தாய்லாந்து: ஜெர்மனி ஹோட்டலில் மன்னர் உல்லாசம்; பாங்காக் வீதிகளில் மக்கள் போராட்டம் - என்ன நடக்கிறது?

பெருமளவு செலவு செய்து நாய்க்குட்டியை அடக்கம் செய்தார் தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கார்ன். அந்தச் சமயத்தில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைத் தாய்லாந்து பக்கம் திருப்பியது இந்தச் சம்பவம்.
தாய்லாந்து... டூரிஸத்துக்கு பெயர்போன தென்கிழக்கு ஆசிய நாடு. மிக அழகான கடற்கரைகள், பெரிய பெரிய புத்தர் ஆலயங்கள், கலைநயமிக்க கட்டடங்கள் என்று பாரம்பர்ய வாசம் வீசும் நாடு அது. திரும்பும் திசையெல்லாம் வண்ண விளக்குகளால் இரவு நேரத்திலும் ஜோலிக்கும் தாய்லாந்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக பாங்காக் நகர், இளைஞர்களின் ஃபேவரிட் ஸ்பாட்! இப்படி எப்போதும் கோலகாலமாக இருக்கும் தாய்லாந்து தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. ஆம்! மாணவர்கள், இளைஞர்கள் உள்பட மக்கள் பலரும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.
ஏன் இந்தப் போராட்டம் என்பது பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அந்நாட்டு மன்னர் பற்றிய சில விஷயங்களைப் பார்த்துவிடலாம்.
மன்னர் மகா வஜிரலோங்கார்ன்!
தாய்லாந்தில் முடியாட்சி நடைபெறுகிறது. அங்கு அரசுத் தலைவராகப் பிரதமரும் நாட்டின் தலைவராக மன்னரும் செயல்பட்டு வருகின்றனர். அரசு தொடர்பான பெரும்பாலான முடிவுகளைத் தேர்தல் முறை கொண்டு தேர்வான பிரதமரே எடுப்பார். அதேநேரத்தில், மன்னர் தான் அதீத சக்தி கொண்டவராக இருப்பார். அதாவது பிரதமரின் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் சக்தி மன்னருக்கு உண்டு.
சரி, இப்போது மன்னரின் கதைக்கு வருவோம்... தாய்லாந்தின் தற்போதைய மன்னர் மகா வஜிரலோங்கார்ன் (Maha Vajiralongkorn). இவர் ஜூலை 28, 1952-ம் ஆண்டு பிறந்தவர். தனது 15-வது வயதிலேயே வஜிரலோங்கார்ன் இளவரசனாக முடிசூட்டப்பட்டிருந்தாலும், தன்னுடைய குழந்தைப் பருவத்தின் பெரும்பாலான நாள்களைத் தாய்லாந்துக்கு வெளியேதான் கழித்தார் இவர். 13 முதல் 17 வயது வரை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். 1976-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மிலிட்டரி கல்லூரியில் சேர்ந்தார் வஜிரலோங்கார்ன்.
இவர் ராணுவ பயிற்சி பெற்று வந்த போதிலும், `ஆட்சியில் அமர இவர் தகுதியானவர் தானா?' என்பது போன்ற கேள்விகள் வஜிரலோங்கார்னை சுற்றிக் கொண்டே இருந்தன. சூதாட்டம், பெண்களுடன் உல்லாசமாக இருத்தல், சட்டவிரோதமான வணிகத் தொடர்புகள் என அந்தச் சமயத்தில் இளவரசர்மீது குறித்துப் பரவிய செய்திகள்தான் அதற்குக் காரணம். அக்டோபர் 2016-ல், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரச வம்சாவளியின் 10-வது மன்னராக முடிசூடிக் கொண்டார் வஜிரலோங்கார்ன்.
நான்கு முறை திருமணம் செய்துள்ள வஜிரலோங்கார்ன், திருமணம் செய்து கொள்ளாத 20 பெண்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார் என்கிற செய்திகளும் சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நேரத்தில்கூட ``தாய்லாந்து மன்னர், 20 பெண்களுடன் ஜெர்மனியில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்'' என்கிற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், வஜிரலோங்கார்ன் ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்திலும் பயிர்களின் மீது சைக்கிள் ஓட்டுவது போல எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டது. இதையடுத்து, `இது தன்னை அவமதிப்பது போல் உள்ளது' என்று சொல்லி ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாகத் தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கார்ன் மிரட்டல் விடுத்தது சர்ச்சையானது.

அதேபோல கடந்த 2015-ம் ஆண்டில் மன்னர் வஜிரலோங்கார்னின் செல்லப்பிராணியான ஃபூ ஃபூ நாய்க்குட்டி உயிரிழந்ததையடுத்து புத்த முறைப்படி 4 நாள்கள் துக்கம் அனுசரித்து, அதன்பின்னரே அடக்கம் செய்யப்பட்டது. பெருமளவு செலவு செய்து நாய்க்குட்டியை அடக்கம் செய்தார் வஜிரலோங்கார்ன். அந்தச் சமயத்தில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைத் தாய்லாந்து பக்கம் திருப்பியது இந்தச் சம்பவம்.
தாய்லாந்தில் என்ன பிரச்னை?
கடந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றிபெற்று தாய்லாந்தின் பிரதமரானார் பிரயுத் சன் ஒச்சா (Prayut Chan-o-cha). இவர் தாய்லாந்தின் முன்னாள் ராணுவத் தளபதி. `2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே கலகம் செய்துதான் பிரதமரானார் பிரயுத் சன் ஒச்சா' என்கிற குற்றச்சாட்டுகள் இவர்மீது முன்வைக்கப்பட்டன. எனவே, இவர்மீது நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியே நிலவி வந்தது. இந்தநிலையில், மீண்டும் பிரயுத் சன் ஒச்சா வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதால் சர்ச்சைகள் வெடித்தன.
முடியாட்சிக்கு எதிராகப் பேசுவதும் மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சித்துப் பேசுவதும் தாய்லாந்தில் பெருங்குற்றமாகும். அப்படிப் பேசுபவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் முடியாட்சியை விமர்சித்து சிறை சென்றவர்கள் ஏராளம். அப்படி கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அனோன் நம்பா (Anon Numpa) என்பவர் முடியாட்சிக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்தார். இவரின் பேச்சு, அதுவரை முடியாட்சிக்கு எதிராகப் பேசுவதற்கு நிலவி வந்த இறுக்கத்தை போக்கியதாகவே தாய்லாந்து மக்கள் கருதுகின்றனர். அனோன் வலியுறுத்திப் பேசிய முடியாட்சி சீர்திருத்தம் தொடர்பான 10 அம்ச செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தார் பனுசாயா (Panusaya) என்கிற பெண் செயல்பாட்டாளர்.
இதையடுத்து, தாய்லாந்து முழுவதும் உள்ள மக்கள் பலரும் முடியாட்சிக்கு எதிராகப் பேசத் தொடங்கினர். பிரதமர் பிரயுத் சன் ஒச்சா பதவி விலக வேண்டுமென்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. கடந்த புதன்கிழமை அன்று முடியாட்சி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டுமென்றும், பிரதமர் பதவி விலக வேண்டுமென்றும் நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இதையடுத்து, அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்த அனோன் நம்பா, பனுசாயா உள்ளிட்ட 20-க்கும் அதிகமான தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ``எங்கள் நண்பர்களை விடுதலை செய்யுங்கள்" என்று கோஷமிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் மாணவர்கள் வழிநடத்தும் இயக்கத்தின் அடையாளக் குறியான மூன்று விரல்களை உயர்த்திக் காண்பிக்கும் முறையைப் பின்பற்றி தங்களின் வருகையைப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், அனோன் நம்பா-வுக்கு முன்பாகவே பல காலமாகத் தாய்லாந்தில் அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்து வந்தார் வான்ட்சலம் சட்சாக்ஸிட் (Wanchalearm Satsaksit) என்பவர். இவர் கடந்த ஜூன் மாதம் கம்போடியாவில் காணாமல் போனார். அவரைத் தாய்லாந்து காவல்துறையினர் கடத்தியிருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். எனினும், தாய்லாந்து அரசு இதனை மறுத்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதலே அவரை கண்டுபிடிக்கக்கோரி மாணவர்கள் பலரும் ஆங்காங்கே வீதியில் இறங்கிப் போராடினர். தற்போது பொதுமக்களும் வீதிக்கு வந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருவதால் இது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறியுள்ளது.
