Published:Updated:

கினியா நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பும், கிடுகிடுவென உயரும் அலுமினியத்தின் விலையும்..! - என்ன காரணம்?

கினியா நாட்டின் அதிபர் ஆல்பா காண்டேவை வீழ்த்தி, அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது ராணுவம். உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் அலுமினிய விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியத்தின் விலை உயர்ந்துவிட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரே நாளில் தற்போது மாதிரியான விலை உயர்வைச் சந்தித்ததேயில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த இரு தினங்களில், லண்டனில் அலுமினியத்தின் விலை நான்கு சதவிகிதம் உயர்வடைந்திருக்கிறது. உலக அளவில் அலுமினியம் அதிகம் தயாரிக்கப்படும் இடமான சீனாவிலும் விலை உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. வரும் நாள்களில் அலுமினியத்தின் விலை மேலும் உயரும் எனச் சொல்லப்படுகிறது.

கினியா
கினியா
Twitter/@denyse_mbabazi
படிப்படியாக உயரும் அலுமினியத்தின் விலை, கிடுகிடுவென உயர்ந்திருப்பதற்குக் காரணம், ஒரு சிறிய நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழல்தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல்தான் இதற்குக் காரணம்.

என்ன நடக்கிறது கினியாவில்?

1958-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றது கினியா. 2010-ம் ஆண்டு முதல் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று ஆட்சியமைக்கப்பட்டுவருகிறது. முதல் தேர்தலில் `Rally of the Guinean People' என்ற கட்சியைச் சேர்ந்த ஆல்பா காண்டே அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த 11 ஆண்டுகளாக கினியாவின் மொத்த அதிகாரமும் ஆல்பா காண்டேவிடமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது தலைமையிலான ஆட்சியே கினியாவில் நடைபெற்றுவந்தது.

ராணுவ கர்னல் மமாடி டெளம்பெளயா
ராணுவ கர்னல் மமாடி டெளம்பெளயா
Twitter

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, கினியா தலைநகர் கொனார்கியிலுள்ள அதிபர் மாளிகைக்கு வெளியில் பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, அரசுத் தொலைக்காட்சியைக் கைப்பற்றிய ராணுவ கர்னல் மமாடி டெளம்பெளயா (Mamady Doumbouya), ``அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. எனது தலைமையிலான தேசிய மேம்பாட்டுக்குழு, கினியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும். ஒற்றைத் தலைவரின் ஆணைக்குக் கீழ் மொத்த நாடும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை'' என்று கூறினார்.

நாட்டில் நிலவிவரும் ஏழ்மை, ஊழல், தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால்தான் நாங்கள் நாட்டைக் கைப்பற்றியிருக்கிறோம்.
மமாடி டெளம்பெளயா

மேலும், கினியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகவும், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அமைப்பது தொடர்பாக ஆலோசனையிலிருப்பதாகவும் தேசிய மேம்பாட்டுக்குழு கூறியிருக்கிறது. கினியா நாட்டில் அனைத்து வான்வழி, தரைவழிப் போக்குவரத்துகளும் ஒரு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகிழ்ச்சியில் மக்கள்?

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக, ஆல்பா காண்டேவின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தும் மூன்றாவது முறையாகச் சர்ச்சைக்குரிய வகையில் அதிபர் அரியணை ஏறினார் ஆல்பா. இந்தநிலையில், அவரைக் கைதுசெய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதாகக் கினியா ராணுவம் அறிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர் பலரும் வீதியில் இறங்கிக் கொண்டாடிவருவதாகத் தெரிகிறது. மேலும், பொதுமக்களில் பலரும் ராணுவத்தின் பக்கம் நின்று, ஆல்பா வீழ்த்தப்பட்டிருப்பதைக் கொண்டாடிவருவதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கினியா நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம், ``கினியாவுக்கு விசுவாசமான படையினர் ஒன்று திரண்டு, ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்துவிட்டனர்'' என்று செய்தி வெளியிட்டது.

பாக்ஸைட்
பாக்ஸைட்
Twitter/ @KirsiRehunen

அலுமினியம் விலை உயர்ந்தது ஏன்?

இப்போது கட்டுரையின் முதற் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்துக்கு வருவோம். அலுமினியம் விலை உயர்வுக்குக் காரணம் என்ன என்பதைக் காண்போம்.

அலுமினிய தயாரிப்புக்குத் தேவைப்படும் முக்கியமான தாதுப் பொருள் பாக்ஸைட் (Bauxite). இந்த பாக்ஸைட் தாது கினியாவில்தான் அதிகம் காணப்படுகிறது. கினியாவிலிருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தத் தாதுப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கினியாவில் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், அலுமினியத்தின் விலை உயர்ந்துகொண்டிருக்கிறது.

அலுமினியத்தால் ஏழ்மை?

ஆல்பா காண்டே அதிபரான பிறகுதான் அலுமினியத் தாதுப்பொருளின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கினியாவில் பாக்ஸைட் ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. அலுமினியத் தாதுப்பொருள்கள் மொத்தமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், கினியா மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவிவரும் ஏழ்மைக்கு முக்கியக் காரணமாக இதுவும் சொல்லப்படுகிறது.

ஆல்பா காண்டே
ஆல்பா காண்டே
Twitter/@PresAlphaConde

அதிபர் என்ன ஆனார்?

கினியா அதிபர் ஆல்பா காண்டே என்ன ஆனார் என்பது குறித்து தேசிய மேம்பாட்டுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இதுவரை எந்தவொரு தகவலையும் சொல்லவில்லை. அதேநேரத்தில் ஆல்பா காண்டேவின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் ராணுவ வீரர்கள் சிலர், ``நீங்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்'' என்கிறார்கள். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுக்கிறார் ஆல்பா. இந்த வீடியோவில் ஜீன்ஸ், ஷர்ட்டோடு அமர்ந்திருக்கும் ஆல்பாவுக்கு எந்தவொரு காயமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, ஆல்பா எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் இதுவரையிலும் தெரியவில்லை.

அமெரிக்கா, ஐ.நா கண்டனம்!

கினியாவில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு, ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. மேலும், `அதிபரை விடுவிக்க வேண்டும்' என்றும் ஐ.நா சபைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

`நிச்சயம் ஜனநாயக முறையில்தான் ஆட்சியமைப்போம்' என்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் ராணுவப் படைகள் அறிவித்திருக்கின்றன. இருந்தும், கினியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு