Published:Updated:

எல்லையில் போர் பதற்றம்: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி யார்?!

ஜோ பைடன், நான்சி பெலோசி, ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கில் போர் தொடுப்பதாக அறிவித்தபோது, அதை வெளிப்படையாக எதிர்த்தவர்... ஆண்கள் கோலோச்சும் அமெரிக்க அரசியலில் சக்திவாய்ந்த பெண்ணாகத் திகழும் நான்சி பெலோசி யார்?!

எல்லையில் போர் பதற்றம்: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி யார்?!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கில் போர் தொடுப்பதாக அறிவித்தபோது, அதை வெளிப்படையாக எதிர்த்தவர்... ஆண்கள் கோலோச்சும் அமெரிக்க அரசியலில் சக்திவாய்ந்த பெண்ணாகத் திகழும் நான்சி பெலோசி யார்?!

Published:Updated:
ஜோ பைடன், நான்சி பெலோசி, ட்ரம்ப்

கடந்த சில மாதங்களாகவே சீனா - தைவான் எல்லையில் பதற்றம் அதிகரித்துவருகிறது. ஒருநாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 3) தைவானுக்கு வந்து சென்றார் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி. அவர் வருகைக்குப் பிறகு, எல்லையில் போர் பதற்றம் உச்சம் தொட்டிருக்கிறது. சீனா, தைவானை நோக்கி சில ஏவுகணைகளை வீசிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சீனா - தைவான் எல்லையில் என்ன நடக்கிறது... நான்சி பெலோசி யார்? - விரிவாக பார்ப்போம்!

தனிப் பிரதேசமான தைவான்!

1930-களிலிருந்தே சீனாவில் நடந்துவந்த உள்நாட்டுப் போர் 1949-ல் நிறைவுற்றது. அந்தச் சமயத்தில்தான் சீனாவிலிருந்து பிரிந்து தனிப் பிரதேசமானது தைவான். தைபே-வை தலைநகரமாகக் கொண்டு, தைவானை ஆட்சி செய்யத் தொடங்கினார் சர்வாதிகாரி சியாங் (Chiang). 1975 வரை சியாங்-ன் கட்டுப்பாட்டிலிருந்த தைவான், 1980-களிலிருந்து மெல்ல மெல்ல ஜனநாயக நாடாக மாறத் தொடங்கியது. அப்போதிலிருந்தே தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் தைவான் என்று சொந்தம் கொண்டாடிவருகிறது சீனா. ஆனால், அமெரிக்காவோ, `தைவானைத் தனி நாடாகச் செயல்பட விட வேண்டும்' என்று கூறிவருகிறது.

சீனா - தைவான்
சீனா - தைவான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோ பைடன் - ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினர். அப்போது, ``தைவானில் ஜனநாயகமும், அமைதியும் நிலவ சீனா முயற்சிகளை எடுக்க வேண்டும்'' என ஜோ பைடன் கூறியதாகவும், அதற்கு, ``நெருப்புடன் விளையாடினால் பெரும் அழிவு ஏற்படும். தைவானின் சுதந்திரத்தையும், அதற்கு உதவும் வெளிநாடுகளையும் சீனா கடுமையாகக் கண்டிக்கிறது'' என்று ஜி ஜின்பிங் எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தைவானில் நான்சி பெலோசி!

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்புகளை மீறி, ஆகஸ்ட் 3 அன்று, பலத்த பாதுகாப்புகளுடன் தைவான் வந்திறங்கினார் நான்சி பெலோசி. அவர் வந்திறங்கிய சில மணி நேரங்களில், தைவான் வான் எல்லையில் 20-க்கும் அதிகமான போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தியது சீனா. மேலும் தைவான் எல்லையில், சீன வீரர்கள் தீவிர ராணுவப் பயிற்சியும் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

தனது தைவான் பயணம் குறித்துப் பேசிய நான்சி பெலோசி, ``தைவானுடன் வைத்திருக்கும் நட்புறவை அமெரிக்கா பெருமையாகக் கருதுகிறது. தைவானுக்கு அளித்த வாக்குறுதியை எப்போதும் கைவிடமாட்டோம். அவர்களுக்கு எப்போதும் துணை நிற்போம் என்பதை உணர்த்தவே எங்கள் குழு இங்கே வந்திருக்கிறது'' என்றார். ``நான்சி பெலோசியின் வருகை, அமெரிக்காவுடனான எங்கள் உறவை வலுப்படுத்தியிருக்கிறது'' என்று தைவான் அரசும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

தைவான்
தைவான்

போர் மூளும் அபாயம்!

நான்சி பெலோசியின் வருகை காரணமாகத் தைவான் கடற்பரப்பில், அமெரிக்கக் கடற்படை கப்பல் மூன்று தினங்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் சீன ராணுவக் கப்பல்களும் உலவுவதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ``நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். நான்சி பெலோசியின் பயணத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானது'' என்று சீன ராணுவம் தெரிவித்திருக்கிறது. தைவானும் `எங்கள் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தி வருகிறோம்' என்று அறிவித்திருக்கிறது. இதனால் எந்த நேரத்தில் போர் மூளும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தைவான் வான் எல்லையில் சீனப் போர் விமானங்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால், விமானங்களின் வழித்தடங்களை மாற்றியமைத்திருக்கிறது தைவான் அரசு. சில விமானங்களை ரத்து செய்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. மேலும், தைவான்மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது சீன அரசு.

நான்சி பெலோசி யார்?

கடந்த சில மாதங்களாகவே தைவான் - சீன எல்லையில் பதற்றம் அதிகமாகக் காணப்பட்டாலும், நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகுதான் போர் பதற்றம் உச்சம் தொட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில், தைவானுக்கு வந்து சென்ற பெரும் பதவியிலிருக்கும் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசிதான்... யார் இவர்?!

ஆண்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்க அரசியலில், சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதியாகத் தன்னை மாற்றிக் கொண்டவர் நான்சி பெலோசி. 82 வயதாகும் பெலோசி, தனது 47-வது வயது வரை இல்லத்தரசியாக இருந்தவர். 1976-ல் ஜனநாயகக் கட்சியில் இணைந்தவர், 1987-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 முதல் 2011 வரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்தார் பெலோசி. பின்னர், 2019 முதல் தற்போது வரையிலும் இவரே சபாநாயகராக இருந்துவருகிறார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒரே பெண் சபாநாயகர் பெலோசி மட்டுமே.

ட்ரம்ப் - நான்சி பெலோசி
ட்ரம்ப் - நான்சி பெலோசி

முற்போக்குவாதி!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றத் தீர்மானத்தை நிறைவேற்றியவர் பெலோசிதான். ட்ரம்ப்பின் அமெரிக்காவைச் சுற்றி சுவர் எழுப்பும் திட்டம், அகதிகளைச் சிறையிலடைக்கும் முடிவு உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்த்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கில் போர் தொடுப்பதாக அறிவித்தபோது, அதை வெளிப்படையாக எதிர்த்தவர் பெலோசி. எப்போதும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் இவர், ஜனநாயகத்தின் பக்கம் நிற்பவர்.

தன்பாலின ஈர்ப்பார்களுக்கு ஆதரவு, கருக்கலைப்பு தடைக்கு எதிர்ப்பு என எப்போதும் முற்போக்காகச் சிந்திக்கக்கூடியவர் பெலோசி. சீனாவுக்கு எதிராகப் பல முறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். `ஆசிய நாடுகள்மீது சீனா அத்துமீறுகிறது' என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தற்போது தைவான் விஷயத்திலும் சீனாவைக் கடுமையாக எதிர்த்துவரும் நான்சி பெலோசி, சர்வதேச அரசியலில் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்!