Published:Updated:

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன தொடர்பு?! - ஐ.நா அறிக்கை பின்னணி

இலங்கை

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கும் என்ன தொடர்பு?

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன தொடர்பு?! - ஐ.நா அறிக்கை பின்னணி

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கும் என்ன தொடர்பு?

Published:Updated:
இலங்கை

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை முதன்முறையாக மனித உரிமை மீறலோடு தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. மனித உரிமை மீறலுக்கும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன தொடர்பு? - அலசுவோம்!

ஐ.நா அறிக்கை!

2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில், ஏராளமான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு. `உள்நாட்டுப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்' என்று 2013-ல் நடந்த ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச விசாரணைக்குழு விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்தது இலங்கை அரசு. தொடர்ந்து, 2015-ம் ஆண்டு நடந்த ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்திலும் இதே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, `உள்நாட்டுக்குள் சுயமாக விசாரணை நடத்துகிறோம்' என்றது இலங்கை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்

இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா மனித உரிமை கவுன்சில், 2021-ல் மீண்டும் இதே தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராகச் சீனா உட்பட 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர், வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் அறிக்கை ஒன்றைத் தயாரித்திருக்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லெட் (Michele Bachelet).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அறிக்கையில், ``கடந்தகால, நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையிலிருந்து இலங்கை தப்பிய செயல், பொருளாதாரக் குற்றங்கள், ஊழல் ஆகியவைதான் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்கள். இந்தப் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க அடிப்படை மாற்றங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டும். கடந்தகாலங்களில் நடந்ததைப்போல மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கை அரசு, கடுமையான பாதுகாப்புச் சட்டங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்கக் கூடாது. ராணுவமயமாக்கல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கை வெளியானதையொட்டி வேறு சில தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. ஜெனீவாவில் நடக்கவிருக்கும் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்குழு விசாரணை நடத்துவதற்கான வரைவு தீர்மானம், செப்டம்பர் 23-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வாரமே, ``ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்'' என்று கூறியிருந்தார் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சஃப்ரி.

மனித உரிமை மீறலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன தொடர்பு?

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு மனித உரிமை மீறல்களும் ஒரு காரணம்தான். 2009-ல் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை உலக நாடுகள் அனைத்துமே உற்று கவனித்தன. இதனால் ஈழப் போருக்குப் பின்னர், பல நாடுகள், நிதி நிறுவனங்கள், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முன்வரவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சீனா, இலங்கைக்கு எக்கச்சக்க கடன்களை வாரி வழங்கியது. தேவையற்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் கடன் அளித்தது. இதனால், பெற்ற கடனுக்கு வரிகூடச் செலுத்த முடியாமல் திண்டாடியது இலங்கை.

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை
அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை

மேலும், ஈழப் போருக்காகவும், ராணுவ கட்டமைப்புகளுக்காகவும் கணக்கில்லாமல் செலவு செய்தது இலங்கை அரசு. அதுவும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் தள்ளியது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ராணுவத்தை மக்கள்மீது ஏவி போராட்டத்தைக் கலைத்தது இலங்கை அரசு. அப்போதே, `ராணுவத்தைக்கொண்டு மக்கள்மீது தாக்குதல் நடத்தி, அமைதியான போராட்டத்தைக் கலைக்க நினைப்பது மனித உரிமை மீறல்' என்று உலக நாடுகள் சில கண்டனத்தைப் பதிவுசெய்தன. இலங்கையின் அரசியல் தலைவர்கள் சிலர், `இவ்வாறு மனித உரிமை மீறல்களில் அரசு தொடர்ந்து ஈடுபட்டால், உலக நாடுகளும், ஐ.எம்.எஃப் நிதி நிறுவனமும் கடனுதவி வழங்க முன்வராது' என்று எச்சரித்தனர். அந்த வகையில் இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கும், அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதற்கும் மனித உரிமை மீறல்களும் ஒரு காரணமாக இருக்கிறது'' என்கின்றனர்.