Published:Updated:

காலநிலை மாற்றத்தால் தலைநகரை மாற்றும் இந்தோனேசியா... நடந்தது என்ன?

Harbour, Jakarta
Harbour, Jakarta ( Pixabay )

வெற்று நிலத்திலேதான் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று கூறிய இந்தோனேசிய அரசின் கூற்றுக்கும் அவர்களது செயல்பாட்டுக்கும் முரண்பாடு உள்ளது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளையும் பேரழிவுகளையும் அதிகமாகச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. காலநிலை மாற்றச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க, தன் தலைநகரத்தையே ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்ற வேண்டிய நிலைக்கு அது ஆளானது. அதற்கான அறிவிப்பை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். புதிய தலைநகரமாக போர்னியோவை உருவாக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 33.5 பில்லியன் செலவில் உருவாகப்போகும் புதிய தலைநகரத்துக்கான திட்டத்தால் பெரிதும் பயனடையப்போவது, அந்த நகரத்துக்கான நிலத்தைத் தங்கள் கைவசம் வைத்துள்ள தொழிலுலக ஜாம்பவான்களே என்று அந்நாட்டின் அரசு சார்பற்ற அமைப்பின் (NGO) கூட்டணி கருதுகிறது.

ஜகார்த்தா
ஜகார்த்தா
Pixabay

நிலக்கரிச் சுரங்கமாக, ரப்பர் தோட்டங்களாக இருந்த 162 இடங்களை உள்ளடக்கிய பகுதியில்தான் இந்த நகரம் அமைய உள்ளது. வெற்று நிலத்திலேதான் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று கூறிய இந்தோனேசிய அரசின் கூற்றுக்கு இது முரணாக உள்ளதாகவும் இந்நகர உருவாக்கத்தால் பயன்பெறப்போவது பெரிய பணக்காரர்கள்தானே தவிர பொதுமக்கள் அல்ல என்ற கருத்தும் அங்கு நிலவுகிறது.

கிழக்கு காளிமேன்டான் (east Kalimantan) பகுதி ரப்பர், பனை எண்ணெய் தொழிலதிபரான சுகான்டோ டனோடோவுக்குச் (sukanto tanoto) சொந்தமாக உள்ளது. இந்தோனேசியாவின் இரண்டாவது ரப்பர் மற்றும் பேப்பர் கம்பெனியான APRIL-ம் சுகான்டோவுக்குச் சொந்தமானதுதான். இதன் கிளை நிறுவனமான ITCIHM, தற்போது புதிய தலைநகரம் உருவாகவுள்ள இடத்தில் 5,644 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரப்பர் மரங்களைப் பராமரித்து வருகிறது. தற்போது பாதுகாப்பு அமைச்சரும் இரண்டு முறை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டவருமான ஹாஷிமிடமிருந்து இந்த நிறுவனத்தை 2006-ல் கைப்பற்றியுள்ளார் சுகான்டோ. புதிய தலைநகரில் குடியிருப்புப் பகுதி அமையப்போகும் இடத்தில் ஹாஷிமினுடைய பி.டி இன்டர்நேஷனல் நிறுவனம் இயங்கி வருகிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நிலப்பரப்பைவிட அதிகமான நிலப்பகுதியை உள்ளடக்கியது.

புதிய நகரம் உருவாவதில் வியாபாரம் பெரும் பங்கு வகிப்பதைத் தவிர்க்க முடியாது.
ஜோகோ விடோடோ, இந்தோனேசிய அதிபர்

புதிய தலைநகரில் இன்னும் பெயரிடப்படாத இதர பகுதிகளில் முன்னாள் சபாநாயகரும் ஊழலுக்காக தண்டனை பெற்றவருமான சேட்யா நொவான்டொவின் (setya Novanto) மகன் ரீஸா ஹெர்வின்டோவின் (Rheza Herwindo ) மூன்று கம்பெனிகள் செயல்படுகின்றன.

அதிபர் ஜோகோ விடோடோவின் நம்பிக்கைக்குரியவரும் முதலீட்டுத் துறை அமைச்சருமான லூகூட் பான்ஜெய்தான் (Luhut pandjaitan), உஸ் ரிஸ் இள மஹேந்திரா உரிமையாளரும் மற்றும் பெரும் பனை எண்ணெய் வியாபாரியுமான லிம்ஹரியாண்டோவும் நிலக்கரிச் சுரங்கச் சலுகையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

நிலத்தை விட்டுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, 20 வருடத்துக்குக் காலாவதி ஆகாத ஒப்பந்தச் சலுகைகளால் அரசாங்கத்தின் நிலை தாழ்ந்தும், பெரும் பணக்காரர்களின் கை ஓங்கியும் இருக்கும் என்று செயற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். புதிய நகரம் உருவாவது இந்த 162 சலுகைதாரர்களுக்காகவா, இவர்கள் நிலத்தை சுய விருப்பத்தின் பேரில் தருவார்களா, நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு எந்த முறையில் வழங்கப்படும் என்று பல கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.

போர்னியோ, இந்தோனேசியா
போர்னியோ, இந்தோனேசியா
Pixabay
2019-ல் பரவலாக உச்சரிக்கப்பட்ட சொல் `காலநிலை அவசரம்' - தீர்வு தருமா 2020?

ICTIHM நிறுவனத்துக்கு மாற்று இடம் அளிக்கப்பட, போர்னியோ சுமத்திரா பகுதிகளில் பெருமளவு காடழிப்பு நடந்து வருகிறது. கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள பாப்புவா (Papua) என்ற இடத்துக்கு ரப்பர் மற்றும் மர வியாபாரிகள் இடம்மாறிக் கொண்டுள்ளனர். முதிர்ச்சியடையாத மரங்களுக்கும் கட்டடங்களுக்கும் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். ரப்பர் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், வனத்துறை அமைச்சகம் ரப்பர் தோட்ட நிறுவனங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்கிறது.

போர்னியோவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டு அளவையும் அரசு அறிவித்துவிட்டது. புதிய தலைநகருக்குத் தேவையான மின்சாரம் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து (fossil fuel) எடுக்கப்படாது என்று அதிபர் கூறினாலும் 39 சதவிகிதம் மட்டுமே புதுப்பிக்கக்கூடிய வகை மின்சாரம் (Renewable sources) மூலம் எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ஜகார்த்தாவிலிருந்து 2024-ல் போர்னியோவுக்கு மாறவுள்ள புதிய தலைநகரத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப்போவது அபரிமிதமாகக் கிடைக்கும் நிலக்கரிதான் என்பது தெரியவருகிறது. நிலக்கரி உபயோகம்தான் அதிகமாக இருக்கும் என்பதால் பசுமை நகரம், ஸ்மார்ட் சிட்டி என்பது கனவாகத்தான் இருக்கும். மூடப்படாத நிலக்கரிச் சுரங்கங்ளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மிதக்கும் சந்தை, போர்னியோ, இந்தோனேசியா
மிதக்கும் சந்தை, போர்னியோ, இந்தோனேசியா
Pixabay
காலநிலை மாற்றமும் காலாவதியாகும் கொள்கைகளும்!

இந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேசிய அதிபர், புதிய நகரம் உருவாவதில் வியாபாரம் பெரும் பங்கு வகிப்பதைத் தவிர்க்க முடியாது என்றும் அரசாங்கத்தால் 33.5 பில்லியன் செலவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். உண்மைதான். புதிய நகரம் உருவாவதில், வியாபாரம் பெரும் பங்கு வகிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த வியாபாரம் அங்கு வாழப்போகும் மக்களின் வாழ்வைச் செழிக்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்வைச் சுரண்டிக் கொழுக்கும் பெருமுதலாளிகளுக்கு லாபத்தைக் கொட்டிக்கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் எடுத்து இந்தோனேசிய அரசு தன் திட்டமிடுதலைச் செய்ய வேண்டுமென்பதே அந்நாட்டுச் சூழலியலாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு