`நான் மனதைக் கேட்டு முடிவெடுப்பவள்!’ - மன்னரை எதிர்க்கும் தாய்லாந்தின் `சிங்கப்பெண்' பானுசயா

பானுசயா யாருடன் மோதிக்கொண்டிருக்கிறார் என்பதையும், அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள, நாம் தாய்லாந்தை, அதன் கொண்டாட்ட முகமூடியைத் தாண்டி பார்க்க வேண்டியது அவசியம்.
உலகின் முக்கியமான சுற்றுலாத் தளம் தாய்லாந்து. அதன் தலைநகரமான பாங்காக் வீதிகளில் உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒருவர் நடந்துகொண்டிருப்பார். இன்று அந்த சாலை, போராட்ட சாலை. அதில் 22 வயது மாணவி ஒருவர், அரசுக்கு எதிரான பேரணியில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறார். அவர், பானுசயா சிதிஜிராவட்டனகுல். பானுசயா யாருடன் மோதிக்கொண்டிருக்கிறார் என்பதையும் அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள, நாம் தாய்லாந்தை அதன் கொண்டாட்ட முகமூடியைத் தாண்டி பார்க்க வேண்டியது அவசியம்.

தாய்லாந்து, பிரதமரைக் கொண்ட ஒரு ஜனநாயக நாடு. ஆனாலும் அவர் மன்னருக்குக் கீழ்தான் இருப்பார். அந்த வகையில் அங்கு இன்னமும் மன்னராட்சிதான் நடைபெறுகிறது. தாய்லாந்து வரலாற்றில் பல முறை முடியாட்சியை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ராணுவமும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மீண்டும் மன்னர்களே ஆட்சியைக் கைப்பற்றி வந்துள்ளனர்.
அப்படி தாய்லாந்தின் 10-வது மன்னராக தற்போது முடியாட்சி செய்துவருகிறார், வஜிரலோங்கார்ன். தற்போதைய பிரதமராக இருக்கும் பிரயுத் சன் ஒச்சா, முன்னாள் ராணுவத்தளபதி. இவர்கள் இருவரின் மீதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மக்களும் இளைஞர்களும் 2014-ம் ஆண்டிலிருந்தே போராடி வருகிறார்கள்.
தாய்லாந்தில் மன்னருக்கு எதிராகப் பேசுவது பெருங்குற்றம். அனாலும் மக்கள் தங்களது போராட்டங்களை விடாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் சமீபகாலமாக பெண்கள் பெரும்பான்மையாகக் கலந்துகொள்வது சிறப்பு செய்தி. அதற்குக் காரணமானவர், தாய்லாந்து மாணவர்கள் யூனியனின் செய்தித் தொடர்பாளார் பானுசயா சிதிஜிராவட்டனகுல். தாய்லாந்தில் எல்லோருமே மன்னரின் `அடிமைகள்'தான் என்றாலும், பெண்கள் அதன் விளிம்பு நிலையில் இருப்பதைக் காண சகிக்காமல்தான் இந்த நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார் பானுசயா.
உண்மையில், தாய்லாந்துதான் பெண்ணுரிமை தளத்தில் ஆசியாவிலேயே முன்னோடி. 1932-லேயே பெண்களுக்கு வாக்குரிமை அங்கு வந்தது. தாய்லாந்து இளைஞர்களைவிட பெண்களே அதிகமானோர் கல்லூரியில் கற்கிறார்கள். நாட்டின் மொத்த வேலைபார்க்கும் மனிதவளத்தில் 45% பெண்கள்தாம். 40% தனியார் நிறுவனங்கள் பெண்களின் தலைமையில்தான் இயங்குகின்றன. உலகின் சராசரியைவிடவும் இது அதிகம். ஆனாலும் தாய்லாந்து ஆண்களின் நாடு. அங்கே பெண்கள் அடிமைகள்தான். அதுதான் பானுசயா போன்றவர்களின் கவலையே. தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கார்ன் நான்கு பெண்களை திருமணம் செய்திருப்பது, கொரோனா பரவலின் ஆரம்பநாள்களில், மன்னர் 20 பெண்களுடன் ஒரு பிரமாண்ட ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்ற செய்திகள் வந்தது என, அந்நாட்டில் பெண்களின் நிலையை சொல்லும் கறுப்பு உதாரணம் வஜிரலோங்கார்ன்.

தாய்லாந்தில் இப்போது பிரதமராக இருக்கும் பிரயுத்தும் ஓர் ஆணாதிக்கவாதியே. ``தாய்லாந்து வீடுகள் பெண்களின் ராஜ்ஜியம்தான்; ஆனால் வெளியே ஆண்கள்தான். வேலையிடங்களில் ஆண்களுக்குத்தான் பவர்" - இதைச் சொன்னவர் நாட்டின் பிரதமர். ஆண்களுக்கு இணையான உரிமைகளை பெண்களுக்குத் தந்தால் தாய் சமூகமே அழிந்துவிடும் என்ற எண்ணம்கொண்ட பிரதமர் இருந்தால், அந்த நாடும் நாட்டுப் பெண்களும் என்ன ஆவார்கள்? அதனால்தான் பானுசயா அரசுக்கு எதிராக நிற்கிறார். அந்த எழுச்சியில் உள்ள உணர்வுக்காகவும் உண்மைக்காகவும்தான் பலர் அவரை பின்தொடர்ந்து நிற்கிறார்கள்.
தாய்லாந்து பல நூறு வருடங்களாக மன்னராட்சியும் ராணுவமும் இணைந்த கூட்டு அரசாகவே இருந்து வருகிறது. அதனை மாற்றி புதிய முறையில் தேர்தல்களும் அரசியலமைப்பும் வரவேண்டும் என்பதே பானுசயா போன்ற எழுச்சியாளர்களின் கோரிக்கை. ஏனென்றால் இந்த முறையில் ஆட்சிக்கு வருபவர்கள், மன்னரை பாதுகாப்பதற்கு மட்டுமே தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்திவருகிறார்கள்.

``கடந்த சில ஆண்டுகளில் மன்னராட்சியைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் இல்லை. `இத்தனை ஆபத்தான விஷயத்தை முயலாதே' என்று என் மூளை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், `இதை செய்து முடி' என்று என் மனம் சொல்கிறது. எனவே என் மனதைக் கேட்டு நான் முடிவெடுக்கிறேன். இதை நான் செய்தே ஆக வேண்டும்’’ என்கிறார் சிங்கப் பெண் பானுசயா.
கொரோனா பிரச்னையெல்லாம் ஓய்ந்து உலகம் மீண்டும் தாய்லாந்துக்கு சுற்றுலா போகத்தான் போகிறது. அப்போது பானுசயா அந்த நாட்டில் இருக்க வேண்டும், அவர் விரும்பியதெல்லாம் நடந்துவிட வேண்டும் என அவர் ஆசைப்படவில்லை. அதற்கான பாதையில் ஓரடியாவது தாய்லாந்து எடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே அவர் அதிகாரத்தின் முன் அஞ்சாமல் நின்றுகொண்டிருக்கிறார். அது நடக்கும்வரை பானுசயாவும் தாய்லாந்து நாட்டுப் பெண்களும் ஓயப்போவதில்லை என்பதுதான், இன்றைய பாங்காக் சாலைகள் உலகுக்கும், அந்நாட்டு மன்னருக்கும் சொல்லிக்கொண்டிருக்கும் சேதி.