Published:Updated:

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிமீது அதிருப்தி அதிகரித்தது ஏன்... என்ன நடக்கிறது அங்கே?

இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இவரின் ஆட்சி மீது அதிருப்தி அதிகரித்தது ஏன்?

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிமீது அதிருப்தி அதிகரித்தது ஏன்... என்ன நடக்கிறது அங்கே?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இவரின் ஆட்சி மீது அதிருப்தி அதிகரித்தது ஏன்?

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாஃப் கட்சியின் தலைவருமானவர் இம்ரான் கான். பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 342 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்ரான் கானின் கட்சி வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க மொத்தம் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்களின் ஆதரவோடு இம்ரான் கான் பிரதமரானார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

சமீபகாலங்களாக பாகிஸ்தானில் நிலவிவரும் பணவீக்கம், அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இம்ரான் கான் அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகிறார்கள். கொரோனா பேரிடர் சமயங்களில் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்பிக்கையில்லா தீர்மானம்:

அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், இம்ரான் கான் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அவையின் துணைத் தலைவர் காசிம் கான், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் யார் என்று கேட்டறிந்தார். மொத்தம் 161 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மூன்று நாள்களுக்கு மேல் நடைபெறும். கடந்த மார்ச் 28-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அன்று அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது.

பிரமாண்ட பேரணி:

சமீபத்தில் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் அந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். மேலும், அந்தப் பேரணியில் பேசிய இம்ரான் கான், ``இந்த அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டுச் சதி உள்ளது. இந்த முயற்சியில் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நாங்கள் இந்த நாட்டின் நலனில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். நான் ராஜினாமா செய்யப்போவதில்லை. சண்டையின்றி சரணடையப் போவதில்லை. மோசடிகள், அழுத்தத்தின் பெயரில் நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பேசியிருந்தார். அதேநேரத்தில் தனது கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கக் கோரி இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிக்க இம்ரான் கானுக்கு மொத்தம் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவரின் கட்சியில் 155 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கிடையே, இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி, தனது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164-ஆகக் குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது.

அதே சமயத்தில் இம்ரான் கானின் சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்கள் என்று 20-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களும் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்றுவரும் ஆட்சியின் பதவிக்காலம் வரும் 2023-ம் ஆண்டு வரை இருக்கிறது. இருந்தபோதிலும், கூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியாளர்கள் இருப்பதால், இம்ரான் கான் போதிய ஆதரவைப் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்பாரா இல்லை இந்த அரசு கவிழ்ந்துவிடுமா என்பது வாக்கெடுப்பின் முடிவில்தான் தெரியவரும். பெரும்பான்மையை இழந்ததால், இம்ரான் கான் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர்களில் பெரும்பாலானோர் தங்களின் ஆட்சிக்காலத்தை முழுமையாக முடிவு செய்தது கிடையாது என்பது வரலாறு. இம்ரான் கான் விஷயத்தில் இந்த வரலாறு தொடருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.