`பாகிஸ்தானுக்கு பதிலளித்துவிட்டார்!’ - `குளோபல் கோல்கீப்பர்’ மோடியைப் புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்

அமெரிக்கா-இந்தியா இருதரப்பு சந்திப்பு நிகழ்ச்சியின்போது அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். முன்னதாக, அதிக இந்தியர்கள் வாழும் நகரமான ஹூஸ்டனில் நடந்த ’ஹௌடி மோடி’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, நியூயார்க்கில் நடந்த காலநிலை தொடர்பான ஐ.நா மாநாட்டில் கலந்துகொண்டார். தொடர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், அறக்கட்டளை சார்பில் ’குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பைப் பேசி, இந்த விருதை இந்திய மக்களுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இணைந்து, அமெரிக்கா - இந்தியா இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஹூஸ்டனில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதற்காக ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார் மோடி. அத்துடன், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் ட்ரம்ப்புக்கு பரிசாக வழங்கி, ‘ அதிபர் ட்ரம்ப், எனக்கும் இந்தியாவுக்கும் சிறந்த நண்பர்’ எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய ட்ரம்ப், “ இந்தியப் பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவர், சிறந்த தலைவரும்கூட. எனக்கும் மோடிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. நான் அவர்மீது நிறைய மதிப்பு வைத்துள்ளேன். முன்னதாக, இந்தியாவில் நிறைய கருத்து வேறுபாடுகள், சண்டைகள் நிலவி சற்று மோசமான நிலையிலிருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் மோடி, ஒரு தந்தையைப் போல் செயல்பட்டு சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்றுசேர்ந்துள்ளார். இவர், இந்தியாவின் தந்தையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இனி நாம் அவரை ’இந்தியாவின் தந்தை’ என்றே அழைக்கலாம்.
மோடி, மிகவும் அருமையான வேலையைச் செய்துவருகிறார். நான் இந்தியாவை எவ்வளவு நேசிக்கிறேன், உங்கள் பிரதமரை எவ்வளவு விரும்புகிறேன் என்பதைக் காட்டவே, ’ஹௌடி மோடி’ நிகழ்ச்சி நடந்ததாக எனக்குத் தோன்றுகிறது. அங்கிருந்த மக்கள், இந்த மனிதரைப் பெரிதும் நேசிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி அறை முழுவதும் ஒரு உத்வேகம் இருந்ததை நான் உணர்ந்தேன்” என மோடியைப் புகழ்ந்து பேசினார்.

இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற இந்த இருதரப்பு சந்திப்பில், இரு நாடுகளின் பொருளாதாரம், தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம் போன்ற பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் விவகாரம் பற்றிப் பேசிய அதிபர் ட்ரம்ப், “ இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத பிரச்னைகளை மோடியே கவனித்துக்கொள்வார். இவர், சிறந்த பிரதமர். இவரால் அந்தப் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
'பாகிஸ்தான் பிரதமருக்கு நீங்கள் என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்' என ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘ பாகிஸ்தானுக்கு நான் பதிலளிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கான பதிலை மோடிதான் அளிக்க வேண்டும். அவர், முன்னரே சத்தமாகவும் தெளிவாகவும் பதில் அளித்துவிட்டார். பாகிஸ்தான் விவகாரத்தை மோடி பார்த்துக்கொள்வார்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது பேசிய விஷயங்கள் அனைத்தும் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளன. முக்கியமாக, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரச்னை தொடர்பாக ட்ரம்ப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.