Election bannerElection banner
Published:Updated:

ஈக்வடார் கலவரம்: 38,0000 கைதிகள்... 3 சிறைச்சாலைகள்.. மோதலில் உயிரிழந்த 79 பேர் - காரணம் என்ன?!

ஈக்வடார் சிறைச்சாலைக் கலவரம்
ஈக்வடார் சிறைச்சாலைக் கலவரம் ( AP )

ஒரே நேரத்தில், மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் நடந்த கலவரத்தில், 70-க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டிருப்பது ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... கலவரத்துக்கான காரணம் என்ன?

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஒரேநேரத்தில், மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் நடந்த கலவரத்தில் 79 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாடு தகவல் வெளியிட்டிருக்கிறது. சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே நடந்த மோதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஈக்வடார் சிறைச்சாலை
ஈக்வடார் சிறைச்சாலை
AP

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த மூன்று சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்று முடியாமல் போனதால், பல கைதிகள் உயிரிழந்திருக்கின்றனர்.

மோதலுக்குக் காரணம் என்ன?

``சிறைச்சாலைக்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்னை காரணமாகத்தான் இந்த மோதல் ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஈக்வடார் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஈக்வடார் நாட்டு அதிபர் லெனின் மொரினோ (Lenin Moreno) தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாட்டின் துயரம் மிகுந்த நாள் இன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், ``மூன்று வெவ்வேறு சிறைகளில் நடந்த கலவரங்கள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. சிறைக்கு வெளியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட கலவரங்கள்தாம் இவை. நம் நாட்டில் செயல்படும் போதைப்பொருள் கும்பலுக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்னைக்காக நடத்தப்பட்ட கலவரம்தான் இது'' என்று பேசிய வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் அந்நாட்டு அதிபர்.

இதுவரையில் இந்தக் கலவரம் காரணமாக, ஈக்வடார் நாட்டின் Guayaquil பகுதியிலுள்ள சிறைச்சாலையில் 37 பேரும், Cuenca பகுதியிலுள்ள சிறைச்சாலையில் 34 பேரும், Latacunga நகர் சிறைச்சாலையில் எட்டு பேரும் உயிரிழந்திருப்பதாக சிறைத்துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருமே சிறைக் கைதியினர்தான் என்றும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது கலவரம் அடக்கப்பட்டுவிட்டதாகவும், சிறைச்சாலை முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈக்வடார் கலவரம்
ஈக்வடார் கலவரம்
AP
ஜூலியன் அசாஞ்சே முதல் நித்யானந்தா வரை... ஈக்வடார் என்னும் பூலோக சொர்க்கத்தின் ஸ்பெஷல் என்ன?

சிறைக் கைதிகளின் உறவினர்கள் பலரும் சிறைச்சாலைகள் முன்பு கூடியிருக்கின்றனர். சிறைக்குள் இருக்கும் தங்கள் சொந்தங்களுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்வதற்காக மக்கள் திரண்டு நிற்பதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.

ஈக்வடார் சிறைச்சாலை
ஈக்வடார் சிறைச்சாலை
AP

இந்தச் சம்பவத்தை அடுத்து, ``சிறைக் கலவரம் தொடர்பாக உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஐ.நா சபை கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஈக்வடார் சிறைச்சாலைகள்!

ஈக்வடார் நாட்டில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சிறிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துவந்த பலரையும் அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்திருந்தது. எனவே, இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெருங்குற்றங்களான கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் தண்டனை பெற்றுவருபவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது.

ஈக்வடார்
ஈக்வடார்
AP
Vikatan

கடந்த சில ஆண்டுகளாகவே ஈக்வடார் சிறைச்சாலைகளில் கலவரங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஈக்வடார் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், ஒரே நேரத்தில் 27,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், அங்குள்ள சிறைச்சாலைகளில் தற்போது 38,000 கைதிகள்அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிறைக் காவலர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஈக்வடார் சிறைச்சாலைகளில் காவலர்களின் கையைவிட கைதிகளின் கையே ஓங்கியிருக்குமாம். இதன் காரணமாகத்தான் அங்கு எளிதாக கோஷ்டி மோதல்கள் அடிக்கடி அரங்கேறுவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஈக்வடார் மனித உரிமை அமைப்பின் தகவல்படி கடந்த ஆண்டு (2020) மட்டும் 103 சிறைக் கைதிகள் சிறை வளாகத்துக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். தற்போது ஒரே சமயத்தில் 70-க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு