Published:Updated:

தவறுதலாக வெளியான வங்கிக் கணக்கு விவரங்கள்; அதிர்ச்சியில் ட்ரம்ப்!- சர்ச்சையில் வெள்ளை மாளிகை ஊழியர்

கெய் லீ மெக்கானி
கெய் லீ மெக்கானி ( AP )

``ட்ரம்ப் முக்கிய நபர் என்பதால் அவரது கணக்குக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கும். எனவே, ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 95,000 மக்கள் அந்நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்தாமல் ட்ரம்ப், சீனாவின் மீது தொடர்ந்து விமர்சனங்களை எழுப்புவது, ஊரடங்கு தொடர்பான முடிவுகள், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளிலும் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இந்த நிலையில், தற்போது ட்ரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக அவரது உதவியாளர் வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கெய் லீ மெக்கானி
கெய் லீ மெக்கானி
AP

அதிபர் ட்ரம்ப் தனது பில்லியனர் அந்தஸ்தின் காரணமாக தனது வருடாந்திர அதிபர் பதவிக்கான சம்பளமான 4,00,000 டாலரை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதற்குப் பதிலாக அவர் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் ஒன்றுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குவதாகவும் கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அவ்வகையில், கடந்த காலங்களில் 1,00,000 டாலர்களை சிறு வணிக நிர்வாக குழு, ஓபியாய்டு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்குப் பயன்படும் வகையில் சர்ஜன் ஜெனரல் அலுவலகம், தேசிய ஆல்கஹாலிஸம் மற்றும் ஆல்கஹால் அபியூஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கினார்.

இந்த நிலையில், ட்ரம்ப் தனது 2020-ம் ஆண்டு வருவாயில் 1,00,000 டாலர்களை சுகாதாரம் மற்றும் மனித சேவை துறைக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதை, அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலர் கெய் லீ மெக்கானி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

`ஜோ பிடன் வெற்றி பெறுவதே சீனாவின் பெரும் ஆசை!’ - எதிர்க்கட்சிகளையும் சேர்த்து விமர்சிக்கும் ட்ரம்ப்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் அதற்கு எதிரான போராட்டங்களுக்குப் பயன்படவும் உதவியளிக்கும் வகையில் இந்தப் பணத்தை அவர் அனுப்பியதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பின்போது கெய் லீ மெக்கானி அதிபர் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் ரூட்டிங் எண்களை வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தவறுதலாக வெளிப்படுத்தினார். இதுமாதிரியான பத்திரிகை சந்திப்புகளில் அதிபர்களின் வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படாமல் இருக்க போலியான காசோலை படிவங்களே காண்பிக்கப்படும் என்று கூறுவது வழக்கம். எனினும், இந்தச் சந்திப்பில் அசல் காசோலை காண்பிக்கப்பட்டதுடன், அதிபரின் வங்கிக் கணக்கின் பிற விவரங்களும் அதில் இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வங்கிக் கணக்கின் புகைப்படங்கள் வைரலாகத் தொடங்கின.

இதுதொடர்பாக நிர்வாக அதிகாரி ஒருவர், ``போலியான காசோலைகள் ஒருபோதும் விளக்கங்கள் தரும்போது பயன்படுத்தப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளார். இதனால், மெக்கானி சுட்டிக்காட்டியது சட்டபூர்வமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ``இந்தத் தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வது சிறந்த நடைமுறை அல்ல” என சில அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும், ``உங்களிடம் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாதபட்சத்தில், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரூட்டிங் எண்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட நபர்கள் அந்த நிதியை எளிதாக அனுகக்கூடிய வழிகள் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், ட்ரம்ப் முக்கிய நபர் என்பதால் அவரது கணக்குக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். எனவே, ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜூட் டீரே வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அதிபர் ட்ரம்ப்பின் சம்பளம், வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படும் வகையில் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால், அந்த காசோலை உண்மையா இல்லை போலியானதா என்பதில் கவனம் செலுத்துகிறது. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம்” என்று கடுமையாகக் கூறியுள்ளார். எனினும், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்!’ - கொதித்த ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு