Published:Updated:

`சீனாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறோம்!’ - கொரோனா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதித்த சீனாவில் படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி, 300 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை சீனாவிலிருந்து அப்புறப்படுத்திவருகின்றன. சில நாடுகள் சீனாவுக்குச் சென்று வந்த வெளிநாட்டவர்களைக்கூட தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளன. ரஷ்யா, மங்கோலியா போன்ற நாடுகள், சீனாவுடனான தங்கள் எல்லையை மூடி விட்டன. சீனாவுக்கு விமானப் போக்குவரத்தை பல நாடுகளும் ரத்துசெய்துள்ளன.

வுஹானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்
வுஹானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்

வைரஸ் பெரிதாகப் பாதித்த வுஹான் நகரிலிருந்த இந்தியர்கள் 700 பேர், இந்தியாவுக்கு இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மட்டும் பாகிஸ்தானியர்களை மீட்க தனி விமானம் அனுப்பவில்லை. சீனாவுடன் நெருங்கிய உறவு கொண்டாடும் பாகிஸ்தான், சீனாவிலிருந்து தங்கள் மக்களை அப்புறப்படுத்தினால், அந்த நாட்டை அவமதித்தது போலாகிவிடும் என்ற எண்ணம் கொண்டுள்ளது. இதனால், இந்தியா போல பாகிஸ்தானியர்களை மீட்க தனி விமானம் அனுப்பவில்லை.

கடலைவிட ஆழம் என்கிற ரீதியில் பாகிஸ்தான்-சீனா நட்பு உள்ளதாம். பாகிஸ்தான் பத்திரிகையான டானுக்கு பிரதமர் இம்ரான்கான் அலுவலக உயரதிகாரி அளித்துள்ள பேட்டியில், ''இத்தகையை இக்கட்டான சூழலில் நண்பர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். நமக்கு நெருக்கமானவர்கள் அங்கே வசிக்கலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனாலும், அவர்களை சீனாவிலிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இல்லை. இந்தத் தருணத்தில், சீனாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறோம். எங்கள் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது பொறுப்பற்ற செயலாகும்'' என்று கூறியுள்ளார்.

அதேவேளை , பாகிஸ்தான் நாடு சீனாவுடன் கொண்டுள்ள நட்புக்காகத் தங்கள் மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. வுஹான் உள்ளிட்ட பல நகரங்களில், ஏராளமான பாகிஸ்தான் மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு