Published:Updated:

India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!' - எல்லையில் என்ன நடக்கிறது?

இந்தியா - சீனா மோதல் ( விகடன் )

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதே மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ம் மாஸ்கோ சென்றிருக்கிறார்.

India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!' - எல்லையில் என்ன நடக்கிறது?

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதே மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ம் மாஸ்கோ சென்றிருக்கிறார்.

Published:Updated:
இந்தியா - சீனா மோதல் ( விகடன் )

கடந்த மே மாதத் தொடக்கத்தில் லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளான பாங்காங் ஏரியை ஓட்டிய பகுதியில் ஒரு சாலைப் பணியையும், கல்வான் பகுதியிலுள்ள தர்புக்-சையோக்-தௌலத் பெக் ஓல்டி (Darbuk-Shayok-Daulat Beg Oldie) சாலையை இணைக்கும் ஒரு சாலைப் பணியையும் தொடங்கியிருந்தது இந்திய அரசு. இந்த சாலைப் பணியை எதிர்த்த சீனா, எல்லையில் ராணுவப் படைகளை மே 5, 6-ம் தேதிகளில் குவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய-சீனா எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவியது.

மே மாத தொடக்கத்தில் இரு நாட்டு வீரர்களுக்கிடையேயும் கைகலப்பு ஏற்பட, ஜூன் மாதத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் வரை சென்றது. ஜூன் 15, 16-ம் தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துவிட்டனர் என்றும், பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகப் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்துவிட்டனர் என்றும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டது. சீன ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும், அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதையடுத்து டிக்-டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP

ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு எல்லையில் நிலவிவந்த பதற்றமான சூழல் சற்றே தணிந்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட 118 சீனச் செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. ``சீனா-இந்தியா எல்லைப் பதற்றம் அதிகரித்துவரும் இந்தச் சூழலில் சீன அரசுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுவதற்குத்தான் சீனச் செயலிகளைத் தடை செய்திருக்கிறது மத்திய அரசு’’ என்ற கருத்தை முன்வைத்தார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, காட்டில் வேட்டையாடச் சென்ற அருணாச்சலப் பிரதேசத்தின் நாச்சோ பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராமவாசிகள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

நேற்று (செப். 7) இந்திய-சீனா எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான `குளோபல் டைம்ஸ்’, இந்திய ராணுவ வீரர்கள் சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

அந்தப் பத்திரிகைக்கு பேட்டியளித்த சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தித் தொடர்பாளரும், சீனியர் கர்னலுமான சாங் ஷூலி, ``எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த இந்திய வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் பணியிலிருந்த சீன ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டனர். பிறகு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, சீன எல்லைப் பாதுகாப்புப் படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார். எனினும், எந்த மாதிரியான எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும், ``இது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லைக் கோட்டை கடந்துவந்த இந்தியப் படையினரை உடனடியாக பணிநீக்கம் செய்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படையைக் கட்டுப்படுத்த வேண்டும். சீனப் படையினரைத் தூண்டும்விதமாக, துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய இந்தியப்படையினர்மீது விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என்று இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்'' என்று சாங் ஷூலி வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய ராணுவம், `நாங்கள் எல்லையையும் தாண்டவில்லை; துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை’ எனக் கூறியுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லைப் பதற்றம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில்...

மே மாதத்திலிருந்தே எல்லையில் நீடித்துவரும் மிக மோசமான நிலைமையை நான் கவனித்துவருகிறேன். இந்தப் பதற்றமானது அரசியல் மட்ட அளவில் இரு நாடுகளுக்கு இடையே மிக ஆழமான பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகிறது. வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுச் செல்லப்பட்ட பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்

ஏற்கெனவே ஜூன் மாதம் நடைபெற்ற தாக்குதல்களின்போது ``இது நிச்சயமாக 1962-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலைமை. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் சீனாவுடனான எல்லை மோதலில் ராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டிருந்தார் ஜெய்சங்கர். மேலும் இது போன்ற மோசமான தாக்குதல் சம்பவங்கள் எல்லையில் இனிமேல் நடக்காது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதே மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ம் (Wang Yi) மாஸ்கோ சென்றிருக்கிறார். இந்த மாநாட்டின்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் எல்லைப் பதற்றம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்னையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.