Published:Updated:

வம்புக்கிழுத்த பாக்; வானிலை அறிவிப்பில் உதைத்த இந்தியா! மாறும் கில்ஜிட் பலுசிஸ்தான் அரசியல் #POK

Kashmir
Kashmir ( AP Photo /Channi Anand, File )

காஷ்மீர் விவகாரத்தில் சத்தமில்லாமல் ஒரு பிரளயத்தை உருவாக்கியுள்ளது இந்திய அரசு.

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிறந்தன. காஷ்மீரில் மெகபூபா முப்தி போன்ற தலைவர்கள் இன்றும் தடுப்புக் காவலில் அடைபட்டுள்ள சூழலில், காஷ்மீர் அரசியலில் சத்தமில்லாமல் அடுத்தகட்ட காய் நகர்த்தலை முடித்துள்ளது இந்திய அரசு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிகளின் வெப்பநிலையை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ராஜாங்க, ராணுவ ரீதியாக இது மிகப்பெரிய மாற்றம் என்கிறது இந்திய வெளியுறவுத்துறை வட்டாரம்.

ராஜா ஹரிசிங்
ராஜா ஹரிசிங்

கில்ஜிட் மற்றும் பலுசிஸ்தான்

1947-ல் நாடு சுதந்திரமடைந்த பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அதுவரை ராஜா ஹரி சிங்கின் கட்டுப்பாட்டில் தனிநாடாக இருந்த ஜம்மு - காஷ்மீரை யார் எடுத்துக் கொள்வது என இரு நாடுகளும் முஷ்டியை முறுக்கின. காஷ்மீர் மாநிலத்தில் வாக்கெடுப்பு, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாகத் தொடர்வதா என காஷ்மீர் மக்களையே முடிவெடுக்க வைக்கலாம் என இந்தியா அளித்த யோசனையை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

அக்டோபர் 24, 1947-ல் பாகிஸ்தான் ராணுவ துணையுடன் பதான் பழங்குடியினர் காஷ்மீர் நோக்கி படையெடுத்தனர். ஸ்ரீநகரை பிடித்து ராஜா ஹரி சிங்கை விரட்டுவதே அவர்களது நோக்கமாயிருந்தது. சுதாரித்த ஹரிசிங், இந்திய அரசின் உதவியை நாடினார். அக்டோபர் 25-ம் தேதி ஸ்ரீநகருக்குப் பறந்த அப்போதைய உள்துறை செயலாளர் வி.பி.மேனன், இந்தியாவுடன் காஷ்மீர் நாடு இணைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அக்டோபர் 26-ம் தேதி இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதற்கான உடன்படிக்கையில் ராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். அடுத்த நாளே டாடா ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலமாக இந்திய ராணுவம் ஸ்ரீநகருக்குச் சென்றது. முன்னேறி வந்த பதான் பழங்குடியின படைகள் விரட்டியடிக்கப்பட்டன. இந்தியா- பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே நேரடியாகவே போர் மூண்டது.

இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு ஜனவரி 1, 1948-ல் ஐக்கிய நாடுகள் சபையை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கேட்டுக்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தம் ஒரு ஆண்டு நடைபெற்று, ஜனவரி 1, 1949-ல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. ஜூலை 29, 1949-ல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டன. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் ஒரு அங்கமான கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பாகிஸ்தான் ராணுவம், அப்பகுதி பிரதிநிதிகளாகச் சிலரை நியமித்து, அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டது. கராச்சி மாநகரில் ஏப்ரல் 28, 1949-ல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதியின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, தொலைத்தொடர்பு விவகாரங்களை பாகிஸ்தானே மேற்கொள்ளலாம் என ஆனது. கில்ஜிட் பலுசிஸ்தான் மாகாணம் எனப் பெயரிடப்பட்ட இப்பகுதிக்கு பாகிஸ்தான் மாகாண அமைப்பில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

கில்ஜிட் மக்களே ஏற்றுக்கொள்ளாத இந்த ஒப்பந்தத்தை, இந்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்நிலையில், கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதியில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் எனக் கடந்த வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பாகிஸ்தான் அரசுக்கு அனுமதி அளித்தது. வெகுண்டெழுந்த இந்திய வெளியுறவுத்துறை, ``கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை. இந்தியாவிடம் இருந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டு பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத்துறையிடம் இருந்து காட்டமான அறிக்கை வெளிவந்தது.

கில்ஜில் பலுசிஸ்தான்
கில்ஜில் பலுசிஸ்தான்

இது இந்தியா ஸ்டைல்!

பாகிஸ்தானுக்கு பதிலடி என வெறும் வார்த்தையால் சாமரம் வீசாமல், இம்முறை செயலில் காட்டிவிட்டது இந்திய அரசு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கில்ஜிட், முசாபராபாத் நகரங்களின் வானிலைத் தகவலை இந்திய வானிலை மையம் முதல்முறையாக வெளியிட்டுள்ளது. இச்செய்தியை அரசின் அதிகாரபூர்வ டிவி சேனலான தூர்தர்ஷனும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. ‘இது இந்தியாவின் ஸ்டைல்!’ என்கிறார்கள் ராணுவ வட்டாரத்தில். ``1971-ல் கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய பங்களாதேஷ்) இந்தியாவுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் வானிலை தகவலை வழங்க ஆரம்பித்தது. எதிரியின் கட்டுப்பாட்டிலுள்ள தன்னுடைய பகுதிகளை மீட்டெடுக்க இந்திய ராணுவம் எடுக்கும் தந்திரம்தான் இது” என்கிறது ராணுவ வட்டாரம்.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிதான் பாகிஸ்தானை சீனாவோடு இணைக்கிறது. ஆப்கானிஸ்தானோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இப்பகுதியில் தங்கம், காப்பர் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ராணுவ ரீதியாக இப்பகுதியைக் கட்டுப்படுத்தினால், ஆப்கானிஸ்தான் வாயிலாக மத்திய ஆசிய பகுதியில் இருந்து பாகிஸ்தான் துணையில்லாமலேயே இயற்கை எரிவாயு பைப்லைனை இந்தியாவால் அமைத்துக்கொள்ள முடியும். கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிக்குள் சீனா அமைத்துள்ள கரஹோரம் நெடுஞ்சாலையும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன்மூலமாக ராணுவ ரீதியாக சீனாவுக்கும் செக் வைக்க முடியும்.

தூர்தர்ஷன் வானிலை செய்தி
தூர்தர்ஷன் வானிலை செய்தி

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசின் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாத கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதி மக்கள் மெல்ல மெல்லத் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் எங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென ட்விட்டரில் கில்ஜிட் மாணவர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்தது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. வானிலை அறிவிப்பு, தனி ட்விட்டர் கணக்கு என கில்ஜிட் விவகாரத்தில் இந்தியா வேகம் காட்டுவதைப் பார்த்தால், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த அதிரடியை எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு