``இன்னொரு அதிபருக்கு இந்த நிலை வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்கிறது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ட்வீட்.
அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப் நீக்கப்படுவாரா என்ற கேள்வியோடு உலகமே அமெரிக்காவை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், ட்ரம்ப் தடைகளைத் தாண்டி ஜெயிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இதைப் புரிந்துகொள்வதற்கு முன், அமெரிக்க அரசியலமைப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை (House of Representatives) எனப்படும் கீழவையில் மொத்தம் 435 உறுப்பினர்களும், செனட் சபை எனப்படும் மேலவையில் 100 உறுப்பினர்களும் உள்ளனர். அரசியல் குற்றத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் பிரிவில் விளக்கப்படுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSImpeachment என்பது அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதனை உறுதிசெய்வதே அன்றி, பதவி நீக்கம் செய்வது கிடையாது. தற்போது அமெரிக்க அதிபர்மீது அரசியல் குற்றத்தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின்படி, அதிபர்மீது அரசியல் குற்றத் தீர்மானம் நிறைவேற்று வதற்கான முழு அதிகாரமும் பிரதிநிதிகள் சபைக்கு உண்டு.அதேசமயம், நிறைவேற்றப்பட்ட குற்றத் தீர்மானங்கள் மீது விசாரணை நடத்தி அவற்றை உறுதிசெய்யும் முழு அதிகாரமும் செனட் சபை வசம் இருக்கிறது. இரு அவைகளுமே பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

அப்படி, இரு அவைகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதற்குப்பிறகு அதிபரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மீண்டும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறும். இதில் இரு அவைகளிலும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இருந்தால் மட்டுமே அதிபர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவார். மீண்டும் அதிபர் பதவியில் அவர் போட்டியிடத் தகுதி உண்டா இல்லையா என்பதை மற்றொரு தீர்மானமாகத்தான் நிறைவேற்ற வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்போது அமெரிக்காவில் நிகழ்ந்திருப்பது முதல் கட்டம் மட்டுமே. அதாவது நாடாளுமன்ற அவை நீதிக் குழு, ட்ரம்ப் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நாடாளு மன்றத்தின் செயல்பாட்டைத் தடுத்ததாகவும் இரு பிரிவுகளின் கீழ் புகார்களை வெளியிட்டது. அந்தப் புகார்கள் உண்மையே என பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்தத் தீர்மானம், வரும் ஜனவரி மாதம் செனட் சபையின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். அங்கு இந்த அரசியல் குற்றத்தீர்மானத்தின் மீதான விசாரணை நடைபெறும். அங்கும் அவர்மீது அரசியல் குற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவரைப் பதவி நீக்கம் செய்யலாமா வேண்டாமா என்பது இறுதிக்கட்ட வாக்கெடுப்பின் மூலமாக முடிவு செய்யப்படும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 197 பேர் தற்போது உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் 233 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால், செனட் சபையில் 43 ஜனநாயகக் கட்சி உறுப்பி னர்களும், 53 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே விசாரணையின் முடிவில், அதிபர் ட்ரம்பின் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அவர் பதவி விலகக்கூடிய சூழல் உருவாகும்.
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இது முதல்முறையல்ல. 1868-ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான்சன் மீதும் 1998-ம் ஆண்டு பில் கிளின்டன் மீதும் பிரதிநிதிகள் சபையில் அரசியல் குற்றத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் செனட் சபையின் ஆதரவினால் இருவரின் பதவிகளும் காப்பாற்றப்பட்டன. ஆனால், 1974-ம் ஆண்டு ரிச்சர்ட் நிக்சன் மீது தொடரப்பட்ட இந்த அரசியல் குற்றத் தீர்மானத்தின்போது, தனக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததை உணர்ந்து அவரே தன் பதவியை ராஜினாமா செய்தார்.
செனட் பெரும்பான்மையும், குடியரசுக் கட்சியின் முழு ஆதரவும் பெற்றிருக்கும் ட்ரம்ப் தன்னுடைய இறுதி ஆண்டு ஆட்சிக்காலத்தை எவ்வித இடையூறுமின்றிக் கடந்துவிடுவார் என்பதே அமெரிக்க அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதையும் மீறி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது டொனால்டு ட்ரம்ப் என்ற தனி மனிதனுக்குக் கிடைத்த தோல்வியாகவும், அமெரிக்க ஜனநாயகத்தின் வெற்றியாகவும் வரலாற்றில் பதியப்படும்.