Published:Updated:

`சிறந்த தேசபக்தர்' - பிரதமர் மோடியைப் புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின்... பின்னணி என்ன?

புதின் - மோடி

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய புதின், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசியது உலக அரங்கில் கவனம்பெற்றிருக்கிறது.

`சிறந்த தேசபக்தர்' - பிரதமர் மோடியைப் புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின்... பின்னணி என்ன?

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய புதின், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசியது உலக அரங்கில் கவனம்பெற்றிருக்கிறது.

Published:Updated:
புதின் - மோடி

`இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிறந்த தேசபக்தர்' என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய புதின், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசியது உலக அரங்கில் கவனம்பெற்றிருக்கிறது.

தலைநகர் மாஸ்கோவில், `வால்டாய் டிஸ்கஷன் கிளப்' அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டார் ரஷ்ய அதிபர் புதின். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ``பிரிட்டன் அரசின் காலனி நாடாக இருந்த இந்தியா, தற்போது மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 150 கோடி மக்கள் ஒன்றிணைந்து இந்த வளர்ச்சியை நிஜமாக்கியிருக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவரது `மேக் இன் இந்தியா' திட்டம் பொருளாதாரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மோடி தலைமையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களைச் சந்தித்திருக்கிறது. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது. மேலும், உலகளாவிய கொள்கைகளில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காகச் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே கடினமான சூழல் ஒருபோதும் வந்ததில்லை. வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என உறுதியாக நம்புகிறேன். இந்திய விவசாயத்துக்குத் தேவையான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, நாங்கள் உர உற்பத்தி அளவை 7.6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். அதனால், விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது'' என்று பேசியிருக்கிறார் புதின்.

மோடி - புதின்
மோடி - புதின்

முன்னதாக, செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதினும் மோடியும் நேரடியாகப் பேசிக்கொண்டனர். அப்போது மோடி, ``இது போருக்கான காலம் அல்ல. தொலைபேசி வாயிலாக நான் உங்களிடம் பலமுறை இதைச் சொல்லியிருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை மட்டுமே உலகை ஒன்றாக வைத்திருக்கும்'' என்று ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த புதின், ``உக்ரைனுடனான மோதல் குறித்த உங்கள் கவலைகளை நன்கு அறிவேன். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்'' என்றார். இந்த நிலையில் புதின், தற்போது மோடியையும் இந்தியாவையும் ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

புதின்
புதின்

புதினின் புகழ்ச்சிக்குப் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் குறித்து சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றனர். ``ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை இந்தியா எந்த நிலைப்பாடையும் எடுக்கவில்லை. `போர் அவசியமற்றது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதே சிறந்தது' எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது இந்தியா. ரஷ்யாவுடனான இந்த நல்லுறவால், அமெரிக்காவை இந்தியா பகைத்துக்கொள்ளும் நிலை உருவாகலாம். இருந்தும், இந்தியா தங்களுடன் நல்லிணக்கத்தைப் பேணுவதால், ரஷ்ய அதிபர் இந்தியாவையும் மோடியையும் புகழ்ந்திருக்கலாம். மேலும் ரஷ்யாவுக்கு, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் ஆதரவு இந்தச் சமயத்தில் தேவைப்படுகிறது. இந்தப் போர் காரணமாக, வர்த்தகரீதியாகப் பல நாடுகள் ரஷ்யாவைப் புறக்கணித்திருந்தாலும், இந்தியா புறக்கணிக்கவில்லை. மேலும், நவம்பர் 8-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குச் செல்கிறார். அதையொட்டி, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் புதின் இவ்வாறு புகழ்ந்து பேசியிருக்கலாம்'' என்கின்றனர்.