கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடிகளால் தவித்துவருகிறது இலங்கை. சீனாவிடம் பெற்ற அதீத கடன், பொருளாதாரத்தைச் சரியாக நிர்வகிக்காத அரசின் அலட்சியம், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு என இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. நிலக்கரி, எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில், நாளொன்றுக்கு சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையிலிருப்பதாகவும் செய்திகள் கூறப்படுகின்றன.
நாளுக்கு நாள் நெருக்கடி சூழல் அதிகரிக்க, மக்கள் புரட்சி வெடித்து, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர் இலங்கை மக்கள். கடந்த மாத இறுதியில், இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தீவிர போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்தன. `கோத்தப்பய ராஜபக்சே பதவி விலக வேண்டும்' என்ற குரல்கள் இந்தப் போராட்டங்களில் ஒலித்தன. இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ``அரசிடம் சரியான திட்டமிடல் இல்லாததால்தான் இந்தப் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டிருக்கிறது. இதற்குப் பொறுப்பேற்று இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருபுறம் போர்க்கொடி தூக்க, மக்கள் போராட்டங்களும் தீவிரமடைந்தன. கடந்த வாரம், அதிபர் கோத்தப்பய ராஜபக்சே வீட்டின் முன்பாக நடந்த முற்றுகைப் போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு முதல் 36 மணி நேர ஊரடங்கை அமல்படுத்தியது இலங்கை அரசு. ஊரடங்கு அமலிலிருந்தபோதும் மக்கள் அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துவதைக் கைவிடவில்லை. எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபோராட்டங்கள் பரவாமல் இருக்க வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கியது இலங்கை அரசு. அதில் எந்தப் பலனும் இல்லாததால், பின்னர் மீண்டும் சமூக வலைதளங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில், #GoHomeRajapaksas #GotaGoHome உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் தொடர்ச்சியாக டிரெண்டாகி வருகின்றன. மக்கள் போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட கடும் நெருக்கடியால், இலங்கையின் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருக்கின்றனர். பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் தலைமையிலான 26 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த அமைச்சர்களில், மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவும், மகன் நமல் ராஜபக்சேவும் அடக்கம்.
அமைச்சர்கள் ராஜினாமா செய்தாலும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும், அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. மேலும், அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொள்ள அதிபர் கோத்தப்பய ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார். புதிய அமைச்சரவையில் ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மட்டும் தற்போது தற்காலிக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும், ``மகிந்தாவும் கோத்தபயவும் பதவி விலக வேண்டும். இலங்கையின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் இவர்கள்தான்'' என்று சொல்லிப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகிறார்கள்.

இது குறித்து இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர், ``அமைச்சரவையை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, அதிபரும் பிரதமரும் பதவியில் தொடர்வதுதான் ஆகச் சிறந்த நகைச்சுவை. ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த கும்பல், இலங்கையை தங்கள் ராஜாங்கமாக மாற்றிக்கொண்டு, கொள்ளையடித்தனர். எனவே, அவர்கள்தான் இலங்கையின் இந்த நிலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும்'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் சில நெட்டிசன்கள், ``அமைச்சர்களின் ராஜினாமா என்பது சர்வாதிகாரிகள் நடத்தும் அரசியல் நாடகம். நெருக்கடியைச் சமாளிக்க அமைச்சர்களை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் ஓய மாட்டோம். அதிபரும் பிரதமரும் பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்'' என்று பதிவிட்டிருக்கின்றனர்.

`ராஜபக்சே குடும்பம்தான் இலங்கை வீழ்ந்ததற்கு முக்கியக் காரணம்' என்று இலங்கை மக்கள் பலரும் கருதுகின்றனர். இருந்தும், எதிர்க்கட்சிகளை நம்பி நாட்டை ஒப்படைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. ``நாட்டின் நிலைமை கைமீறிப் போய்விட்டது. இனி அரசியல் கட்சிகளை நம்பிப் பயனில்லை. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதுதான் எங்களின் பெரும் கவலை'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் இலங்கை மக்கள். இந்த பெரும் பின்னடைவிலிருந்து இலங்கை எப்படி மீண்டெழப் போகிறது என்பதைத்தான் மொத்த உலகமும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.