Published:Updated:

பழங்குடியினர் போராட்டம்... ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்றத்துக்குத் தீவைப்பு - நடந்தது என்ன?!

ஆஸ்திரேலியா - பழைய நாடாளுமன்றம்
News
ஆஸ்திரேலியா - பழைய நாடாளுமன்றம்

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானிகூட, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அரசின் அனுமதி பெற்றிருந்தார். ஆனால்...

ஆஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவிலிருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தீவைக்கப்பட்ட சம்பவம், அந்த நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1927 முதல் 1988 வரை இந்தக் கட்டடத்தில்தான் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் இயங்கிவந்தது. 1988-ம் ஆண்டு இந்தக் கட்டடத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்தை எடுத்துக்காட்டும் அருங்காட்சியகமாக மாறியது பழைய நாடாளுமன்றக் கட்டடம். மேலும், ஆஸ்திரேலியாவின் தேசிய பாரம்பர்யக் கட்டடமாகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, நாட்டின் ஜனநாயக அடையாளமாகக் கருதப்படும் பழைய நாடாளுமன்றக் கட்டடம் தீவைக்கப்பட்டிருக்கும் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பழைய நாடாளுமன்றம், ஆஸ்திரேலியா
பழைய நாடாளுமன்றம், ஆஸ்திரேலியா
Twitter/@siobhanheanue

போராட்டம் எதற்காக?

1972-ம் ஆண்டு முதல் `Aboriginal Tent Embassy' என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளான பழங்குடியினருக்காக அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. பூர்வகுடிகளுக்கான உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் 50-ம் ஆண்டுவிழாவை ஒட்டி, கடந்த 10 நாள்களுக்கு மேலாகவே பழைய நாடாளுமன்றக் கட்டடம் அருகே போராட்டம் நடைபெற்றுவருகிறது. `ஆஸ்திரேலியாவில், பூர்வகுடிகளுக்கான இறையாண்மை உறுதி செய்யப்பட வேண்டும்' என்பதே இந்த அமைப்பின் முக்கியக் கோரிக்கை. இத்தனை ஆண்டுக்காலம் ஆகியும் தங்களின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கத்தில்தான் கடந்த சில நாள்களாகப் பழைய நாடாளுமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் பழங்குடியின மக்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்ப்பரேட் சுரங்கங்களால் பிரச்னை!

ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் பலரும் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். சுரங்க நிறுவனங்களால் தங்களது இருப்பிடத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவருவதாகக் கூறுகிறார்கள் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள். இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானிகூட, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அரசின் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவதற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் நடத்திய தீவிர போராட்டங்கள் காரணமாக, அதானியால் இன்று வரை அங்கு சுரங்கத் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இவ்வாறு பூர்வகுடிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்கத்தான் டென்ட் எம்பஸி அமைப்பு தொடங்கப்பட்டது.

போராட்டத்தில் என்ன நடந்தது?

டிசம்பர் 30-ம் தேதியன்று காலை 11:30 மணியளவில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இதில் நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பக்கக் கதவு முழுவதுமாக தீக்கிரையானது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அருங்காட்சியகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் உயிரோடு மீட்கப்பட்டனர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில, ``தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. சம்பவ இடத்திலிருந்த சிலர், `போராட்டக்காரர்கள் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நெருப்பைப் பற்றவைத்து அடையாளப் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருங்காட்சியகக் கட்டடத்தில் தீப்பிடித்துவிட்டது' என்று நம்மிடம் சொன்னார்கள்'' என்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான போராட்டம்
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான போராட்டம்
ஆஸ்திரேலிய ஊடகமான ஏ.பி.சி செய்தி நிறுவனம், ``போராட்டக்காரர்களில் சிலர் `அது எரியட்டும் விடுங்கள்... அது எரியட்டும் விடுங்கள்!' என்று சத்தம் போட்டதாகச் சம்பவ இடத்திலிருந்த ஒருவர் கூறினார்'' என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த டிசம்பர் 21-ம் தேதியன்று போராட்டக்காரர்கள் தீ பற்றவைத்து அடையாளப் போராட்டம் நடத்தியபோதும், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பக்கக் கதவில் சிறிதளவு சேதமடைந்ததாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அதன் காரணமாக, அருங்காட்சியகத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது ஆஸ்திரேலிய அரசு. இந்த நிலையில்தான், நேற்று (டிச.30) ஏற்பட்ட தீ விபத்தில் முன்பக்கக் கதவு முழுவதுமாக எரிந்து சாம்பலாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்டனங்கள்!

இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), ``ஆஸ்திரேலியாவில் இப்படி நடந்ததேயில்லை. நம் நாடு இப்படிச் செயல்படுவதில்லை. நாட்டின் ஜனநாயக அடையாளச் சின்னத்தின் மீது இப்படியான தாக்குதல் நடந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது'' என்றிருக்கிறார்.

பூர்வகுடிகளுக்கான டென்ட் எம்பஸி அமைப்பு, ``நாங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துவருகிறோம். அதற்கான போராட்டங்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவோம். இது போன்று பொது, தனியார் சொத்துகளைச் சேதப்படுத்துவது ஏற்புடையதல்ல. அங்கு தீ பற்றவைத்து அடையாளப் போராட்டம் நடத்தப்போவது எங்கள் அமைப்பின் மூத்த தலைவர்கள் யாருக்குமே தெரியாது. இது மன்னிக்க முடியாத செயல்'' என்று தீவைப்புச் சம்பவத்துக்குக் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது.

ஸ்காட் மோரிசன்
ஸ்காட் மோரிசன்
twitter/ @ScottMorrisonMP

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் காரணமா?

கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியாவில், கொரோனா தடுப்பூசி போட மறுத்து அரசுக்கு எதிராகச் சிலர் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள்கூட பழங்குடியின போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவி பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீவைத்திருக்கலாம் என்றும் ஒரு செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதேநேரத்தில், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திவருகிறது ஆஸ்திரேலிய காவல்துறை.