Published:Updated:

`5 ஸ்டார்' கட்சியின் ஆதரவு வாபஸ்; பெரும்பான்மையிருந்தும் ராஜினாமா செய்யும் இத்தாலி பிரதமர்... ஏன்?!

இத்தாலி: அதிபர் செர்ஜியோ - பிரதமர் மரியோ

இத்தாலி: ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதாரவு கிடைத்தும் இத்தாலி பிரதமர் மரியோ ராஜினாமா செய்ய முடிவெடுத்தது ஏன்?!

`5 ஸ்டார்' கட்சியின் ஆதரவு வாபஸ்; பெரும்பான்மையிருந்தும் ராஜினாமா செய்யும் இத்தாலி பிரதமர்... ஏன்?!

இத்தாலி: ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதாரவு கிடைத்தும் இத்தாலி பிரதமர் மரியோ ராஜினாமா செய்ய முடிவெடுத்தது ஏன்?!

Published:Updated:
இத்தாலி: அதிபர் செர்ஜியோ - பிரதமர் மரியோ

கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர், பல்வேறு உலக நாடுகளில் பிரதானமாகக் காணப்படுவது பொருளாதாரப் பிரச்னைகள்தாம். இந்தப் பிரச்னைகள் பல நாடுகளிலுள்ள ஆட்சியாளர்களுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கின்றன. அந்த வகையில், தற்போது அப்படியான ஒரு சிக்கலைத்தான் எதிர்கொண்டுவருகிறார் இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி. அவரின் பொருளாதாரக் கொள்கையை விரும்பாத கூட்டணிக் கட்சி, மரியோ அரசுக்கான ஆதரவைத் திரும்பப்பெற்றிருக்கிறது. இதையொட்டி, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மரியோ வெற்றிபெற்றிருந்தும், தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார்.

இந்த முடிவுக்குக் காரணம் என்ன..?!

2018-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று இத்தாலியின் பிரதமரானார் ஜிசப்பே கான்டே. 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றை, கான்டே சரிவரக் கையாளவில்லை என்று கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. சில அமைச்சர்கள் பதவியும் விலகினர். இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட, தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கான்டே. இதையடுத்து இத்தாலியின் அதிபர் செர்ஜியோ மெட்டரல்லா, நாட்டில் நிலவும் கொரோனா பிரச்னையையும், பொருளாதார நெருக்கடிகளையும் சாமாளிக்க பொதுவான ஒரு நபரை பிரதமராக நியமிக்க நினைத்தார். அதன்படி, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் செயல்பட்ட மரியோ டிராகியை பிரதமராக நியமித்தார்.

இத்தாலி பிரதமர் மரியோ
இத்தாலி பிரதமர் மரியோ
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடாளுமன்றத்தில் மரியோவுக்கு 262 பேர் ஆதரவு தெரிவிக்க, பிரதமரானார் அவர். முன்னாள் பிரதமர் கான்டேவின் ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சி உட்பட சில கட்சிகளின் ஆதரவோடு அரியணை ஏறினார் மரியோ. இந்தக் கூட்டணிக்கு `தேசிய ஒற்றுமை கூட்டணி' என்று பெயரிடப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றார் மரியோ. இந்த நிலையில், மரியோ அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சியின் தலைவர் ஜிசப்பே கான்டே. `அரசின் சமீபத்திய பொருளாதாரக் கொள்கைகளும், உக்ரைன் போரில் ராணுவத்தின் செயல்பாடுகளும் சரியானதாக இல்லை' என்பதுதான் கான்டேவின் குற்றச்சாட்டு. மேலும், மரியோ அரசுக்கான தன்னுடைய ஆதரவையும் திரும்பப்பெற்றார் கான்டே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் மரியோ அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 172 உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றிபெற்றார் மரியோ. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சி. இதனால் மனமுடைந்த மரியோ, ``கூட்டணியில் முக்கிய பங்காற்றிய ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சியில்லாமல் இந்த அரசை வழிநடத்தத் தயாராக இல்லை. நம்பிக்கை அடிப்படையில் உருவான தேசிய ஒற்றுமை கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை தற்போது தகர்ந்துவிட்டது. அதனால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறேன்'' என்று அறிவித்தார். அதன்படி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் அதிபரிடம் ஒப்படைத்தார்.

 ஜிசப்பே கான்டே
ஜிசப்பே கான்டே
ட்விட்டர்

ஆனால், அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த அதிபர் செர்ஜியோ, ``நாடாளுமன்றத்தில் நீங்கள் இது தொடர்பாகப் பேச வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, அடுத்த வாரம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மரியோ பேசுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 2023-ம் ஆண்டு தொடக்கத்தில், இத்தாலியின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒருவேளை மரியோ தலைமையிலான அரசு கவிழ்ந்தால், அதற்கு முன்னதாக இந்த ஆண்டிலேயே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.