இலங்கையின் முன்னாள் அதிபர்களான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே இருவரும் கனடா நாட்டுக்குள் நுழைய அந்த நாட்டு அரசு தடைவிதித்திருக்கிறது. அவர்களைத் தவிர இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கும் கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்தத் தடை?
கனடா அரசின் அறிவிப்பு!
கனடா அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில், மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, ராணுவ அதிகாரிகளான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி ஆகியோருக்கு கனடா அரசு தடைவிதித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 1983-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் திட்டமிட்டு, மனித உரிமை மீறப்பட்டதால், இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அரசு இணையதளத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், ``இலங்கையில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடந்த ஆயுதப் போர் காரணமாகப் பொருளாதாரம், அரசியல் ஸ்திரமற்ற நிலை உண்டாகியிருக்கிறது. பெரிய அளவில் மனித உரிமை மீறல் நடைபெற்றிருக்கிறது. இதனால், இலங்கை மக்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். சர்வதேசச் சட்டத்தை மீறுவோர் அதன் பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கனடா இந்தத் தடையை அமல்படுத்தியிருக்கிறது.
எதற்கெல்லாம் தடை?
ராஜபக்சே சகோதரர்கள் உட்பட நான்கு பேரும் கனடாவில் நுழைய மட்டுமல்ல... வேறு சில விஷயங்களுக்கும் தடை விதித்திருக்கிறது கனடா அரசு. ``இந்த நான்கு பேருக்கும் கனடாவில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும். எந்தவொருவிதத்திலும் இந்த நால்வரும் கனடாவுக்குள் நுழைய முடியாது. கனடாவுக்குள் இருக்கும் நபர்களுடனும், கனடாவுக்கு வெளியிலிருக்கும் கனடியர்களுடனும் நிதிப் பரிமாற்றம், வர்த்தகம் என அனைத்து வகைத் தொடர்புகளுக்கும் தடைவிதிக்கப்படுகிறது'' என கனடா அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், ``விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் காயமடைந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறி தற்போது வரை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கொடூரச் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும்தான்.
ராஜபக்சே சகோதரர்களும், இலங்கையின் முன்னாள் ராணுவ உயரதிகாரிகளும் கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருப்பது தாமதமான முடிவுதான் என்றாலும், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றனர். கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களும் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றனர். அதேநேரம், ராஜபக்சே சகோதரர்களை, சர்வதேச நாடுகள் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது'' என்கிறார்கள்.
அதிருப்தி தெரிவித்த இலங்கை!
இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு கனடா அரசு விதித்திருக்கும் தடைகளுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான கனடா தூதரை வரவழைத்து, அவரிடம் அரசின் அதிருப்தியைப் பதிவுசெய்திருக்கிறது, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோத்தபயவுக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் மீண்டும் இலங்கைக்கே திரும்பினார் அவர். அதன் பிறகு, தொடர்ச்சியாக அமெரிக்காவுக்குச் செல்ல தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் கோத்தபய. இந்த நிலையில், கனடா அவருக்குத் தடைவிதித்திருக்கிறது. கனடாவின் இந்த முடிவுக்குப் பிறகு வேறு சில நாடுகளும் இந்த முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படிப் பல நாடுகளிலும் தடைகள் விதிக்கப்பட்டால், அது ராஜபக்சே குடும்பத்தினருக்குப் பெரும் சிக்கலை உண்டாக்கும்!