Published:Updated:

'தாலிபன்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தடை'- மார்க் அறிவித்தன் பின்னணி என்ன?!

தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபன் அமைப்பினருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

`அமெரிக்க ராணுவம் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பும்’ என்ற அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே தாலிபன்களின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது. ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்துவந்த அஷ்ரஃப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தப்பித்து வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபன்களின் வசமானது. அங்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த போரும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆப்கனிலிருந்து வெளியேறும் மக்கள்
ஆப்கனிலிருந்து வெளியேறும் மக்கள்
AP

தாலிபன்களின் வசம் நாடு சென்றதால், அங்கு கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் ஆப்கனைவிட்டு வெளியேற மக்கள் பல்வேறு வகைகளில் முயன்றுவருகிறார்கள். அந்த நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவரை மீட்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. விமான நிலையங்கள் செயல்படாமல் இருப்பதால் ஆப்கன் மக்கள் தரைவழியாகச் சென்று அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக, தாலிபன்களின் அமைப்பின் தலைவர் முல்லா அப்துல் கானி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபன்கள் தரப்பில், `பொதுமக்கள், பெண்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. நாங்கள் அமைதியான ஆட்சியைத் தருவோம். அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஓர் அரசை நிறுவ நாங்கள் விரும்புகிறோம். கல்வி கற்க, வேலைக்குச் செல்ல உறுதியாகப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்போம். இஸ்லாமியச் சட்டப்படி கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவோம்" என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.

ஆப்கன்: `100 தினாருக்குப் பெண்களை விற்றார்களா தாலிபன்கள்?' வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?!
தாலிபன்கள்
தாலிபன்கள்
AP

தாலிபன்கள் தரப்பில் என்னதான் நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்களுக்கு அச்சம் நீங்கியபாடில்லை. ஆப்கனிலுள்ள ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தாலிபன்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும். பெரும்பாலான மக்கள் தாலிபன்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சர்வதேச ஊடகங்கள் கூறிவருகின்றன. ஆப்கனில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில். தாலிபன்கள் தகவல் பரிமாற்றத்துக்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உபயோகித்துவருவதாகக் கூறப்பட்டது. பலரும் தாலிபன்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தங்களின் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வதேச அளவில் தாலிபன்கள் பற்றி அதிகம் பேசிவரும் சூழலில், `தாலிபன் அமைப்பினரின், ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்படும்' என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ``அமெரிக்காவின் சட்டப்படி தாலிபன் ஒரு பயங்கரவாத அமைப்பு. எங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலிலும் தாலிபன் இடம்பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி தாலிபன்களின் கணக்குகளுக்குத் தடைவிதிக்கிறோம். தாலிபன்களுக்கு ஆதரவாகப் பதிவேற்றப்படும் கருத்துகளும் நீக்கப்படும்" என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Sidiqullah Khan

ஃபேஸ்புக் அறிவிப்பைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனமும் தாலிபன்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் ஆதரவானவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, ``ஆப்கானிஸ்தான் வல்லுநர்கள்குழு எங்களுடன் உள்ளது. அவர்கள் உள்ளூர்ச் சூழல் குறித்து அங்குள்ள பிரச்னைகளை அடையாளம் கண்டு எங்களை எச்சரிக்கை செய்ய உதவுவார்கள்" என்றும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபன்களின் அமைப்பை ஃபேஸ்புக் தடை செய்தது தொடர்பாக சைபர் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீராமிடம் பேசினோம். ``ஃபேஸ்புக் நிறுவனம், தான் செயல்படும் ஒவ்வொரு நாட்டுக்கும், அந்த இடத்துக்குத் தகுந்தாற்போல பாதுகாப்பு மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்ட திட்டம் இருக்கும். அதற்காக ஒரு தனித்துவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள்குழுவை அந்நிறுவனம் வைத்திருக்கும். தாலிபன்கள் அமைப்பு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட அமைப்பு. எனவே, ஃபேஸ்புக் நிறுவனமும் அந்த அமைப்பு சார்ந்த கணக்குகளை முடக்கியுள்ளது. தாலிபன்கள் மட்டுமல்ல, பயங்கரவாத அமைப்புகள் என்று கூறப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தடை விதித்திருக்கும்" என்றார்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

தொடர்ந்து பேசியவர் ``ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகள் தங்களின் செய்திகளை மற்றவர்களுக்குப் பரப்பும். அந்தச் செய்தியைப் படித்தால் அது தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு தொடர்புடைய செய்தி என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால், யாருக்குச் செய்தி சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு அந்தச் செய்தி புரியும். இதனால், இது போன்ற தகவல் தெரிந்த ஒரு குழுவை ஃபேஸ்புக் பணியில் அமர்த்தி, இதையெல்லாம் சரி பார்த்துக்கொண்டே இருக்கும். ஃபேஸ்புக் பலவகையான சமூக தரநிலைகள் (Community Standards) வைத்திருக்கும். இந்த தரநிலைகள் ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும். அந்தத் தரநிலைகளை மீறும்போது ஃபேஸ்புக் நடவடிக்கை எடுக்கும். உதாரணமாக, ஒரு தீவிரவாத அமைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஒரு தனிமனிதன் சமூக விரோத வேலைகளை முகநூலில் பரப்பினாலும் அவரின் கணக்கை முடக்கும் நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொள்ளும்" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு