Published:Updated:

இலங்கை அதிபர் தேர்தல்: இந்தியாவைப் பொருட்படுத்தாத கட்சிகள்... என்ன காரணம்?

சஜித் - ரணில் - ராஜபக்‌ஷே - கோத்தபய
சஜித் - ரணில் - ராஜபக்‌ஷே - கோத்தபய

இதுவரை நடந்துள்ள இலங்கை அதிபர் தேர்தல்கள் அனைத்திலும் இந்தியாவின் மறைமுகப் பங்களிப்பும் நேரடிக் கவனிப்பும் மிக அதிகமாகவே இருந்துள்ளன. முதல்முறையாக இந்தத் தேர்தலில்தான் இந்தியாவும் ஒதுங்கி நிற்கிறது. இலங்கையும் இந்தியாவை துளியும் மதிக்காமல் இருக்கிறது.

இன்று நடைபெறுகிறது, இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல். இலங்கை அரசியல் வரலாற்றிலேயே, அதிபராக, பிரதமராக, எதிர்கட்சித் தலைவராக இல்லாதவர்கள் அதிபருக்குப் போட்டியிடும் முதல் தேர்தல் இது. 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் மகிந்த ராஜபக்‌ஷேவின் இலங்கைப் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கும்தான் (Gotabhaya Rajapaksa) நேரடிப் போட்டி. இவர்களின் வெற்றியைக் கடினமாக்கும் விதத்தில் தனித்துக் களமிறங்குகிறது, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி).

ராஜபக்‌ஷே
ராஜபக்‌ஷே
இலங்கை அதிபர் தேர்தல்... அந்தரத்தில் தமிழர்கள்!

மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஓர் அணி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் மற்றொரு அணி என இலங்கை சுதந்திராக் கட்சி, தற்போது இரண்டு பிரிவாகச் செயல்பட்டுவருகிறது. 2015 தேர்தலுக்குப் பிறகு, சுதந்திராக் கட்சியில் இருந்து விலகி, இலங்கைப் பொதுஜன முன்னணி என்கிற தனிக்கட்சியைத் தொடங்கியிருந்தார், மகிந்த ராஜபக்‌ஷே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷேவை வீழ்த்துவதற்காக, ரணிலுடன் கூட்டு சேர்ந்த மைத்திரிபால சிறிசேனா, இந்த முறை ரணில் கட்சி வேட்பாளரை வீழ்த்த, ராஜபக்‌ஷேவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். அதேபோல 2004-ம் ஆண்டு, ரணிலை நீக்கி மகிந்த ராஜபக்‌சேவை பிரதமராக்கிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா, தற்போது கோத்தபய ராஜபக்‌சேவை வீழ்த்த ரணிலுக்கு முழு ஆதரவு அளித்திருக்கிறார். ஒருகாலத்தில் இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்துவந்த இலங்கை சுதந்திரா கட்சி, இப்போது பல துண்டுகளாகி மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. சுதந்திராக் கட்சியின் இடத்தை ராஜபக்‌ஷேவின் பொதுஜன முன்னணி பிடித்திருக்கிறது.

அயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்?
தேர்தல் எப்போது?
நவம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 18 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த முறை வழக்கம்போல, ராஜபக்‌ஷே கட்சியின் எதிர்வேட்பாளரான சஜித் பிரேமதேசாவை ஆதரித்திருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையில் யார் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன?

எழுத்தாளர் வாசு முருகவேலிடம் பேசினோம்.

''இப்போது உள்ள சூழலில், கோத்தபய ராஜபக்‌ஷே ஜனாதிபதியாக வருவார் என்றுதான் கருதவேண்டியுள்ளது. காரணம் மிக எளிதானது. பெரும்பான்மை சிங்களவர்களின் பௌத்த சிங்கள இனவெறி சார்ந்து, கோத்தபயவே அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார். அது, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை என்றாலும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக இருந்தாலும், வெள்ளை வேன் கடத்தல்கள் என்றாலும் அவருடைய செயற்பாடுகள் சிங்களவர்களைத் திருப்தி செய்யக்கூடியதாகவே இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இப்போது ஒரு கேள்வி எழலாம். கடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே எப்படித் தோற்றார்? கடந்த தேர்தலைப் பொறுத்தவரை ராஜபக்‌ஷேவின் கட்சியைச் சார்ந்தவரும் அவருடன் நீண்ட காலம் பயணித்தவருமான சிறிசேனாவைப் பொது வேட்பாளராக நிறுத்தியதே ராஜபக்‌ஷே தோல்விக்கு முக்கியக் காரணம். அப்போதும் சிங்களவர்களின் பெரும்பான்மை வாக்கை ராஜபக்‌ஷே பெற்றார் என்பது உண்மை. இந்த முறை அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதுபோல ஜே.வி.பி வேட்பாளராக அனுர நிற்பதுகூட சஜித் பிரேமதாச பெறும் வாக்குகளை உடைக்கவே பயன்படப்போகிறது. அனைத்தையும் கவனிக்கும்போது கோத்தபயவின் தேர்தல் வெற்றி உறுதியாகத் தெரிகிறது'' என்றார்.

"புதிதாகப் பதவியில் அமரக்கூடியவர், ஜனநாயகத்தைக் காப்பவராகவும் சர்வாதிகாரத்தை மறுப்பவராகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு வாக்காளர்கள் தெளிவான ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கிறது. தவறான ஒரு முடிவு பேரழிவான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். பிரதான போட்டியாளர்களான சஜித் மற்றும் கோத்தபய ஆகியோரின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது."
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

அவரிடம், ‘‘இருவரில் யாரின் வெற்றி தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?’’ என்று கேட்டோம்.

''இலங்கை ஜனாதிபதித் தேர்தல் என்பதே ஒரு சிங்களவரை இலங்கையின் தலைவராக்கும் ஒரு சம்பிரதாயச் சடங்குதான். இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளிலிருந்து ஒரு தலைவர் ஜனாதிபதி பதவிக்கு வருவார். இதில், தமிழர்களின் வாக்குகளால் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது. வரப்போகும் சிங்கள ஜனாதிபதிகளும் தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை. வேண்டுமானால் யார் குறைந்த அளவு தீங்கிழைத்தார்கள் என்று விவாதிக்கலாம்'' என்றார்.

வாசு முருகவேல்
வாசு முருகவேல்

இலங்கை முழுவதும் சீனமயப்பட்டுவரும் இந்தச் சூழலில், மீண்டும் ராஜபக்‌ஷேவின் கட்சி ஆட்சிக்கு வந்தால், முழுமையாக இலங்கை சீனாவின் கட்டுக்குள் வந்துவிடும். இந்தியாவின் ஆதரவு சஜித்துக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் வெல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. எனில், இலங்கையில் இந்தியாவின் கை தாழ்ந்துபோவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் இதுகுறித்துப் பேசும்போது,

''ராஜபக்‌ஷே ஈழப் போரின்போது இந்தியாவின் பெரும் ஆதரவைப் பெற்றார். அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இந்தியா வழங்கிய ஆதரவால்தான் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒடுக்கவும் ஈழத்தமிழர்களை அழிக்கவும் முடிந்தது. போர் முடிந்ததும் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்தது. இலங்கைத் தலைநகர் கொழும்பில், சீனா பெரும் துறைமுக நகரத்தை அமைத்துவருகிறது. கொழும்பில் சிங்களத்துடன் சீனமொழி, வீதிகளிலும் பெயர்ப் பலகைகளிலும் காணப்படுகின்றன. சீனா ஒரு பௌத்தநாடு என்ற வகையிலும் ராஜபக்‌ஷே தரப்பினர் அந்நாட்டுடன் நெருக்கமாகினர்.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

ராஜபக்‌ஷே தரப்பு தேர்தலில் வென்றால், சீனாவின் ஆதிக்கம் மீண்டும் அதிகரிக்கும். சீனா, இலங்கையில் நிலைகொள்ள விரும்புவது இந்தியாவைக் கண்காணிக்கவும் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தத்தான் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். தமிழீழம் அமைந்திருந்தால், அது இந்தியாவுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும். ஏனென்றால், விடுதலைப்புலிகள் இருந்த வரை சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருக்கவில்லை'' என்றார்.

மேலும், ''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் ராஜபக்‌ஷே தரப்பினர் வெல்லக்கூடாது என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக இருக்கிறது. இதனால், அவருக்கு எதிராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசா, நல்லவர் என்றோ தமிழர்களுக்குத் தீர்வினை முன்வைப்பார் என்றோ அர்த்தமல்ல. சிலவேளை அவரது அணுகுமுறைகள் மாறுபடக்கூடும். அதை எதிர்காலத்தை வைத்தே குறிப்பிடலாம்.

இந்தியாவும் ரா அமைப்பும் தற்போதைய தேர்தலில் தலையிடாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.
சுப்ரமணிய சாமி

ஆனால், ஈழப் போர் ஆறாக் காயங்களை விட்டுச்சென்றுள்ளது. கோத்தபய ராஜபக்‌ஷே வெற்றி பெறக்கூடாது என்பதுதான் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு. இதை வாக்களிப்புக்குப் பின்னர் அவதானிக்கலாம். ஈழப் போரில் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு இணையான பொறுப்பை வகித்தவர் கோத்தபய. பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் அவர் என்றும் சொல்லப்படுகிறது. ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்காலத்தில் 300 பேரைக் கடத்தி, சித்ரவதை செய்து கொன்று, முதலைகளுக்கு இரையாக்கியதாக வெள்ளை வேன் ஓட்டுநர் சமீபத்தில் கூறியிருந்தார். மீண்டும் அத்தகைய யுகம் திரும்பக்கூடாது என்பதே எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு'' என்றார்.

அகரமுதல்வன்
அகரமுதல்வன்

அதேவேளையில், ''இந்தத் தேர்தலில் இருவரில் யார் அதிபராக வந்தாலும் தமிழர்களுக்கு எப்படி எந்த நன்மையும் இல்லையோ அதேபோலத்தான் இந்தியாவுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஏனெனில், இருவருமே இந்திய ஆதரவாளர்கள் கிடையாது!'' என்கிறார், எழுத்தாளர் அகரமுதல்வன்.

மேலும், ''ஈழத் தமிழர்கள் தங்கள் பேரம்பேசும் சக்தியை இலங்கையில் இழந்தபின்பு, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் எந்த ஆதரவையும் இலங்கை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுக்கு இலங்கையில் எந்த முக்கியத்துவமும் தற்போது இல்லை. இந்தியாவைப் பொருட்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களும் தற்போது இல்லை. தவிர, இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் எப்போதும் இருந்ததில்லை. தமிழ்த் தலைவர்கள் மட்டுமே ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

தேசியக்கொடி
தேசியக்கொடி

இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே இனி இலங்கையில் தன் பிராந்திய நலன்களைக் காக்கமுடியும். இலங்கை தொடர்பான விஷயங்களில் இனி தலையிட முடியும். கொழும்பில், உயரமான தாமிரக் கோபுரத்தை சீனா எழுப்பியுள்ளது. இலங்கை இந்தியாவுக்கானது இல்லை எங்களுக்கானது என்பதை வலியுறுத்துவதே அந்தக் கோபுரம்.

ஆக மொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதே உண்மை'' என்றார் அவர்.

வித்தியாச வாக்குப்பதிவு; வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு!- பரபரப்பில் இலங்கை அதிபர் தேர்தல்

இதுவரை நடந்துள்ள இலங்கை அதிபர் தேர்தல்கள் அனைத்திலும் இந்தியாவின் மறைமுகப் பங்களிப்பும் நேரடிக் கவனிப்பும் மிக அதிகமாகவே இருந்துள்ளன. முதல்முறையாக இந்தத் தேர்தலில்தான் இந்தியாவும் ஒதுங்கி நிற்கிறது. இலங்கையும் இந்தியாவை துளியும் மதிக்காமல் இருக்கிறது.

இந்தியாவுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டே இலங்கை தள்ளிப்போவது இந்தியாவுக்கு பெரும் ஆபத்து!

அடுத்த கட்டுரைக்கு