ரஷ்யா - உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். அவர் உக்ரைனிலுள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்றுவந்தார். இந்த நிலையில், அவரின் நண்பர் ஶ்ரீகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "கடந்த 5 நாள்களாக உக்ரைனிலுள்ள கார்கிவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் நான், நவீன், இன்னும் சில நண்பர்கள் பதுங்கியிருந்தோம்.
கார்கிவிலிருந்து வெளியேறுவது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டோம். நேற்று (நேற்று முன்தினம்) மாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்த நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) இரவே எங்களிடம் இருந்த உணவுப்பொருள்கள் தீர்ந்துவிட்டன. நான் காலையில் தூங்கி எழுந்தபோது நவீன் இல்லை. அவனின் செல்போனில் தொடர்புகொண்டபோது குடியிருப்புக்கு அருகில் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குச் சென்றிருப்பதாகவும், கடையில் பொருள்கள் வாங்கப் பணம் அனுப்பிவிடக் கேட்டிருந்தான்.
நானும் சரி எனப் பணம் அனுப்பிவிட்டு அவனுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது அவன் என் அழைப்பை எடுக்கவில்லை. அப்போது மிகப் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தமும், துப்பாக்கிச் சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன. நான் பதற்றத்துடன் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேன். அவன் வரவே இல்லை என்பதால் 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவனை செல்போனில் தொடர்பு கொண்டபோது யாரோ ஓர் உக்ரேனியர் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை அதனால் எனக்கு அருகில் இருக்கும் மற்றொரு உக்ரேனியப் பெண்ணிடம் செல்போனை கொடுத்துப் பேசச் சொன்னேன். அவர் பேசும்போதே அழத் தொடங்கினார். நான் கேட்டபோது நவீன் இறந்துவிட்டான் எனக் கூறினார். நானும் நண்பர்களும் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு குண்டு வெடித்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை.
அவனைத் துப்பாக்கியால்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அவனது உடல் எங்கே என்றுகூட எங்களுக்குத் தெரியாது. இங்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் இருக்கிறோம். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2,000 பேர் வரை இருக்கிறோம். இங்கிருந்து அண்டை நாட்டுக்குச் செல்ல உக்ரேனியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதிக குண்டுவெடிப்பு காரணமாக நாங்கள் வெளியே செல்ல பயப்படுகிறோம். வெளியே செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் செல்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.