், ``இங்கிருக்கும் மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான் வழக்கமாக கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்வேன். ஆனால் இப்போது மாத்திரை இல்லாததால் எனது மூட்டுவலி அதிகமாக இருக்கிறது.

எனது ஹிமோகுளோபின் அளவும் வெகுவாக குறைந்து நாளுக்கு நாள் நான் பலவீனமடைந்துவருகிறேன். எங்களிடமிருந்த சானிட்டரி நாப்கின்கூட காலியாகி விட்டது. வெளியில் சென்று வாங்கி வரலாம் என்றால் தெருவில் எந்நேரமும் ராணுவம் ரோந்து வந்துகொண்டிருக்கிறது. எங்களது விடுதியைச் சுற்றி வெடிகுண்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் வெளியில் செல்ல முடியவில்லை. எனவே பெட்ஷீட் துணிகளைக் கிழித்து அவற்றை சானிட்டரி நாப்கின்களாக பயன்படுத்துகிறோம். இது சுகாதாரமற்றது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். நிகர், கௌஹாத்தியைச் சேர்ந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபாட்னாவைச் சேர்ந்த மொகமத் பைசல் என்ற மாணவரும் இங்குதான் படித்துவருகிறார். அவர் இது குறித்துக் கூறுகையில், ``நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் விடுதியில் கஷ்டப்படுகின்றனர். வெளியில் சென்று தண்ணீர்கூட வாங்கி வர முடியாத நிலையில் இருக்கிறோம். இப்போது சோடா தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டிருக்கிறோம். சாப்பாடு இல்லாமல் குழாய்த் தண்ணீரை குடித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லையைக் கடக்கும் நபர்களிடம் ரஷ்யப் படைகள் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகக் கேள்விப்பட்டு மிகவும் அச்சத்தில் இருக்கிறோம். உக்ரைன் மக்கள் அனைவரையும் போரிடும்படி உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ரிக்ஷா இழுப்பவர்கள்கூட துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு போரிடுகின்றனர். எனக்கு கணித பாடம் நடத்தும் ஆசிரியர்கூட ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் போருக்குச் சென்றிருக்கிறார்” என்றார்.

பதுங்கு குழிக்குள் கழிவறை வசதிகூட இல்லாமல் பல மணி நேரம் சிறுநீர்கூட கழிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இந்திய மாணவர்களை உக்ரைன் எல்லைக்கு அழைத்துச் செல்லும் டாக்ஸி டிரைவர்கள் மாணவர்களை நடுவழியில் நிறுத்திக்கொண்டு `குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால்தான் மேற்கொண்டு செல்வேன்’ என்று கூறி மிரட்டுகின்றனர். சில நேரங்களில் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இதனால் டாக்ஸியில் உக்ரைன் எல்லைக்குச் செல்ல பயமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.