ஜெர்மனியில் தாய்லாந்து மன்னர்?
``தாய்லாந்தின் மன்னர் பெரும்பாலான நாள்களை ஜெர்மனியிலேயே உல்லாசமாகக் கழிக்கிறார். நாட்டு மக்கள்மீது துளியும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்'' என்பதும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய கோபமாக இருந்து வந்தது. இதன் காரணமாகவே முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கையில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
``ஜெர்மனியில், மன்னர் வஜிரலோங்கார்ன் வெறும் சுற்றுலாப் பயணியாக மட்டும் செல்லவில்லை, அங்கிருந்தே தாய்லாந்து அரசைக் கட்டுப்படுத்துகிறார். வேறு நாட்டிலிருந்து கொண்டு மக்களுக்கு என்ன தேவை என்று எப்படி ஒரு மன்னரால் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஜெர்மனியில், தாய்லாந்து அரசின் பணத்தைச் செலவு செய்து உல்லாசமாகக் கொண்டாடி வருகிறார்'' என்பது போன்ற காரணங்களால்தான் மக்கள் இந்த விஷயத்தில் கோபம் கொள்கிறார்கள் என்று தாய்லாந்தைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஒருமுறை ஜெர்மனியின் நாடாளுமன்றத்திலேயே விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Heiko Maas) இது குறித்துப் பேசுகையில், ``தாய்லாந்து தொடர்பான அரசியல் விவகாரங்களை ஜெர்மனி மண்ணிலிருந்து செய்யக்கூடாது. தங்கள் நாட்டு விவகாரங்களை ஜெர்மனியிலிருந்து கொண்டே நிகழ்த்தும் விருந்தினர்களை எப்போதுமே நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று கூறியிருந்தார். இதற்குத் தாய்லாந்து தூதரகம் பின்வருமாறு பதிலளித்தது...
அரசு தொடர்பான முடிவுகளைப் பிரதமர்தான் எடுக்கிறார். மன்னர், அவரது தனிப்பட்ட விஷயத்திற்காகத்தான் ஜெர்மனியில் இருக்கிறார்.தாய்லாந்து தூதரகம்
2007-ம் ஆண்டு முதலே கிழக்கு ஜெர்மனியில் உள்ள பவரியா (Bavaria) பகுதிக்கு அடிக்கடி வஜிரலோங்கார்ன் சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது. அங்கு 'Tutzing' என்கிற நகரத்தில் அவருக்குப் பிரமாண்ட வீடு இருப்பதாகவும் அவரின் 15 வயது மகன் ஒருவர் பவரியாவில் உள்ள பள்ளியில் பயின்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கொரோனா காலத்தில், தன் ஜெர்மனி வீட்டின் பணியாளர்கள் அனைவரையும் தாய்லாந்துக்கு அனுப்பிவிட்டு, ஜெர்மனியிலுள்ள ஸ்டார் ஹோட்டலின் அனைத்து ரூம்களையும் புக் செய்து அங்கு தங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

கடந்த பிப்ரவரி மாதம்தான் கடைசியாகத் தாய்லாந்து மக்களை நேரில் சந்தித்திருக்கிறார் மன்னர் வஜிரலோங்கார்ன். இதையடுத்து நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) மீண்டும் தன் தந்தையின் நினைவு நாளையொட்டி தாய்லாந்துக்குத் திரும்பியிருக்கிறார். நாடு திரும்பிய மன்னர், தனது காரில் பவனி வந்த போது அவரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் முயற்சி செய்தனர்.
இதையடுத்து நேற்று முதல், போராட்டம் நடந்த தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலையானது ஒரு மாதத்திற்குத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவசர நிலை உத்தரவையும் மீறி பாங்காக்கின் ரட்சஸ்ப்ரசொங் (Ratchaprasong) மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். அப்போது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. சில போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்படும் காட்சிகளும் அரங்கேறின.
இதைத்தொடர்ந்து, தாய்லாந்து அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட, அனைத்துவகை ஊடகங்களுக்கும் தடை விதித்துள்ளது தாய்லாந்து அரசு. இதனால், அடுத்து அந்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளிச்சத்துக்கு வருமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.