Published:Updated:

வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்தது முதல் பெனாசிர் கொலை வரை... முஷாரப்புக்கு ஏன் இந்த நிலை?

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் ராணுவத்துக்கு முஷாரப் தவறாக வழி காட்டியுள்ளார் என்கிற எண்ணம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப்புக்கு எழுந்தது. இந்த விவகாரத்தில், முஷாரப்பை நேரடியாகவே நவாஸ் ஷெரிஃப் கண்டித்தாகவும் சொல்வார்கள்.

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிஃப் இருந்தார். இந்தியாவில் வாஜ்பாய் பிரதமர். இரு தலைவர்களுக்குமே இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர நேர்மையான உறவு தேவை என்றே உணர்ந்திருந்தனர். பொதுவாகவே, வாஜ்பாய் அமைதியை விரும்பும் தலைவர் என்பதால், பாகிஸ்தானுடன் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தார். விளைவாக... டெல்லியிலிருந்து லாகூருக்கு `தோஸ்தி' பஸ் விடப்பட்டது. பஸ் விட்டதோடு, மட்டுமல்லாமல் அதே பேருந்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பயணித்தார். உண்மையில், இந்தியா பாகிஸ்தானுக்கிடையே புதிய உறவுக்கு வித்திட்டது போலவே இந்த நிகழ்வு கருதப்பட்டது. லாகூரில் உள்ள பாரம்பர்யமிக்க மினார் இ பாகிஸ்தானில் வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பிரமாண்ட வரவேற்பளித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் முக்கியப் புள்ளி ஒருவர் கலந்துகொள்ளவில்லை. அவர்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். பாகிஸ்தான் நாட்டின் அப்போதையை ராணுவத் தளபதி.

லாகூருக்கு பேருந்தில் சென்ற வாஜ்பாய்
லாகூருக்கு பேருந்தில் சென்ற வாஜ்பாய்

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளிநாட்டுப் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில், ராணுவத் தளபதி கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எழுந்த கேள்விகளுக்கு முஷாரப் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. சில நாள்கள் கழித்தே வாய் திறந்தார். அப்போது, `மினார் இ பாகிஸ்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இந்தியப் பிரதமருக்கு நான் வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும், அதனால் பங்கேற்கவில்லை' என்று சொன்னார். இந்தியா மீது அத்தனை வன்மத்தில் இருந்த முஷாரப் சத்தமில்லாமல் இன்னோரு காரியத்தையும் செய்துகொண்டிருந்தார். அதுதான், கார்கில் ஊடுருவல்! இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு நல்லெண்ண பயணம் மேற்கொண்ட பிறகு, மூன்றாவது மாதத்திலேயே கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படை வீரர்கள் ஊடுருவியிருப்பதை இந்திய வீரர்கள் கண்டனர். முஷாரப்பின் உண்மை முகத்தை இந்தியா ஓரளவுக்குப் புரிந்துகொண்டது. பின்னர், இந்திய ராணுவம் பாகிஸ்தான் வீரர்களை துரத்தியடித்தது வேறு கதை. கார்கில் போரைப் பொறுத்தவரை முஷராப் அற்புதமாகத் திட்டமிட்டார். ஆனால், பாகிஸ்தான் மூக்குடைபட்டு ஓடியது!

அப்போது, பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தை முஷாரப் தவறாக வழி நடத்தியுள்ளார் என்கிற எண்ணம் எழுந்தது. இந்த விவகாரத்தில், முஷாரப்பை நேரடியாகவே நவாஸ் ஷெரிஃப் கண்டித்தாகவும் சொல்வார்கள். ஒருமுறை, முஷாரப் இலங்கை சென்றிருந்தபோது, அவரை பதவியிலிருந்து நீக்க நவாஸ் ஷெரிஃப் திட்டமிட்டார். இலங்கையிலிருந்து திரும்பும்போது, விமான நிலையத்தில் அவரைக் கைது செய்யவும் நவாஸ் ஷெரிஃப் முடிவு செய்தார். ஆனால், நடந்ததோ வேறு... பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டு முஷாரப்பின் ஆதரவாளர்கள் கராச்சி விமான நிலையத்தைக் கைப்பற்றினர். இலங்கையிலிருந்து முஷாரப் வந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. நவாஸ் ஷெரிஃப்பின் பிரதமர் பதவி பறிக்கப்பட, முஷாரப் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியராக தன்னை அறிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் முஷாரப் மீது பற்று கொண்டவர்கள் அதிகம். அதனால்தான் முஷாரப்புக்கு தேசத்துரோக வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்டதும் அந்த நாட்டு ராணுவம் கொந்தளிக்கிறது... குமுறுகிறது.

மனைவியுடன் முஷாரப்
மனைவியுடன் முஷாரப்

ராணுவ ஆட்சியாளராக இருந்த முஷாரப், இந்தியாவுடன் கைகோத்து செயல்பட பல விஷயங்களில் முயன்றாலும், நயத்துடன் விட்டுக்கொடுத்துப் போவதை விரும்பமாட்டார். விட்டுக் கொடுத்துதான் சில விஷயங்களைப் பெற வேண்டும் என்பதை அவர் கடைசி வரை, உணர்ந்துகொள்ளவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆக்ரா மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் முஷாரப். டெல்லி விமான நிலையத்தில் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளருக்கு `ஹீரோ வெல்கம்' கொடுக்கப்பட்டது. டெல்லி, ஆக்ராவில் விதவிதமான உடைகளில் மிடுக்குடன் வலம் வந்து பல நிகழ்ச்சிகளில் முஷாரப் பங்கேற்றார். `இந்த வயசுலயும் என்ன பிட்னெஸ் பாரு' என இந்திய இளைஞர்களே முஷாரப்பைப் பார்த்து பொறாமைப்பட்டனர். டெல்லி சாணக்கியாபூரியில் தான் பிறந்த வீட்டுக்குச் சென்ற முஷாரப் பழைய நினைவுகளில் மூழ்கினார். ஆக்ராவில் தாஜ்மகால் முன் அமர்ந்து முஷாரப் தம்பதி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எந்தப் பிரதமருக்கு சல்யூட் அடிக்க மறுத்தாரோ... அதே பிரதமருக்கு சரிசமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பையும் முஷாரப் பெற்றார்.

ஆனால், பிரதமர் வாஜ்பாய்க்கு எப்போதுமே ராணுவ ஆட்சியளரான முஷாரப் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. முஷாரப்புக்குக் காஷ்மீர் பிரச்னை மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. காஷ்மீர் பற்றி மட்டுமே பேச விரும்பினார். இந்தியாவோ... எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வது, இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது. ஆனால், அரசியல் பக்குவம் இல்லாத முஷாரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது வாஜ்பாய்க்கு சவாலாகவே இருந்தது. இறுதியில். ஆக்ரா மாநாடு தோல்வியில் முடிந்தது.

முஷாரப்புடன் வாஜ்பாய்
முஷாரப்புடன் வாஜ்பாய்
`அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப்

இந்த மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தில் கூட இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிடவில்லை. பின்னர், இஸ்லாமாபாத் திரும்பிய முஷாரப், உடனடியாக பிரஸ்மீட் ஒன்றை நடத்தி இந்தியா மீது குற்றம் சாட்டினார். இந்தக் காலகட்டத்தில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. ஆத்திரமடைந்த அமெரிக்கா தலிபான்கள் மீது பாய்ந்தது. ஏற்கெனவே, பாகிஸ்தான் ஆதரவு பெற்றிருந்த தலிபான்களால் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக்கப்பட்டிருந்தது. தலிபான்களுக்கு எல்லாமாக இருந்த பாகிஸ்தான் சட்டென்று யூடர்ன் அடித்து அமெரிக்காவுடன் கை கோத்தது. முஷாரப் தீவிரமாக தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடினார். இப்படியாக பல கூத்துகள் முஷாரப் ஆட்சி காலத்தில் நடந்தன.

ராணுவ ஆட்சியாளராக மட்டுமே இருந்த முஷாரப் சில பல சித்து வேலைகள் செய்து, பாகிஸ்தான் அதிபராக தொடர்ந்து நீடிக்க ஆசைப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூட சிறையில் அடைக்கப்பட்டார். 43 நாள்கள் பாகிஸ்தானில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது. மீண்டும் அதிபராகப் பதவியேற்ற முஷாரப் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக 2008-ம் ஆண்டு பதவி விலகினார்.

துபாய் மருத்துவமனையில் முஷாரப்
துபாய் மருத்துவமனையில் முஷாரப்
``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

கடந்த 2013-ம் ஆண்டு நவாஸ் ஷெரிஃப் மீண்டும் ஆட்சிக்கு வர, முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில்தான் பெஷாவார் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்துள்ளது. இன்னோரு முக்கியமான குற்றச்சாட்டும் முஷாரப் மீது உண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்தில் முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாக ராவல்பிண்டி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், துபாய்க்குத் தப்பிவிட்டதால், முஷாரப்பை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிற்கவோ, நடக்கவோ முடியாத ஒருவித விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு துபாய் மருத்துவமனையில் முஷாரப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு