Published:Updated:

`இந்தியத் தொழிலாளர்களைக் கவனிக்கவேண்டியது எங்கள் கடமை!’ -மோடிக்கு உறுதியளித்த சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி
சிங்கப்பூர் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி

கொரோனா ஊரடங்கால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாங்கள் கவனமாகப் பார்த்துக்கொள்வதாக அந்நாட்டுப் பிரதமர், இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து வெளிநாடுகளில் வேலைசெய்யும் புலம்பெயர்ந்த மக்கள், தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிவருகிறார்கள். இன்னும் பலர், சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கிய காரணத்தால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், வேலை செய்யும் நாடுகளிலேயே தங்கி இருக்கின்றனர். அவர்களின் நிலைகுறித்து உறவினர்களும் நண்பர்களும் கவலையுடன் இருப்பதைக் காணமுடிகிறது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களைத் தாங்கள் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாக, அந்நாட்டின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதியளித்துள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் வியாழன் அன்று தொலைபேசியில் கலந்துரையாடியதாகப் பதிவிட்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ, சிங்கப்பூரின் குடிமக்களை கவனித்துக்கொள்வதைப் போலவே இங்கு வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களான இந்தியர்களையும் கவனித்துக்கொள்வதாக பிரதமர் மோடிக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மக்கள் சிலர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்தியாவின் இந்த உதவிக்கு, சிங்கப்பூர் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

"சிங்கப்பூரில் வேலைசெய்யும் புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்கள், இங்கு வந்து பணிபுரிய பல தியாகங்களைச் செய்தவர்கள். அவர்கள் சிங்கப்பூருக்காக நிறைய பங்காற்றியவர்கள். எனவே, அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என்று பதிவிட்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக எங்களின் முயற்சிகள் பற்றி கேட்டறிந்ததோடு, அம்மக்கள் இதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றும் மோடி உறுதியளித்திருப்பதைப் பாராட்டுவதாகவும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமருடன் மோடி
சிங்கப்பூர் பிரதமருடன் மோடி

"கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதில் சிங்கப்பூர் பாதி தூரம் வந்திருக்கிறது. 1.3 மில்லியன் மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில், மார்ச் மாத இறுதியிலிருந்து இப்போது வரை ஊரடங்கை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்தியாவும் சிங்கப்பூரும் விரிவான பொருளாதார ஒப்பந்தங்களோடு நல்லுறவைப் பேணும் நாடுகள். இதுபோன்ற சவாலான நேரங்களிலும் வியாபார விநியோகச் சங்கிலிகள் அறுபடாமல் அத்தியாவசிய பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திவருகிறோம்" எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

நண்பர் கேட்ட உதவி... ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வென்டிலேட்டரை கொடுத்த குடும்பம்!

வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 11,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அத்தொழிலாளர்களுக்கு, தொடர்ந்து கொரோனா பரவிவருவதால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தியும், காய்ச்சல் அறிகுறிகளோடு இருக்கும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மருத்துவர்களின் எண்ணிக்கையும் அப்பகுதிகளில் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு