Published:Updated:

இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன?! - விரிவான அலசல்

இலங்கை

இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது குறித்து இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கருத்து கேட்டோம்!

இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன?! - விரிவான அலசல்

இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது குறித்து இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கருத்து கேட்டோம்!

Published:Updated:
இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிகழ்ந்துவரும் அசாதாரண சூழ்நிலைகளைப் பற்றி முன்னுரை அளிக்கத் தேவையில்லை; அரசுக்கு எதிராகவும், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் கடந்த ஒரு மாத காலமாக அமைதிவழியில் போராடிவந்த மக்களை, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கினர். ராஜபக்சே பதவி விலகியதையடுத்து ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள், ராஜபக்சேவின் தூண்டுதலின்பேரில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக போராட்ட கள மக்கள், ராஜபக்சே, அவரின் ஆதரளவாளர்கள், குடும்பத்தினர்கள், அரசாங்க அமைச்சர்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினர்.

ராஜபக்சே ராஜினாமா
ராஜபக்சே ராஜினாமா

இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் கொழும்பு அரச மாளிகை, வீடுகளை விட்டுவிட்டு, தமிழ்ப் பகுதியில் இருக்கும் திரிகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் உத்தரவு வழங்கியிருக்கிறது. இதனால் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது குறித்து இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கருத்து கேட்டோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செந்தில் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்:

``கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பதவியேற்றபோது இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது 2.5 மில்லியனுக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதற்கு முழுப் பொறுப்பும் கோத்தபய ராஜபக்சேவின் தவறான நிர்வாகம்தான்! தேர்தலில் போட்டியிடாதவர்களை அமைச்சர்களாகவும், ராணுவ அதிகாரிகளை கவர்னர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அரசின் நிர்வாகம் சார்ந்த பதவிகளில் தன்னிச்சையாகப் பணியமர்த்தியதும்தான் முதன்மைக் காரணம். இப்படி நிர்வாகத் திறனற்ற, அனுபவமற்றவர்களை அரசின் முக்கியமான துறைகளில் உயரதிகாரிகளாக நியமித்து, அவர்களின் அனுபவமற்ற செயல்பாடுகளால் இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இவற்றை பொதுமக்கள், ஏனைய கட்சிகள் சுட்டிக்காட்டியபோதும் அதைத் திருத்திக்கொள்ள கோத்தபய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

செந்தில் தொண்டமான்
செந்தில் தொண்டமான்

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். உண்மையில், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு தாமாகவே முன்வந்து இருவரும் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், இப்போது பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டும்தான் பதவி விலகியிருக்கிறார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும். அப்போதுதான் மக்களின் கோபம் தணியும். மீண்டும் கோத்தபய ராஜபக்சே பதவியில் தொடர்ந்தால் இலங்கையின் நிலை இன்னமும் இப்படியேதான் இருக்கும். ஒருவேளை கோத்தபய பதவி விலகினால் அந்த இடத்துக்கு Parliament Speaker இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். அது இல்லாதபட்சத்தில் Chief Justice அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டை நிர்வகிக்கலாம். அதன் பிறகு புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இலங்கை இயல்புநிலைக்குத் திரும்ப சில ஆண்டுகளாவது ஆகும்!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலாந்தன், ஈழ எழுத்தாளர்:

``இப்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும், அரசியல் நெருக்கடி யாப்பு (அரசியலமைப்பு சட்டம்) நெருக்கடியாகவும் மாறியிருக்கிறது. எனவே, அரசியல் யாப்புக்குள்ளிருந்து தீர்வைக் காண்பது கடினம். யாப்பின்படி ஜனாதிபதிக்கே அதிக அதிகாரம் இருக்கிறது. அவரைப் பதவியிலிருந்து அகற்றுவது கடினம். மேலும், யாப்பின்படி ஒரு தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால், அதுவரை விலை உயர்வு பொறுத்திருக்காது, பொருளாதார நெருக்கடியும் காத்திருக்காது! எனவே, இப்போதைய தேவையாக இருப்பது யாப்புக்கு வெளியே சென்று, துணிச்சலான, இடைக்கால ஏற்பாடு ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதுதான்! அப்படி சிந்திக்க வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த இடத்தில் பலமாக இல்லை!

நிலாந்தன்
நிலாந்தன்

அவர்கள் இரண்டு காரணங்களுக்காக, அரசாங்கத்தோடு இணைந்து ஓர் இடைக்கால ஏற்பட்டுக்குப் போகத் தயாராக இல்லை; முதலாவது காரணம் அவர்கள் மத்தியில் வலுவான தலைமை இல்லை; இரண்டாவது காரணம், இந்த அரசாங்கத்தின் தோல்வியைப் பங்கிட அவர்கள் தயாராக இல்லை; தயங்குகிறார்கள்! எனவே, ஓர் இடைக்கால ஏற்பாடு உருவாகாதவரை, அரசியல் ஸ்திரத்தன்மை வராது. அரசியல் ஸ்திரத்தன்மை வராமல் உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற வெளி ஸ்தாபனங்களின் உதவிகள் வராது. இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் `Saline' போன்றவை. அவை மூச்சுவிடும் அவகாசத்தைத்தான் கொடுக்கும். அவை தற்காலிகமாக மின்வெட்டைக் குறைக்கும், விலைவாசி உயர்வை ஒப்பீட்டளவில் தடுக்கும்; ஆனால் அவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல! ஆகவே, யாப்புக்கு வெளியே ஓர் இடைக்கால ஏற்பாட்டைச் செய்து அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்!"

ஈழத்து நிலவன், லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்:

``முதலாவதாக, இலங்கை அரசமைப்பில் சர்வ அதிகாரமும் கொண்டிருக்கக்கூடிய அதிபர் முதலில் பதவி விலக வேண்டும். முக்கியமாக, அதிபராக இருக்கும் கோத்தபய பதவி விலகும் முன்னதாக மறுதேர்தலுக்கான ஒப்புதலை ஏற்படுத்திவிட்டுத்தான் பதவி விலக வேண்டும். இரண்டாவதாக, கடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும். இப்போதுள்ள கடன்சுமையை அடைப்பதற்காக எல்லா நாடுகளிடமும் வரைமுறையில்லாமல் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி, மேலும் கடன்சுமை அதிகரிக்க வழி செய்யாமல், வட்டியில்லாக் கடன்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும். மூன்றாவதாக, (விவசாயம் போன்றவற்றில்) சுய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் போனாலும்கூட, மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் செல்லவிடாமல், குறைந்தபட்சம் அடிப்படை உணவுத் தேவையையாவது பூர்த்திசெய்யும். அதேபோல இலங்கையில் நிரம்ப இருக்கும் ரத்தின வளங்கள், மீன் வளங்கள், தேயிலை போன்றவற்றை உள்நாட்டுத் தேவைபோக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும்.

ஈழத்து நிலவன்
ஈழத்து நிலவன்

நான்காவதாக, எம்.பி-க்கள், அமைச்சர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆடம்பர சொகுசு வாகனங்கள், சொத்துகள், சலுகைகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். அப்படிக் கொடுத்தாலும் பதவியைவிட்டு அவர்கள் இறங்கிய பின்னர் அவற்றை மீண்டும் அரசு திரும்பப் பெற வேண்டும். ஊழல் செய்யாத வகையிலும், அரசாங்கப் பணத்தை வீண் விரயம் செய்யாத வகையிலும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கென்று தனி ஒழுங்குமுறைச் சட்டம் இயற்ற வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐந்தாவதாக, மிக முக்கியமாக இலங்கையின் பிரதான உள்நாட்டுப் பிரச்னையாக விளங்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு நிரந்தரமான ஒஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism