Published:Updated:

தாலிபன்கள் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததன?! - ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இனி என்னவாகும்?

தாலிபன்
தாலிபன்

தாலிபன்களால் ஒரே நாளில் வீழ்த்தப்பட்டது, ஆப்கன் தலைநகர் காபூல்! பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் அஷ்ரஃப் கானி தப்பியோட்டம்! அமெரிக்கப்படையினர் 90% வெளியேறிவிட்டனர். தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது?

ஒரே நாளில் வீழ்த்தப்பட்டது, ஆப்கன் தலைநகர் காபூல்! தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் அஷ்ரஃப் கானி தப்பியோடிவிட்டார்! ஆப்கனில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளில் 90 சதவிகிதத்தினர் வெளியேறிவிட்டனர். `இனி உயிருக்கு உத்தரவாதமில்லை, தப்பியோடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றுணர்ந்த ஆப்கன் மக்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடான பாகிஸ்தான் எல்லையை நோக்கி தஞ்சமடைய ஓடிக்கொண்டிருக்கின்றனர். பீதியடைந்த வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும், அங்கிருக்கிற விமான நிலையங்களிலெல்லாம் ஈக்கள்போல மொய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. `வெளியேற விரும்பும் அந்த மக்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம்’ என தாலிபன்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள்! எதற்காக இந்த மரண பயம்! என்ன நடந்தது ஆப்கானிஸ்தானில்... தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, இனி என்னவெல்லாம் நடக்கப்போகின்றன... சுருக்கமாகப் பார்ப்போம்!

தாலிபன் கொடி
தாலிபன் கொடி

இஸ்லாமியக் குடியரசான ஆப்கானிஸ்தான் பழைமையான நாகரிக வரலாற்றைக்கொண்டது. அத்தகைய பழம்பெருமை வாய்ந்த ஆப்கானிஸ்தான், இப்போது அவற்றுக்கெல்லாம் நேரெதிராக, மனித சமுதாயத்துக்கே சவால் விடுக்கும் பழைமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. வெறும் பத்தே நாள்களில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நாடும் வீழ்ந்து, தாலிபன்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. இப்படி நடப்பது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் தாலிபன்களின் அதிகாரக் கைகளுக்கு, முதன்முறையாகச் சென்றது ஆப்கானிஸ்தான். இப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியை ஓடவிட்டதுபோல், அப்போது அதிபராக இருந்த புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது தாலிபன் அமைப்பு.

ஆட்சிக்கு வந்த புதிதில் ஊழல் ஒழிப்பு, அடிப்படை சாலைக் கட்டமைப்பு வசதிகள், தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை, பொருளாதார முன்னேற்றம் என நீதி நிர்வாகத்தில் சிறந்துகொண்டிருந்தது தாலிபன்களின் ஆப்கானிஸ்தான்! அதனால் மக்களும் ஆதரித்தனர். சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற சக இஸ்லாமிய நாடுகளும் பொருளாதார உதவிகள் செய்தன. ஆனால், அந்த ஆட்சியெல்லாம் நீடித்ததோ சிலகாலம் மட்டும்தான். மதப்பழைமைவாதிகளான தாலிபன்கள், குழந்தைகள் கல்வி கற்பதைத் தடுத்து நிறுத்தினர், குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்வி கற்பதையோ, வேலைக்குச் செல்வதையோ அடியோடு மறுத்தனர். தடைவிதித்தனர். மீறிச் சென்றவர்களின் தலைகளை அறுத்து, முண்டமாக்கினர்.

ஆடல், பாடல், இசை, இன்பம், வெளியுலகத் தொடர்பு என ஆப்கன் மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பொழுதைக்கழிக்கக்கூடிய, ஒவ்வொன்றையும் முடக்கிப்போட்டனர். ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் புர்க்கா அணிந்துகொண்டு, வீட்டுக்குள்ளேயே அவர்களுக்குச் சேவை புரிய வேண்டும். குழந்தைகள் பெற்றெடுப்பதற்கும், சமைத்துப் போடுவதற்கும் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தீவிரமான இஸ்லாமியப் பழைமைவாத ஷரியத் சட்டங்களை உருவாக்கி அதை அப்பாவி ஆப்கன் மக்கள் மீது திணித்தனர். முரண்டுபிடித்தவர்கள், தவறுதலாகத் தவறிழைத்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி கொல்லப்பட்டனர். `இதுதான் தாலிபன்களின் சட்டம்’ என்றனர்.

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
Rahmat Gul

இவர்களின் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்களுக்கும், மசூதிகளுக்கும் மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டது. மற்ற வழிபாட்டுத் தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. குறிப்பாக, 2001-ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற, காலத்தால் பழைமைவாய்ந்த பாமியன் புத்தர் சிலை, அந்தப் பழைமைவாதிகளால் உடைத்து துண்டாக்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தங்களின் இரக்கமற்ற செயல்பாடுகளால், உள்ளூர் மக்கள் முதல் உலக நாட்டு மக்கள் வரை கட்டுக்கடங்காத வெறுப்பை சம்பாதித்துக்கொண்டிருந்தனர் தாலிபன்கள். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பதுபோல உச்சகட்டமாக நடந்தேறியது அந்தக் கோர நிகழ்வு. தாலிபன்களின் தயவில், அவர்களின் ஏகோபித்த ஆதரவில், அடைக்கலத்தில் செயல்பட்டுவந்த ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பினர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் விமானத்தை மோதவிட்டு தகர்த்தெறிந்தனர்.

அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு
அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு

உலகின் மிக உயரமான உலக வர்த்தக மையம் உருத்தெறியாமல் தரைமட்டமானது. 2001, செப்டம்பர் 11 அன்று நடந்த இந்தக் தாக்குதலில், சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் உயிரிழந்தனர். இது போதாதா... அமெரிக்காவை சினங்கொள்ளச் செய்வதற்கு. உலகப் பெரியண்ணனான அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டு, எந்தவொரு நாடும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. அது எரிமலை முகட்டில் தலைவைப்பதற்குச் சமம் என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தியது அமெரிக்கா.

சம்பவத்துக்கு அடுத்த மாதமே பதிலடித் தாக்குதலுக்கு தயாரானது. அக்டோபர் 7-ம் தேதி தாலிபன் ஆட்சியிலான ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்துச் சென்றது அமெரிக்க ராணுவம். அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படையினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், அடுத்த சில மாதங்களிலேயே மண்ணைக்கவ்வியது தாலிபன். இப்போது மக்கள் தப்பியோடுவதுபோல, அப்போது தாலிபன் மற்றும் அல்-கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர்கள் முல்லா முகமது ஒமர், ஒசாமா பின்லேடன் உள்ளிட்டோர் பாகிஸ்தான் எல்லைக்குத் தப்பியோடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து, தாலிபன்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டனர். அமெரிக்கா ஆதரவுடன் 2004-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஹமீத் கர்ஸாய் புதிய அதிபராகத் தேர்வானர். ஆப்கன் அரச ராணுவத்துக்கு உறுதுணையாக அமெரிக்கப் படை அங்கு களத்தில் இருந்தது. இருப்பினும், தாலிபன்களின் கொட்டம் ஓயவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடியே தங்கள் இருப்பை காண்பித்துக்கொண்டிருந்தனர். அந்தநிலையில், அமெரிக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரக் ஒபாமா புதிய அதிபரானர்.

ஒபாமா
ஒபாமா

அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானுக்கு போர் தொடுத்து வந்த வேலை இன்னும் முடியவில்லை. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லேடனைப் பிடிக்காமல் பின்வாங்கப்போவதில்லை என்பதில் மேலும் உறுதியானது அமெரிக்கா. ஆனால், ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க தீவிரவாத குழுக்கள் மறுத்துவிடவே, போர் இன்னும் தீவிரமானது. 2009-ம் ஆண்டு சுமார் 1,50,000 லட்சம் வீரர்களை ஆப்கன் களத்தில் இறக்கியது அமெரிக்கா. உதவிக்கு கனடா, இங்கிலாந்து போன்ற சர்வதேச நாடுகளின் நேட்டோ படைவீரர்களும் நிலைகொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் பத்தாண்டு தேடுதல் வேட்டையின் இறுதிப் பலனாக அந்த நாளும் வந்தது. 2011, மே 2-ம் நாள் பாகிஸ்தானில் ரகசியமாகப் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்கா தனது சீக்ரெட் ஆபரேஷன் மூலம் சுட்டுக்கொன்றது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-வின் இந்தத் துரித நடவடிக்கை உலக அளவில் வியந்து பார்க்கப்பட்டது.

பின்லேடன்
பின்லேடன்

அதற்கடுத்த ஆண்டு 2012, அக்டோபர் மாதம் பெண் கல்வி குறித்து பேசியதற்காக 15 வயது பாகிஸ்தான் சிறுமி மலாலா, தாலிபன்களால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மலாலா குண்டடிப்பட்ட நிகழ்வு மட்டுமே அப்போது பெரும்பாலான உலக மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பள்ளிக்கூடம் சென்ற நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் பாம்பு விஷத்தைக் கலந்தனர் தாலிபன்கள். பல பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வுகளும் போர்ச்சூழலுக்கு நடுவே நடந்துகொண்டுதான் இருந்தன.

மலாலா
மலாலா

அடுத்தகட்டமாக, தாலிபன் தலைவர்களின் தலையை இலக்கு வைத்தது நகர்ந்தது அமெரிக்கா, அந்தச் சூழலில் 2013, ஏப்ரல் 23-ம் தேதி தாலிபன் தலைவரான முல்லா ஒமர் பாகிஸ்தான் மருத்துவமனையில் இருந்தபடியே, உடல்நலக் குறைவால் இறந்துபோன தகவலும் வெளியானது.

அமெரிக்கப் படை, ஆப்கன் வந்த வேலை கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், தனது தாக்குதலின் வீரியத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டது. காரணம், தாலிபன்களுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தனர். எனவே, பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடமே ஒப்படைத்தது அமெரிக்கா.

2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியிலமர்கிறார் அஷ்ரஃப் கானி. அதே ஆண்டு, பெரும்பாலான நேட்டோ படை வீரர்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு நாடு திரும்பினர். இது போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் தாலிபன்களுக்குச் சாதகமாக அமைந்தன. இனி ஆப்கானிஸ்தானை எளிதில் தங்களின் கைகளுக்குள் கொண்டு வந்துவிடலாம் என உத்வேகம் பெற்றது. அதன் விளைவாக தற்கொலைப்படைத் தாக்குதல் போன்ற கொடூரமான முறையில் தாலிபன் தனது தாக்குதலைப் பன்மடங்கு அதிகரித்தது.

அஷ்ரஃப் கானி
அஷ்ரஃப் கானி

2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, சுமார் ஐம்பதாயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். இது ஒருபுறம் தாலிபன்களின் கை ஓங்கிவருவதையும், அரச ராணுவம் பலவீனமடைந்து வருவதையும் வெளிக்காட்டியது.

இந்தநிலையில்தான் கடந்த ஆண்டு கத்தாரிலுள்ள தோஹாவில் வைத்து சரியாக 2020, பிப்ரவரி 29-ம் நாள், அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. அதில்,

அல்-கொய்தா போன்ற பிற தீவிரவாதக் குழுக்களை தாலிபன்கள் ஆதரிக்கவோ, தங்கள் எல்லைப் பகுதிகளுக்குள் செயல்பட அனுமதிக்கவோ கூடாது. மேலும், அமெரிக்க ராணுவத்தினர் மீதான தாக்குதலை தாலிபன்கள் கைவிட வேண்டும். இவற்றைச் சரியாக பின்பற்றினால், 14 மாதங்களுக்குள் ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும்.
அமெரிக்க ஒப்பந்தம்

இதை ஏற்றுக்கொண்ட தாலிபன்கள் அமெரிக்க ராணுவத்தினரை தாக்கும் போக்கைக் கைவிட்டனர். மாறாக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் முற்போக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரத்திலிருக்கும் பெண்கள் எனக் குறிவைத்து தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜோ பைடன் |
ஜோ பைடன் |
Andrew Harnik

இதற்கிடையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கடந்த ஏப்ரல் மாதம், `அமெரிக்கா செப்டம்பர் 11-க்குள் முற்றிலுமாகத் தனது படையினரைத் திருப்பப் பெற்றுக்கொள்ளும்' என அறிவித்தார். அதன்படி தற்போது 90 சதவிகித அமெரிக்கப் படையினர் தாயகம் திரும்பிவிட்டனர். இதுநாள் வரை ஆப்கன் அரசின் பாதுகாப்பு கேடயமாக விளங்கிவந்த அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கவும், ஆப்கானிஸ்தான் அரசு தனித்துவிடப்பட்டது.

ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... திடீர் துப்பாக்கிச்சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்

அறிவிப்பு வெளியானது முதலே பல பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தைப் படிப்படியாக பெருக்கியபடியே முன்னேறியது தாலிபன். பெரும்பாலான அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறியதும், ஆதரவின்றி நிற்கும் ஆப்கன் அரசை அசுர வேகத்தில் தாக்கத் தொடங்கியது. ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பாது என பகிரங்கமாக அறிவித்தது.

அமெரிக்க ராணுவத்தினர்
அமெரிக்க ராணுவத்தினர்

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாநகரங்களான குண்டூஸ், சார்-இ-புல், தலோகான் என அடுத்தடுத்து கைப்பற்றியபடியே, ஆப்கன் ராணுவத்தைப் பின்னோக்கி ஓடவிட்டது. தாலிபன்களின் இருபது ஆண்டுக்கால அதிகாரப்பசியும், அரக்கத்தனமாக தாக்குதல் வெறியும் ஆப்கன் அரச ராணுவத்தினரை நிர்மூலமாக்கின. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பெரும்பாலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தப்பியோடினர்.

வெறும் பத்தே நாள்களில், ஆப்கன் அரசின் அதிகார வளையம் தலைநகர் காபூலுக்குள் சுருங்கியது. இந்தநிலையில், தலைநகரைச் சுற்றிவளைத்துத் தாக்கிய தாலிபன்கள், ஒரே நாளில் காபூலைத் தம்வசப்படுத்தினர். ``போர் முடிவடைந்துவிட்டது. ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் எங்கள் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டது" என ஊடகங்களுக்குத் தெரிவித்து வெற்றிக் கூக்குரலிட்டனர்.

வெற்றி பெற்ற தாலிபன்கள்
வெற்றி பெற்ற தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றப்போவதை முன்கூட்டியே அறிந்த அதிபர் அஷ்ரஃப் கானி, விமானம் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். பீதியடைந்த மக்களில் பெரும்பாலானோர் அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைவதற்காக எல்லை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆப்கனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், தங்கள் நாடுகள் அனுப்பும் விமானத்தில் ஏறி தப்பிச் சென்றுவிடலாம் என்ற நோக்கில் காபூல் விமான நிலையத்தில் கொத்தாகக் குவிந்துள்ளனர். தற்போது அந்த விமான நிலையம் அமெரிக்கா-நேட்டோ படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தாலிபன்கள் வசமான ஆப்கன்; தப்பியோடும் மக்கள்! கதறி அழும் பெண்கள்! - ஆப்கன் மக்களின் மனநிலை என்ன?!

`ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் சொந்த நாட்டு மக்களை தாலிபன்கள் தடுக்கக் கூடாது. அவர்கள் வெளியேற முழு அனுமதியளிக்க வேண்டும்’ என அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயணங்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், விமான நிலையத்திலேயே சிக்கிக்கொண்ட வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள் மரண பயத்தில் உறைந்துள்ளனர். தற்போது ஐந்து பேர் காபூலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்கு அமெரிக்கப் படையினர் இருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது.

காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையம்

இந்தநிலையில், தாலிபன் துணைத் தலைவர் முல்லா பரதார் வெளியிட்ட காணொலியில், `` நாங்கள் வந்த வேகத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் எட்டியிருக்கும் நிலையும் யாரும் எதிர்பார்க்காதது. நாங்கள் அல்லாவின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம், இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. எனவே, நாங்கள் அல்லாவுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது சரிசெய்வதற்கான நேரம். எங்கள் பணியை இந்த தேசத்துக்கு வழங்குவோம். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்!" என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

தாலிபன் தலைவர்கள்
தாலிபன் தலைவர்கள்

இருப்பினும், தாலிபன்களின் கடுமையான இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெண் சுதந்திரம், பெண் கல்வி, பத்திரிகையாளர் பாதுகாப்பு, மதச் சிறுபான்மையினரின் நலன்கள் என அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பேரச்சத்தில்தான் இந்த நொடிவரையிலும் அந்த மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தாலிபன் அரசுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் தேசநலனுக்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. அமையவிருக்கும் தாலிபன் ஆட்சியில் என்னவெல்லாம் இனி நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாலிபன்கள்... ஆப்கனை ஆளப்போகும் இவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு என்ன? ஓர் அலசல்!
அடுத்த கட்டுரைக்கு