Published:Updated:

அமெரிக்கா:`நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி!’ - அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

``நாங்கள் செய்த பணிகளை இதுவரை யாரும் செய்யவில்லை. இப்போது நாங்கள் அதை இரட்டிப்பாகச் செய்கிறோம். தேர்தல் தினத்தன்று நீங்கள் நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கைகளைப் பார்க்கப்போகிறீர்கள் என நினைக்கிறேன்” - அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் முதன்மையானது அமெரிக்காதான். இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் 1.35 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கடுமையாக அமெரிக்காவில் பாதிப்பு ஏற்படக் காரணம், அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியமான நடவடிக்கைகள் எனக் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன. கொரோனா காரணமா சரிந்த பொருளாதாரம் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் போராட்டங்கள் தொடர்பான கருத்துகள் ஆகியவையும் ட்ரம்பின் மீது விமர்சனங்களைக் குவித்தன.

இதனால், வரும் தேர்தலில் ட்ரம்ப்புக்கு மக்களிடம் ஆதரவுகள் குறைந்து வருவதாகப் பேசப்பட்டது. ட்ரம்புக்கு எதிராகப் போட்டியிடும் ஜோ பிடன், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ட்ரம்ப் வரும் நவம்பர் மாத அதிபர் தேர்தலில் `நான் வெற்றிபெறுவேன்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது ட்ரம்ப் பேசுகையில், ``இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. நாங்கள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். இப்போது மீண்டும் முதலில் இருந்து பணியைத் தொடங்க வேண்டும். நாங்கள் செய்த பணிகளை இதுவரை யாரும் செய்யவில்லை. இப்போது நாங்கள் அதை இரட்டிப்பாகச் செய்கிறோம். தேர்தல் தினத்தன்று நீங்கள் நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கைகளைப் பார்க்கப்போகிறீர்கள் என நினைக்கிறேன். மூன்றாவது காலாண்டு மிகவும் நன்றாக இருக்கும். நான்காவது காலாண்டு அதைவிட சிறப்பாக இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டுகள் மிகவும் சிறப்பான பொருளாதார ஆண்டாக இருக்கப்போகிறது. அப்போது, நான் அதிபராக இருக்கப்போகிறேன். நாங்கள் செய்துள்ள மிகச்சிறந்த பணிகளை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

கொரோனா:`முதன்முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்!’ - அரசியலும் விமர்சனங்களும்...

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவது தொடர்பாகவும் தற்போது மக்களிடம் அவருக்கு ஆதரவு குறைந்து வருவது தொடர்பாகவும் கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இதற்குப் பதிலளித்த அவர், ``இல்லை. எங்களுக்கு ஆதரவு இருப்பதாகவே நினைக்கிறேன். அவை, உண்மையான வாக்குகள். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றோம். இதைபோல மீண்டும் வெற்றி பெறுவோம். கருத்துக்கணிப்புகள் போலியானவை. அனைத்தையும் நான் குறிப்பிடவில்லை. சிலவற்றைக் கூறுகிறேன்” என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
AP

ஊடகங்கள் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ``அவர்கள் ஒருபோதும் நியாயமாக இல்லை. இருக்கவும் மாட்டார்கள். அவர்கள் திசை திருப்பி விடுவார்கள். மிக விரைவிலேயே இது நடக்கும் என நினைக்கிறேன். வாக்கெடுப்பில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். இந்த நாடு இதற்கு முன்பு பார்க்காத வகையில் பெரும்பான்மையுடன் நாங்கள் இருப்பதாக நினைக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

`இனவெறி போராட்டம் என்ற பெயரில் வன்முறை’ - சுதந்திரதின உரையில் ட்ரம்ப் ஆவேசம்
அடுத்த கட்டுரைக்கு