Election bannerElection banner
Published:Updated:

அமெரிக்காவில் நடந்த `உள்நாட்டு பயங்கரவாதம்’ - எதைக் குறிப்பிடுகிறது எஃப்.பி.ஐ ?

வாஷிங்டன் வன்முறை
வாஷிங்டன் வன்முறை

ஜனவரி 6-ம் தேதி அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம’ என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல்!

ஜனவரி 6-ம் தேதியை அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு நாளாகப் பலரும் கருதினர். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருந்த அந்நாளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடல் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

கேப்பிடல் கட்டடத் தாக்குதலுக்கு ட்ரம்ப்தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு செனட் சபையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ஏற்கெனவே தனது ஆதரவாளர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், `அனைவரும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன் கூட வேண்டும்’ என்று பேசினார்.

வாஷிங்டன் வன்முறை
வாஷிங்டன் வன்முறை

ட்ரம்ப்பின் பேச்சைக் கேட்ட அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி கேப்பிடல் கட்டடத்துக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு வளையங்களை மீறி பல்வேறு தாக்குதல்களையும் நிகழ்த்தினர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார் எஃப்.பி.ஐ இயக்குநர்?

ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்’ என எஃப்.பி.ஐ-ன் இயக்குநரான கிறிஸ்டோஃபர் வ்ரே (Christopher A. Wray) தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு அவர் முதன்முதலாகப் பொதுவெளியில் தற்போது தோன்றியிருக்கிறார்.

ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க அமெரிக்க செனட்டின் நீதி விசாரணைக்குழு முன் ஆஜார் ஆனார் கிறிஸ்டோஃபர் வ்ரே.

அப்போது பேசிய அவர், `அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாதம் அதிகரித்துவருகிறது’ என்று அச்சம் தெரிவித்தார்.

மேலும், `ஜனவரி 6-ம் தேதி அன்று நடைபெற்ற வன்முறை பல பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கலாம்’ என்றும் தெரிவித்தார்.

``ஜனவரி ஆறாம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல தினங்களாக நாட்டில் உள்ளூர் பயங்கரவாதம் பரவிவருகிறது. அது அவ்வளவு சீக்கிரத்தில் நாட்டைவிட்டுச் செல்லாது” என்று தெரிவித்தார்.

வாஷிங்டன் வன்முறை
வாஷிங்டன் வன்முறை
Julio Cortez

தான் 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ-ன் இயக்குநராகப் பதவியேற்ற சமயம் உள்நாட்டு பயங்கரவாதம் தொடர்பான வழக்கு விசாரணை 1,000-ஆக இருந்தது என்றும், அது கடந்த வருடம் 1,400-ஆக அதிகரித்தது என்றும், அதுவே தற்போது 2,000-ஆக அதிகரித்திருக்கிறது என்றும் கவலை தெரிவித்தார்.

அதேபோல வெள்ளை இன ஆதிக்கவாதிகள் மற்றும் பிற இனரீதியாக செயல்படும் தீவிரவாதிகளின் கைது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகள் தங்களின் கொள்கைகளைப் பரப்ப இணைய வசதிகளைப் பயன்படுத்திவருகின்றனர் என்றும், சமூக வலைதளங்களில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வெறுப்பு மற்றும் வன்முறைப் பேச்சுகள் அதிகரித்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிர வலது சாரி, அரசு எதிர்ப்பு தீவிரவாதிகளை எஃப்.பி.ஐ அடையாளம் கண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அன்று வாஷிங்டனுக்கு வந்தவர்களில் சிலர் கடுமையான வன்முறையில் ஈடுபடவே வந்தவர்கள் எனத் தற்போது தங்களுக்குத் தெரியவந்திருப்பதாகவும் கிறிஸ்டோஃபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வன்முறை இடதுசாரி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதா என்று கிறிஸ்டோஃபர் வ்ரேயிடம் கேட்டதற்கு, `அது உண்மையல்ல’ என்று மறுத்தார்.

கிறிஸ்டோஃபர் வ்ரே எஃப்.பி.ஐ-யின் இயக்குநராக 2017-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு