Published:Updated:

`கொரோனா அச்சுறுத்தல் முதல் வடகொரியா மோதல் வரை!’– அதிபராக ஜோ பைடனின் சவால்கள் என்னென்ன?

ஜோ பைடன் ( AP | Patrick Semansky )

அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனேயே விடைபெற்றிருக்கிறார்.

`கொரோனா அச்சுறுத்தல் முதல் வடகொரியா மோதல் வரை!’– அதிபராக ஜோ பைடனின் சவால்கள் என்னென்ன?

அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனேயே விடைபெற்றிருக்கிறார்.

Published:Updated:
ஜோ பைடன் ( AP | Patrick Semansky )

நான்காண்டுகளுக்குப் பிறகு புதியதொரு புத்துணர்ச்சியைப் பெற்றதுபோல் அமெரிக்க மக்கள் மாற்றத்தை நோக்கி அடியெடுத்துவைக்கத் தொடங்கியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறது. மறுமுனையில், அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனேயே விடைபெற்றிருக்கிறார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

ட்ரம்ப் விடைபெற்றாலும், அவர் ஏற்படுத்திய சர்ச்சைகளின் விளைவுகள் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. பதவியேற்பு விழாவின்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ராணுவச் செயலர் ரையன் மெக்கார்த்தி எச்சரித்திருந்தார். `ட்ரம்ப் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்’ என 60,000-க்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து 25,000 தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸ் என ஏழு அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது கேபிடல் ஹில் கட்டடம். கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளோடு அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் பதவியேற்றார். பதவியேற்ற பின்னர் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்படிக்கையில் இணைவது உள்ளிட்ட பல உத்தரவுகளில் அதிபர் பைடன் கையெழுத்திட்டார். அதிபராகப் பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் முன்னிற்கும் சவால்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா தாக்குதலும்... அமெரிக்கப் பொருளாதாரமும்!

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போதே ட்ரம்ப்பின் செயல்களைக் சுட்டிக்காட்டி விமர்சித்த ஜோ பைடன், தான் அதிபரானால் ட்ரம்ப் அமெரிக்க அரசியல் களத்தில் ஏற்படுத்திய அனைத்து களைகளையும் அகற்றுவேன் என்று தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போது, ஜோ பைடன் முன்னிற்கும் மிகப்பெரும் சவால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிதான். ஏனெனில், கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப்பின் அலட்சியப்போக்கே அமெரிக்கா இன்றளவும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்க முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் கொரோனாவால் வீடுகளை இழந்து, வேலைகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சீரமைக்க கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில்தான் முதலில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பைடன் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்ப் OUT - பைடன் IN

ட்ரம்ப் ஆட்சி தொடங்கிபோது இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்திருந்தார். அதை, தான் அதிபர் பொறுப்புகளை ஏற்றவுடன் உடனடியாக நீக்கப்போவதாக பைடன் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

அதேபோல், ட்ரம்ப் ஆட்சியில் பாரிஸ் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்போது, மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதற்கான கையெழுத்தை ஜோ பைடன் போட்டிருக்கிறார்.

பகையைத் தொடரும் எதிரி நாடுகள்!

வட கொரியாவைப் பொறுத்தவரை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து மோதல்கள் இருந்துவந்தது உலகறிந்த விஷயம். அதன் பின்னர், அணு ஆயுத விவகாரங்களில் ட்ரம்ப் வட கொரியாவைக் கடுமையாக எதிர்த்தார்.

தற்போது, ஜோ பைடன் புதிய அதிபராவதால் இரு நாடுகளுக்கிடையே நிகழ்ந்துவந்த பனிப்போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ``யார் அதிபரானாலும் சரி, அமெரிக்காதான் எங்களுக்கான நிரந்தர எதிரி” என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார்.

கிம் ஜாங் உன், ட்ரம்ப்
கிம் ஜாங் உன், ட்ரம்ப்

அதேபோல், கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஈரான் ராணுவ மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

அதேபோல், ட்ரம்ப் ஆட்சியின் தொடக்கம் முதலே அமெரிக்காவுடன் பகைமை பாராட்டிவந்த சீனாவும் ரஷ்யாவும் கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப்பின் செயல்பாடுகளால் மேலும் அதிருப்தி அடைந்துள்ளன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்களும் கப்பல்களும்!

அமெரிக்க ராணுவத்தை மேம்படுத்த புதிய ரக ராணுவக் கப்பல்களையும், உயர் ரக ஆயுதங்களையும் தயாரிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்துவிட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இதை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

இது தவிர, சமீபத்தில் அரங்கேறிய செனட் தாக்குதல் சம்பவத்தில் தேசியப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அதைச் சீரமைக்கும் பொறுப்பும் பைடனுக்கு இருக்கிறது.

ட்ரம்ப்பின் நான்காண்டு ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும்கூட அவரது நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகளைச் சீரமைக்க பைடனுக்கு சிறிது அவகாசம் தேவைப்படலாம்.

அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதலில் நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்போவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

1. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது.

2. பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது.

3. பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் நடவடிக்கை.

4. இனரீதியான பாகுபாட்டைக் களைவது.

என இந்த நான்கு விஷயங்களை ஜோ பைடன் பட்டியலிட்டிருக்கிறார். அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரை ஏற்புரை நிகழ்த்திய பைடன், தனது உரையில் `நம்பிக்கை’ என்ற வார்த்தையை அழுத்தி உச்சரித்தார். அத்தோடு, `பிளவுபட்டுக் கிடக்கும் அமெரிக்க மக்களை ஒன்றிணைத்து, அனைவருக்குமான அதிபராக இருப்பேன்’ என்று நம்பிக்கை விதைத்திருக்கிறார் ஜோ பைடன்.