Published:Updated:

`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..!' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தால் கடந்த ஒரு வாரமாக மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்துள்ளது என்றே கூறவேண்டும். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் தங்கள் பங்குக்குப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்
போராட்டம்

பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் இந்தியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். இதுதொடர்பாக 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில், `11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்' என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் மாற்றம் செய்து இனி அவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மதத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் இந்தியாவின் மதச்சார்பின்மை என்னும் அடையாளத்தை இது சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தியாவில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் தங்கள் நாட்டு மக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

இது பற்றிப் பேசியுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் கோஹர் ரிஸ்வி, (Gowher Rizvi), ``இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் அதனால் நடக்கும் போராட்டம் போன்றவை அந்நாட்டின் உள்விவகாரம். எங்கள் நாட்டிலிருந்து வெளியேறி சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் மக்களை நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர் என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும். இது பொதுவான ஒரு நடைமுறைதான். இதில் சிக்கலை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன்.

ஹசீனாவின் ஆலோசகர்
ஹசீனாவின் ஆலோசகர்

மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சமுதாயத்துக்கு வங்கதேசம் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. இங்கு இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள் போன்ற அனைவரும் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். `தேசியக் குடியுரிமைப் பதிவேடு குறித்து வங்கதேசம் கவலைப்படத் தேவையில்லை' என இந்தியப் பிரதமர் மோடி எங்களுக்கு உறுதியளித்திருந்தார். இந்தியா - வங்கதேசம் நட்பு கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தியா எப்போதும் நம்முடன் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன், இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வங்கதேச மக்களில் பட்டியலைத் தருமாறு கேட்டுள்ளார். மேலும், அவர்களை மீண்டும் வங்கதேசம் திரும்ப அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.