Published:Updated:

ஏன் சாலை வழி பயணத்தைத் தேர்ந்தெடுக்கிறார் சீன அதிபர்? - சுவாரஸ்ய தகவல்

சீன அதிபர்
சீன அதிபர்

தமிழகம் வந்துள்ள சீன அதிபர், ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை காரில் பயணித்ததுக்குப் பின்னல் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வந்துள்ள செய்திதான் கடந்த இரு நாள்களாக மொத்த தமிழகத்தையும் கலக்கி வருகிறது. நேற்று, சென்னையைப் புரட்டிப்போட்ட ஒரு விஷயமும் அதுதான். சீன அதிபர் ஹெலிகாப்டரை தவிர்த்துவிட்டு கிண்டியிலிருந்து மாமல்லபுரம் வரையிலான 57 கிலோமீட்டர்களை சாலை மார்க்கமாகக் கடந்து சென்றுள்ளார். இதனால் சென்னை வாகன ஓட்டிகள் நேற்று கடும் சிரமத்தைச் சந்தித்தனர். சீன அதிபர் ஹெலிகாப்டரை தவிர்த்தது ஏன் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.

Modi - xi jinping
Modi - xi jinping
Twitter/ @MEAIndia

சீன கம்யூனிஸ்ட் கட்சி!

1922-ம் ஆண்டு மா சேதுங் (Mao Zedong) என்ற கம்யூனிச புரட்சியாளரால் உருவாக்கப்பட்டதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி. இவர் பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், சீனாவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக விளங்கியவர் மா சேதுங்.

Live Updates: டெல்லி திரும்பிய மோடி - வழியனுப்பி வைத்த முதல்வர், ஆளுநர்!

தற்போது சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். மா சேதுங்குக்குப் பிறகு, அந்நாட்டில் சக்திவாய்ந்த தலைவர் என்ற பெருமை பெற்றுள்ளார் ஜின்பிங். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது முதல், அவர்கள் தங்களுக்கென சில சிறப்புக் கொள்கைகளை வகுத்து அதைப் பின்பற்றி வருகின்றனர். அப்படி மா சேதுங் உருவாக்கிய கொள்கைகளில் ஒன்றுதான் இந்த சாலை வழிப் பயணம்.

Modi - xi jinping
Modi - xi jinping

ஜின்பிங் உட்பட இதற்கு முன்னதாக ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் காரிலேயேதான் பயணம் செய்வார்கள். அப்போதைய தலைவர்கள் ஜி20 போன்ற மாநாடுகளில் கலந்துகொண்டால் மட்டுமே ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்தனர். ஆனால், ஜின்பிங், ஜி20 போன்ற பெரிய மாநாடுகளுக்கும் காரில் பயணிப்பதை நடைமுறையாக்கினார்.

இதுதான் அந்த கார்..!- சீன அதிபர் பயன்படுத்தும் ஹன்கோவில் அப்படி என்ன விசேஷம்?

‘ஹாங்கி’ ரக கார்கள்!

சீன அதிபர்கள், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளின் பயன்பாட்டுக்காகவே ஹாங்கி ரக கார்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் அதிபர் பயணிக்கும் கார் சீனாவிலேயே அதிக விலை உயர்ந்த கார்களில் ஒன்று. எந்த ரக துப்பாக்கியின் குண்டும் துளைக்காத வண்ணம் இதன் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹாங்கி என்றால் சிவப்புக்கொடி என்று அர்த்தம்.

Hongqi
Hongqi

18 அடி நீளமும் 6.5 அகலமும் கொண்ட இந்த கார் 5 அடி உயரமும் கொண்டது. சுமார் 3,152 கிலோ எடை கொண்ட இந்த கார் 8 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கு சென்றாலும் அவருக்கு முன்னதாகவே இந்த கார் சென்றுவிடும். அதேபோன்று இந்த காரை, சீன ஓட்டுநர் மட்டுமே இயக்குவார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கார் கொள்கை!

சர்வதேச அரங்கில் சீனாவின் உற்பத்தித் தரத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக அந்நாட்டுத் தலைவர்கள் எங்கு சென்றாலும் தங்கள் சொந்த நாட்டு கார்கள், பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது. அதைப் பின்பற்றியே அனைத்துத் தலைவர்களும் நீண்ட தூரப் பயணங்களாக இருந்தாலும் ஹெலிகாப்டரை தவிர்த்து கார்களில் மட்டுமே பயணிக்கின்றனர்.

Hongqi
Hongqi

அதிபர் ஜின்பிங், 2012-ம் ஆண்டு முதல் எங்கு சென்றாலும் தன் காரைக் கொண்டு செல்கிறார். பிற நாடுகளின் கவனத்தை சீனா பக்கம் திருப்புவதற்காகவே இவர் அனைத்து இடங்களுக்கும் தன் பிரத்தியேக காரில் பயணிக்கிறாராம். “அமெரிக்க அதிபர்கள் வெளி நாடுகளுக்குச் சென்றால், அங்குள்ள பாதுகாப்புகளை நம்பாமல் தங்கள் நாட்டு கார்களிலேயே பயணிப்பர். ஆனால், சீன அதிபர் தன் காரை உடன் கொண்டுவருவதற்கு வர்த்தகம் மற்றும் கவன ஈர்ப்பு மட்டுமே முக்கிய நோக்கமாக உள்ளது” என பெய்ஜிங்கின் சீனா வெளியுறவு பல்கலைக்கழகப் பேராசிரியர் சு ஹாவோ (su Hao) தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு