Published:Updated:

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு...

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு...

முதல் உலகப்போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டிருந்தது. ‘துருக்கிக்கு எந்த இடையூறும் விளைவிக்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தே இந்திய முஸ்லிம்களை பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியிருந்தது.

னால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை மீறியதால் துருக்கிப் பேரரசின் மன்னரும் உலக இஸ்லாமியர்களின் தலைவருமான காலிபாவின் பக்கம் நின்று போரிடுவதற்காக இந்தியாவில் இருந்து ஹிந்துகுஷ் மலைகளைக் கடந்து சென்றனர் சில இஸ்லாமிய இளைஞர்கள். ஹிந்துகுஷ் மலைகளுக்கு அப்பால் இருந்தது புரட்சி நடந்துகொண்டிருந்த ரஷ்யா. இந்தியாவிலிருந்து கடல்வழியாகவோ, ஈரான் மார்க்கமாகவோ செல்லும் பாதைகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ரஷ்யா வழியாகப் போகும் முடிவு எடுக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த இளைஞர்களை தாஷ்கன்ட்டில் வரவேற்கக் காத்திருந்தார், அவர்களுக்கு முற்றிலும் முரணான கொள்கைகளைக் கொண்ட ஒருவர். இந்த இந்தியர்களை அரசியல்படுத்தும் பொறுப்பை எம்.என்.ராய் என்ற புரட்சிக்காரரிடம் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் ஒப்படைத்திருந்தது. எம்.என்.ராய் இந்த இளைஞர்களுக்காக ஒரு பயிற்சிப்பள்ளியை நிறுவி ஆயுதப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபட்டார். உண்மையான இறைத்தொண்டு என்பது தங்கள் நாட்டிலுள்ள உழைக்கும் மக்களைக் கொடுங்கோன்மையிலிருந்து காக்கப் போரிடுவதாகும் என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்தார். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களைக் கொண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 17.10.1919-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை, ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆச்சர்யங்களில் ஒன்று. இந்த வரலாற்றுக் கணக்குப்படி ‘இது இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடுகிறது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இதை நூற்றாண்டாக ஏற்கவில்லை. சி.பி.ஐ-யின் கணக்குப்படி 2025-தான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1922-ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கயாவில் கூடியது. அப்போது பொதுவுடைமைத் தத்துவம், கம்யூனிஸ்ட் அகிலம் போன்றவைமீது பிரிட்டிஷ் அரசு கடும் பகைமை கொண்டிருந்தது. பொதுவுடைமை எண்ணம் கொண்டவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளத் தயங்கிய அந்தக் கூட்டத்தில் 63 வயதான சிங்காரவேலர் தன்னைக் கம்யூனிஸ்ட் என்று கம்பீரமாக அறிவித்துக் கொண்டார். மாநாடு அதிர்ந்துபோனது.

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு

மாஸ்கோவிலும், தாஷ்கன்ட்டிலும், பெர்லினிலும் புரட்சியாளர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தபோது நமது சென்னையில் அவர்கள் கட்ட நினைத்த அமைப்பைவிடப் பன்மடங்கு வலிமை வாய்ந்த ஓர் அமைப்பை அந்த மக்களைக் கொண்டே உருவாக்கினார் சிங்காரவேலர். 27.4.1918-ல் பிரிட்டிஷ் முதலாளிக்குச் சொந்தமான பங்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் மில்ஸில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கினார். இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இதுதான்.

1.5.1923-ல் சிங்காரவேலர் இந்துஸ்தான் தொழிலாளர் விவசாயிகள் கட்சியை உருவாக்கினார். பம்பாய் மாகாணத்தில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியிருந்த டாங்கேவும் இதில் இணைந்தார். எம்.என்.ராய் மாஸ்கோவிலிருந்து இந்த அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இவையனைத்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். சிங்காரவேலர், டாங்கே, முஸாபர் அகமது, உஸ்மான் போன்ற பொதுவுடைமைத் தலைவர்கள்மீது அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சிங்காரவேலர் மட்டும் உடல்நிலை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

ஆங்காங்கே ஒருங்கிணைக்கப்படாமல் இயங்கிக்கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட்கள் ஒன்றிணைந்து 27.12.1925-ல் கான்பூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் ஓர் அங்கமாகவே பொதுவுடைமைவாதிகள் செயற்பட்டனர். இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்தன. கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தலை மறைவாயினர்.

கொடூரமான நிலப்பிரபுக்கள் கிராமப்புறங்களில் வரைமுறையற்ற அதிகாரம் செலுத்தினர். ஆலைகளில் சவுக்கால் அடிப்பதும், பதினான்கு மணிநேரம் வேலை வாங்குவதும் சகஜமாக இருந்தது. பொதுவுடைமைக் கட்சி உக்கிரமான தொழிலாளர் போராட்டங்களை நடத்தியது. எண்ணற்ற தியாகங்கள், களப்பலிகள், மரணதண்டனை களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க உரிமைகளை வென்றெடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஆயிரக்கணக்கான தோழர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களின் காரணமாகவே விவசாயக் கூலிகள், குத்தகை விவசாயி களின் உரிமைகள் கவனம் பெற்றன. காங்கிரஸ் அரைமனதாக நிலச்சீர் திருத்தத்துக்கு ஒப்புக் கொண்டது.

1952-ல் கட்சி புரட்சியைக் கைவிட்டு வெளிப்படையாக இயங்குவதாக முடிவு செய்து தேர்தலில் பங்கெடுக்க முடிவுசெய்தது.கட்சி ஆயுதங்களைக் களைந்து தேர்தல் பாதைக்கு வந்துவிட்டாலும் கீழே ஆலைகளிலும், கிராமங்களிலும் நிலவரம் வன்முறை மயமானதாகவே இருந்தது. கட்சி ஊழியர்கள் எந்த நேரமும் தாக்கப்படலாம், கொலை செய்யப்படலாம் என்ற சூழலிலேயே பணிபுரிய வேண்டியிருந்தது. கண்ணாக்குட்டி போன்ற தொழிலாளர் தலைவர்கள் கோவையில் கைத்துப்பாக்கி யுடன் நடமாட வேண்டிய நிலையே இருந்துவந்தது. கேரள மாநிலம் உருவானதும் 1957-ல் நடந்த தேர்தலில் பொது வுடைமைக் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தையும், தனியார் கல்வி நிலையங்களை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கும் கல்விச் சட்டத்தையும் கொண்டு வந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

சோவியத் யூனியனையே இந்திய கம்யூனிஸ்ட்கள் ஆதரித்துவந்தனர். ஆனால் சீனப்புரட்சிக்குப் பிறகு, ‘ரஷ்யப்பாதையா, சீனப்பாதையா?’ என்ற விவாதம் அவர்களிடம் எழுந்தது. சீனத் தலைவர் மாவோ, ரஷ்யத் தலைவர் குருஷேவ் மீது கடும் விமர்சனம் வைத்தார்.

அந்தக் காலத்தில் இந்தியா கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வந்தது. நாடெங்கும் கடும் உணவுப்பஞ்சம் நிலவியது. உணவுக் கலகங்கள் வெடித்துக் கிளம்பின. அமெரிக்காவி லிருந்து கப்பல்களில் வந்திறங்கிய கோதுமையை உள்நாட்டுக்குக் கொண்டு வர முடியாதபடி பட்டினிப் பட்டாளங்கள் துறைமுகத்தை முற்றுகை யிட்டன. விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருந்தன. தமிழகத்திலும், வடகிழக்கிலும் தேசிய இனக் கோரிக்கைகள் வலுப்பெற்றுவந்தன. நேரு வயதாகித் தளர்ந்து வந்தார். காங்கிரஸ் அவருக்கு நிகரான அடுத்த கட்டத் தலைமை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மென்மையான போக்கு பிடிக்காமல் பலர் குமுறிக்கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. அக் 31-லிருந்து நவ 7 வரை நடந்த கல்கத்தா மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் பாதையில் தன்னைக் கரைத்துக் கொண்டதாகவும் புரட்சிகரச் சிந்தனைகளை அவர்கள் கைவிட்டுவிட்டதாகவும் ஒருபிரிவினர் நினைத்தனர். கனன்றுகொண்டிருந்த நெருப்பு, மேற்குவங்கத்தில் இருந்த கிராமமான நக்சல்பாரியில் வெடித்தது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி தன் ஊழியர்களில் நாற்பது சதவிகிதம் பேரை இழந்தது. ஆந்திராவிலும், தமிழகத்திலும், பஞ்சாபிலும் மாநிலக்குழு உறுப்பினர்களே நக்சல்பாரிகளாக மாறினர். நக்சல்பாரி பாதையைப் பின்பற்றியவர்கள் நக்சலைட்டுகள் என்றழைக்கப் பட்டனர். அவர்கள் தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அழைத்துக்கொண்டனர். சாரு மஜும்தார் அதன் தலைவராக இருந்தார்.

ஆயுதப்புரட்சியின் மூலம் இந்தியாவின் அரசியலதி காரத்தைக் கைப்பற்றுவது என்பது நக்சல்பாரி பாதையானது. விவசாயி களையும் தொழிலாளர் களையும் சுரண்டும் வர்க்க எதிரிகளை க் கொன்ற ‘அழித்தொழிப்பு’களும் நடந்தன. அரசாங்கங்கள் நக்சல்பாரிகளை வேட்டையாடின. சாரு மஜும்தாரே கொல்லப்பட்டார்.

தொழிலாளர்
தொழிலாளர்

பின்பு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கம் மூன்று அரசியல் பாதைகள் கொண்ட நூற்றுக்கணக்கான துண்டுகளாகச் சிதறியது.

1. பழைய பாதையைத் தொடர்வது, 2. பழைய பாதையோடு மாணவர், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பதையும் இணைத்துக் கொள்ளல், 3. ஆயுதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுதல்.

ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பது என்பதைக் கடைப்பிடித்த பல்வேறு குழுக்கள் பல்வேறு நிலைகளைக் கடந்து இப்போதைய மாவோயிஸ்ட் கட்சியாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் பெரும்பலம் கொண்டிருந்த ஆயுதப்புரட்சியாளர்கள் இப்போது தங்கள் ஆதரவுத் தளங்களை இழந்திருக்கின்றனர்.

சி.பி.ஐ, சி.பி.எம், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்கள் எனப்படும் நக்சல்பாரிகள் என்ற இந்த மூன்று கம்யூனிச இயக்கங்களில் ஒப்பீட்டளவில் அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே. கேரளா, மேற்குவங்கங்களில் நிலச்சீர்திருத்தம் போன்ற சாதனைகளை நிகழ்த்தியது. ஆனால் மேற்குவங்கத்தில் டாடாவின் தொழிற் சாலைக்காக சிங்கூர், நந்திகிராமத்தில் நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல், செங்கொடிக் கட்சி வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. மேற்குவங்கம், திரிபுரா எனப் பல மாநிலங்களில் படிப்படியாகத் தன் செல்வாக்கை இழந்துள்ள சி.பி.எம், கேரளாவில் மட்டும் தன்னைத் தக்கவைத்துள்ளது.

இன்று ஏறக்குறைய அனைத்து இடதுசாரி அமைப்புகளுமே ஒரு தேக்கத்தை அடைந்துள்ளன. எத்தனையோ அடக்கு முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பொதுவுடைமை இயக்கங்கள் இப்போது தடுமாறுவதைக் காணமுடிகிறது. ஆனாலும்கூட லட்சம் லட்சமாக கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டுப் பெருநகரம் தோறும் அலைந்து திரியும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கட்சி அதிகம் தேவைப்படுகிறது. பூட்டு தனக்கான சாவியைக் கண்டுகொள்ள அதிக நாள் ஆகாது என்று நம்பலாம்.