Published:Updated:

சீனர்களாக மாற ஐந்தாண்டு கெடு; தவிக்கும் உய்குர் இன மக்கள்... குரல் கொடுப்பாரா இம்ரான் கான்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்
சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்

சீன அதிபராக இரண்டாவது முறையாக ஸீ ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முஸ்லிம்கள் மீதான கம்யூனிஸ அரசின் பிடி இன்னும் இறுகியது.

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் தென்னிந்தியா அளவுக்குப் பரந்து விரிந்தது. இங்கே, உய்குர் இன முஸ்லிம் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

காணாமல் போனவர்களைத் தேடும் மக்கள்
காணாமல் போனவர்களைத் தேடும் மக்கள்
Amnesty

இஸ்லாமிய மக்கள் நினைத்த மாத்திரத்தில் தொழுகை நடத்தி விட முடியாது. தலையில் தொப்பி அணிந்துகொள்ள முடியாது. குரான் படிக்கக் கூடாது, முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு நோன்பு இருத்தல் கூடாது, பெண்கள் தலையில் பர்தா அணியக் கூடாது, இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட துண்டு பத்திரிகை அச்சடித்துவிடக் கூடாது. இப்படிப் பல 'கூடாது'களை சீன அரசு முஸ்லிம் மக்களுக்குக் கட்டுப்பாடாக விதித்துள்ளது. மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.

சந்தேகம் ஏற்பட்டால் எந்தக் கேள்வியும் கிடையாது. பிடித்து முகாம்களில் அடைத்துவிடுவார்கள். குறிப்பாக, மற்ற முஸ்லிம் நாடுகளில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் சீனா திரும்புபவர்களைச் சீனா கண் கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கும். சந்தேகம் வந்துவிட்டால் ஆண், பெண், சிறுவர், சிறுமி என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல் முகாம்களில் பிடித்து அடைத்துவிடுவார்கள். இதற்கென்றே ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஆயிரக்கணக்கில் முகாம்கள் உள்ளன. 10 லட்சம் முஸ்லிம் மக்கள் இந்த முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

காணாமல் போன கணவரைத் தேடும் பெண்
காணாமல் போன கணவரைத் தேடும் பெண்
Amnesty

இத்தகைய முகாம்களை re-education camp என்று சீனா சொல்கிறது. சீனா இப்படிச் சொன்னாலும், உண்மையில் இது வதைக்கூடம் என்கிறார் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட கைரத் சமார்கன். கடந்த 2017-ம் ஆண்டு, கஜகஸ்தான் சென்று வந்த கைரத்தை சீன அரசு பிடித்து முகாமில் அடைத்தது. ''முகாமில் இருக்கும்போது, சீன கம்யூனிச அரசின் வரலாற்றுக் கொள்கைகளைப் படிக்க வேண்டும். நாங்கள் தங்கியிருந்த முகாமில் 6,000 பேர் வரை இருந்தோம். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வகுப்பு முடிவடையும்போதும், சீன அதிபரை வாழ்த்தி 'லாங் லைவ் ஜின்பிங்' என்று கோஷமிட வேண்டும். முகாமில் இருந்தபோது தற்கொலைக்குக்கூட நான் முயன்றேன்'' என்கிறார் கைரத் சமார்கன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீன அதிபராக இரண்டாவது முறையாக ஸீ ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முஸ்லிம்கள் மீது கம்யூனிச அரசின் பிடி இன்னும் இறுகியது. அதாவது, முஸ்லிம் மக்களாகத் தங்களை நினைப்பவர்கள் இனிமேல் சீனர்கள் என்ற ஒரே அடையாளத்துடன்தான் அந்த நாட்டில் வாழ வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் இருந்து எல்லா விஷயங்களிலும் தங்களை சீனர்களாகவே அவர்கள் உணர வேண்டும்.

ஜிங்ஜியாங் மாகாணம்
ஜிங்ஜியாங் மாகாணம்
Amnesty

முஸ்லிம் மக்கள் மாறுவதற்காக, 5 ஆண்டுகள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஜின்பிங்கின் தூதுவர்கள் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைச் சந்தித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு வருகின்றனர். உய்குர் இன மக்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை இழந்து விட்டு, தேசிய நீரோடையில் இணைந்துவிட வேண்டுமென்பதே சீன அரசின் எண்ணம். இதற்கிடையே, ஐ.நா மனித உரிமை கவுன்சில் கடந்த செவ்வாய்க்கிழமை சீனா மீது ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை சுமத்தியது. அதாவது, முகாம்களில் அடைபடுபவர்களின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், தோல் போன்றவற்றை சீன அரசு எடுப்பதாகக் குற்றம் சுமத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சீனா, 'மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்தது உண்மைதான். ஆனால், 2015-ம் ஆண்டு அதையும் நிறுத்திவிட்டோம். ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என்று பதிலளித்துள்ளது.

''தன் நட்பு நாடான சீனாவில் முஸ்லிம்கள் நிலை இப்படியிருக்க, வெறுமனே காஷ்மீர் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்படுகிறார். சீனாவில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றி ஏன் பேசுவதில்லை. முஸ்லிம் மக்கள் பிரச்னைகளில் பாகிஸ்தான் இரட்டை வேடம் பூண்டுள்ளது'' என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசின் துணைச் செயலர் அலீஸ் வெல்லிஸ், 'பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் மக்கள் பற்றிப் பேசும்போது, தன்னை அவர்களின் அம்பாசிடர்போல நினைத்துக் கொள்கிறார். சீன முஸ்லிம்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. எல்லா முஸ்லிம் மக்களையும் ஒன்று போலவே கருத வேண்டும்'' என இம்ரான்கானை குத்திக்காட்டியுள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

கடந்த திங்கள்கிழமை திங் - தேங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இம்ரான்கானிடம், சீனாவில் வசிக்கும் உய்குர் மக்கள் நிலை குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. சீனா பற்றி மறந்தும் வாய்திறந்து விடாத இம்ரான் கான், சீனாவுடன் மேம்பட்ட உறவு நிலையைப் பேணுவதாகவும் உய்குர் மக்கள் பற்றி பொது இடத்தில் பேச மாட்டோம். சீனாவிடம் தனியாகக் கேட்டறிவோம்' என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகப் பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு