Published:Updated:

தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது', `பெருந்தொற்று', `வறுமை' - உண்மைப் பின்னணி என்ன?!

தென்னாப்பிரிக்கா கலவரம்

ஜூமா கைதில் தொடங்கிய போராட்டம்... வறுமையால் கலவரமானதா... தென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன?

தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது', `பெருந்தொற்று', `வறுமை' - உண்மைப் பின்னணி என்ன?!

ஜூமா கைதில் தொடங்கிய போராட்டம்... வறுமையால் கலவரமானதா... தென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன?

Published:Updated:
தென்னாப்பிரிக்கா கலவரம்
தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில், திரும்பும் பக்கமெல்லாம் கலவரக் காட்சிகளும், ஆம்புலன்ஸின் அலறல் சத்தங்களும்தான் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கலவரங்கள் தென்னாப்பிரிக்கா மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கலவரத்திலும், அதனால் ஏற்பட்ட நெரிசலிலும் ஏராளமானவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

அமைதி, அகிம்சைக்குப் பெயர்போன நெல்சன் மண்டேலாவின் சொந்த ஊரான சொவெட்டோவில்கூட மிகப்பெரிய கலவரம் அரங்கேறியிருக்கிறது. முக்கிய நகரங்களில் நடைபெற்றுவரும் கலவரத்தை அடக்கும் நோக்கில் தென்னாப்பிரிக்க ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்ட 3,000-க்கும் அதிகமானோரைக் கைதுசெய்திருக்கிறது தென்னாப்பிரிக்க காவல்துறை.

ஜேக்கப் ஜூமா
ஜேக்கப் ஜூமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலவரத்துக்குக் காரணம் என்ன?

2009 முதல் 2018 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் கடந்த வாரத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவிலுள்ள குவாஜுலு நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் பிறந்த ஜூமா, ஜுலு (Zulu) இனத்தைச் சேர்ந்தவர். `ஜுலு இனத்தைச் சேர்ந்தவர்கள் இனவெறியால் பொருளாதாரரீதியாகத் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்' என்ற வாதத்தை முன்வைத்தவர் ஜூமா. அதிபர் பதவிக்கு வந்த பின்னர், அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். ​இதனால் ஜூமாவுக்கு நடால் மாகாணத்தில் ஆதரவாளர்கள் அதிகம். குறிப்பாக அங்கிருக்கும் இளைஞர்கள் ஜூமாவின் பக்கம் நிற்கின்றனர். ஜூமாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர் அவரது ஆதரவாளர்கள். ஜூமாவின் சொந்த மாகாணமான குவாஜுலு நடாலில்தான் முதலில் போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டங்கள் தற்போது கலவரங்களாக மாறியிருக்கின்றன. தென்னாப்பிரிக்காவிலுள்ள வணிக வளாகங்கள், கடைகளிலுள்ள டி.வி., ஃபிரிட்ஜ், ஏசி, உணவுப்பொருள்கள் உள்ளிட்ட பொருள்களைச் சூறையாடிச் செல்கின்றனர் கலவரக்காரர்கள். கடைகளை முழுவதுமாகச் சூறையாடிய பின்னர் அந்தக் கடைகளைத் தீயிட்டுக் கொளுத்தியும்விடுகின்றனர். ஏடிஎம் மையங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிவருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வணிக வளாகங்களுக்குத் தீ வைக்கப்படும் காரணத்தால், அந்த வளாகங்களுக்கு மேல்தளத்தில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து தப்பியோடி உயிரைக் காத்துக்கொள்கின்றனர். அப்படித் தப்பி ஓடும்போது ஏற்படும் கூட்ட நெரிசலில் பலரும் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட் சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதேநிலை தொடர்ந்தால், கடுமையான பொருளாதார நெருக்கடியும், உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடும் என்று எச்சரித்திருக்கிறார்கள் அங்குள்ள அமைச்சர்கள்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா
AP Photo/Andre Swart

ஜூமா கைதுக்கு என்ன காரணம்?

இவ்வளவு வன்முறைக்கும் ஜூமா கைதுசெய்யப்பட்டதுதான் காரணம் என்றால், ஜூமா கைதுசெய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடையாக ஒரு சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஜூமா தனது ஆட்சிக் காலத்தில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜூமா. தொடர்ந்து இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் பலமுறை நேரில் ஆஜராகச் சொல்லியும், நீதிமன்றம் பக்கமே தலைகாட்டவில்லை ஜூமா. இதனால், நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி, அவருக்கு 15 மாதகால சிறைத் தண்டனை வழங்கியது தென்னாப்பிரிக்க நீதிமன்றம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திசைமாறிய போராட்டம்!

முதலில் ஜூமா விடுதலையை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், தற்போது வேறு திசை நோக்கி மாறியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாகவே வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்னைகள் இருந்துவந்தன. கொரோனாவுக்குப் பின்னர், இந்தப் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தன.

தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் 46 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த 46 சதவிகிதம் பேரில் 74.7 சதவிகிதத்தினர் இளைஞர்கள்.

கொரோனா பெருந்தொற்றையொட்டி, வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் 350 rand (இந்திய மதிப்பில் 1,800 ரூபாய்) வழங்க வந்தது தென்னாப்பிரிக்க அரசு. இந்த நிவாரணத் தொகையை நம்பித்தான் பல தென்னாப்பிரிக்கக் குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிவாரணத் தொகை கொடுப்பதை நிறுத்தியது அரசு. இதனால் பல குடும்பங்கள் உணவில்லாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.

எனவே, முதலில் ஜூமா கைதுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போராட்டங்கள், தற்போது கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் கலவரமாக மாறியிருக்கின்றன என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். அதனால்தான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொருள்களைச் சூறையாடிச் சென்றனர் என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

போராட்டம்
போராட்டம்
AP Photo / Andre Swart

இந்தியர்களுக்கு பாதிப்பு?

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்திய வம்சாவளியினருக்கு இந்தப் போராட்டத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருக்கும் இந்தியர்கள் தெரிவிக்கின்றனர். ஜூமா மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், இந்திய வம்சாவளித் தொழிலதிபர்களான குப்தா சகோதரர்களுக்கும் சம்பந்தமிருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் இந்தியர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் நிற்பதாகவும், இந்தியர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

``இந்தநிலை தொடர்ந்தால் இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களின் குடியுரிமையும், சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதைப்போல, தென்னாப்பிரிக்காவிலிருந்தும் இந்தியர்கள் வெளியேற்றப்படக்கூடும்'' என்று கவலை தெரிவிக்கிறார்கள் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள்.

இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. `தென்னாப்பிரிக்காவிலுள்ள முக்கிய நிறுவனங்களில், அதுவும் நிதி சார்ந்த நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பது இந்தியர்கள்தாம். அவர்களால்தான் நமக்கு போதிய வேலைவாய்ப்புகளும், பணமும் கிடைப்பதில்லை' என்று தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், ``தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இந்தியர்களையே சாரும். பொருளாதாரரீதியாகத் தென்னாப்பிரிக்கா நாடு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கும் இந்தியர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற நினைப்பது சரியல்ல'' என்று இந்தியர்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பிரிக்க மக்கள் சிலர் துணை நிற்கின்றனர்.

சிரில்
சிரில்

கலவரத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு?

2018-ல ஜூமாவைத் தொடர்ந்து சிரில் ராமபோசா அதிபர் பதவிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் மிகப்பெரிய சட்டம், ஒழுங்கு பிரச்னை இது. `ராமபோசா எந்தவொரு முடிவையும் சரியாக எடுப்பதில்லை' என்கிற விமர்சனம் அவர்மீது இருக்கிறது. கொரோனா ஊரடங்கு அறிவித்தபோது, அதை அமல்படுத்துவதற்காக 70,000 ராணுவ வீரர்களைக் களமிறக்கினார் ராமபோசா. ஆனால், இப்போது வெடித்திருக்கும் மிகப்பெரிய கலவரத்தைக் கட்டுப்படுத்த வெறும் 2,500 வீரர்களை, அதுவும் தாமதமாகத்தான் களமிறக்கியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மேலும், ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் துப்பாக்கிகளைக் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கைதான் பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஜேக்கப் ஜூமா, சிரில் ராமபோசா இருவருமே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். `கலவரம் செய்பவர்கள்மீது ராமபோசா எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பதற்குக் காரணம் கட்சிப் பாசம்தானா?' என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுவருகின்றன.

டர்பன், தென்னாப்பிரிக்கா
டர்பன், தென்னாப்பிரிக்கா
AP Photo

தீர்வு என்ன?

ஜூமாவை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று சொல்லப்படுகிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளிலும் உடனடித் தீர்வுகள் காண்பது கடினம். எனவே, இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட்டு அங்கு நடக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவி செய்ய வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் பதிலாக இருக்கிறது.

இந்திய அரசாங்கம் தலையிட்டு அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு வழி செய்ய வேண்டும் என்பதும், சர்வதேச நாடுகள் தலையிட்டு தென்னாப்பிரிக்காவில் அமைதி நிலவ உதவி செய்ய வேண்டும் என்பதும்தான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism